Posted by
அடியேன்S.வீரமனிகண்ணன்
at
3:28 AM
"காடேரி மலையேறி நதிகளாடி
காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே "
பொழிப்பு:
சித்தர்களாக, ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலரே எனவும் உரோமரிஷி ஞானம் சொல்கிறது.
ஆசான் உரோமரிஷி:
அட்டமாசித்தி பெற்ற பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடர் என்றும் குமாரர் என்றும் கூறுவர். உரோம ரிஷிக்கு உடல் முழுவதும் மயிர் முளைத்திருந்தபடியால் ‘உரோம முனி’ என்று காரணப் பெயர் பெற்றார்.
ஒரு பிரம்மா இறந்தால் இவரது மயிர் ஒன்று உதிரும். இவ்வாறு மூன்றரைக் கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவரது வாழ்நாள் முடிவுக்கு வரும். உரோம முனி இறந்தால் அஷ்டகோண முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்பர்.
காலாங்கியும் போகரும் சீனாவிலிருந்து தமிழகம் வந்து சித்தர்களானது போல ரோம ரிஷியும் ரோம புரியிலிருந்து வந்த சித்தராயிருக்கலாம். உரோம ரிஷி என்ற பெயர் ரோமாபுரியுடன் தொடர்புடையது என்பர் சிலர்.
தன்னைப்பற்றி:
"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "
பால் : யோக நிலையில் இருக்கும் போது நாம் சிரசில் ஒழுகும் அமிழ்தம் ; ஞால : பரிசுத்த மெய்ஞஞானம் ; பதம் : பாதம்.
தியானம்:
"செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே."
போலிக்குரு:
"மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே"
தவநிலை:
"சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே"
என உரோமரிஷி ஞானம் கூறுகிறது.
இவர் சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்திய சூத்திரம், வகார சூத்திரம், உரோமரிஷி முப்பு சூத்திரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
இவர் அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயத்திற்கும் சிலேடைகளுக்கும் பஞ்சமே இல்லை.
எண்சீர் விருத்தம்
மூலவட்ட மானகுரு பாதங் காப்பு;
முத்திக்கு வித்தான முதலே காப்பு;
மேலவட்ட மானபரப் பிரமங் காப்பு!
வேதாந்தங் கடந்துநின்ற மெய்யே காப்பு;
காலவட்டந் தங்கிமதி யமுதப் பாலைக்
கண்டுபசி யாற்றிமனக் கவடு நீக்கி
ஞாலவட்டஞ் சித்தாடும் பெரியோர் பாதம்
நம்பினதா லுரோம னென்பேர் நாயன் றானே. 1
கண்ணாடி சிலமூடித் தனுப்பி னாலே
கருவதனை யறியாமல் மாண்டு போனான்
விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம்
வெறுமண்ணாய்ப் போச்சுதவன் வித்தை யெல்லாம்;
ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால்
ஒருபோதுஞ் சித்தியில்லை! வாதந் தானும்
பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால்
பேரின்ப முத்திவழி பேசுவேனே. 2
பேசுவேன் இடைகலையே சந்த்ர காந்தம்;
பின்கலைதா னாதித்தனாதி யாச்சு;
நேசமதாய் நடுவிருந்த சுடர்தான் நீங்கி
நீங்காம லொன்றானா லதுதான் முத்தி;
காதலாய்ப் பார்த்தோர்க்கிங் கிதுதான் மோட்சம்;
காணாத பேர்க்கென்ன காம தேகஞ்
சோதனையாய் இடைகலையி லேற வாங்கிச்
சுழுமுனையில் கும்பித்துச் சொக்கு வீரே. 3
வாங்கியந்தப் பன்னிரண்டி னுள்ளே ரேசி
வன்னிநின்ற விடுமல்லோ சூர்யன் வாழ்க்கை?
ஓங்கியிந்த இரண்டிடமு மறிந்தோன் யோகி;
உற்றபர மடிதானே பதினாறாகும்;
தாங்கிநின்ற காலடிதான் பன்னி ரண்டு;
சார்வான பதினாறில் மௌ¢ள வாங்கி
ஏங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி யூதி
எழுந்தபுரி யட்டமடங் கிற்றுப் பாரே. 4
பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு
பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை;
நேரையா இரண்டிதழி னடுவே வைத்து
நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு;
கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால்
குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா!
ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன்
அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே. 5
அழைப்பதுவும் நல்லபிள்ளை யானால் நன்றே!
ஆகாத சீடர்களைச் சேர்த்தல் தோடம்;
பிழைப்பதற்கு வழிசொன்னால் பார்க்க மாட்டான்
பெண்டாட்டி மனங் குளிரப் பேசு மாடு;
உழைப்பதற்குச் செனனமெடுத் தானே யல்லால்
உதவிதனக் கெவ்வளவு முண்டோ வில்லை;
இளப்பமிவன் பேச்சையடிக் கடிதா னாகு
மேதுக்குச் சொல்லுகிறோ மினிமேல் தானே. 6
மேலென்ன இருக்கையிலும் நடக்கும் போதும்
வேறுரையால் சாரங்கள் விடாம லேற்று
நாலென்ன எட்டென்ன வெல்லா மொன்று
நலமான அட்டாங்க மப்பிய சித்துக்
காலென்னப் பிராணாய முன்னே செய்யில்
கணக்காகப் பூரகங்கும் பகமே நாலு
கோலென்ன ரேசகந்தா னொன்று மூன்று
குறையாமற் சரபீங் கூட்டித் தீரே. 7
கூட்டியே பழகினபின் சரபீ சத்தில்
குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம்
காட்டுவிக்கு மல்லால்விழிக் குறியி னாலே
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரு;
மூட்டுவிக்கு மாதார மாறுந் தானே
மூலவட்டக் கணபதிநான் முகத் தோன் மாயன்
தாட்டிகமா மணிப்பூரங் கையன் வட்டந்
தணலான ருத்திரனுந் தணலு மாமே. 8
தணலாகும் விசுத்தியறு கோண வட்டஞ்
சதாசிவனார் வட்டமல்லோ குருபீ டந்தான்;
மனையான பதினியிலே குறித்துப் பார்க்க
மத்யமுதல் கரிகொண்டு தூங்குந் தூங்கும்
கனலேறிக் கொண்டிருந்தா லெல்லா முண்டு;
காற்றைவெளி விட்டக்கால் கருமந் தீதான்
புனலூறும் வழிப்பாதை யிந்த மார்க்கம்
பொல்லாத துரோகிக்குப் பொய்யா மன்றே? 9
செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே. 10
மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே. 11
சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே. 12
ஓமென்ற கெட்டபுத்தி மாணா கேளே;
உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே;
ஆமென்ற இருபத்தோ ராயி ரத்தோ
டறுநூறு சுவாசமல்லோ ஒருநா ளைக்குப்
போமென்று போனதனால் நாள்கு றைந்து
போச்சுதுபோ காவிட்டால் போவ தில்லை;
தாமொன்று நினைக்கையிலே தெய்வ மொன்று
தானினைந்த தன்மையல்லோ விதிகள் தாமே? 13
Posted by
அடியேன்S.வீரமனிகண்ணன்
at
3:25 AM
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.” - (குறள் 942 - அதிகாரம் - 95)
உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்களுக்கும் எந்நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.
மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்யன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார். இது ஒரு மருத்துவப் பெட்டகம் நிறைந்த அதிகாரமாகும்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”
தான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதே வள்ளுவர் நமக்கு அருளிய இந்த திருக்குறளின் பொருள்.
“பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு
பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைபடும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.
பஞ்சுப் பொதியல்ல நம் வயிறு. வயிறு முட்ட சாப்பிடுவது நல்லதல்ல. அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர். மீதி கால் வயிறு காற்றோட்டத்திற்கு. இப்படி இருந்தால் மட்டுமே சிறப்பு.
மூன்று வேளை கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர். வயிறு செரிமானமாகாமல் இருப்பின் அடுத்த வேளை உணவை தவிர்த்து விடலாம். அதுவும் இரவு உணவு உண்பதில் எச்சரிக்கை வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு உணவில் மாமிசத்தைத் தவிர்ப்பது நல்லது.
உலக மக்கள் இருவகை எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
ஒன்று உயிர் வாழ்வதற்காக உண்பவர்கள். இரண்டாம் வகையினர் உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள். இந்த இரண்டாம் வகையினர் சாப்பாட்டுப் பிரியர்கள். இவர்கள் எப்போதும் எதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
தினமும் விருந்தும், கேளிக்கையுமாக உள்ளவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே குறுக்கிக் கொள்கிறார்கள்.
உணவு உண்பதில் ஒரு வரைமுறை வேண்டும். ஒரு கட்டுப்பாடு வேண்டும். கால இடைவெளி வேண்டும்.
“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
முப்போதும் உண்பான் ரோகி
எப்போதும் உண்பான் துரோகி”
இப்பாட்டிலிருந்து நாம் அறிவது என்ன-
எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே ஒருவன் இருப்பானேயானால் அவன் தனக்குத்தானே துரோகம் செய்துகொள்கிறான். எப்போதும் எதையாவது உண்டு கொண்டே இருந்தால் வயிறு ஒரு அரவை இயந்திரமாகிப் போகிறது. அதன்பின் அதற்கு ஓய்வில்லாமல் போகிறது. இது வயிற்றில் சுரக்க வேண்டிய சுரப்பி நீர்களை அதிகமாகவோ, குறைவாகவோ நேரம் கெட்ட நேரத்தில் சுரக்க வைக்கிறது.
இதனால் நமக்கு தேவையில்லாத அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது பல நோய்கள் உருவாக அடித்தளமாகிறது. அதனால் எவன் ஒருவன் தான் உண்ட உணவு செரிமானமாகிவிட்டது என்பதை உணர்ந்து சாப்பிடுகிறானோ அவனை எந்த நோயும் அணுகாது. மருந்துகளும் அவன் உடலுக்குத் தேவையில்லை. இதனை நம் திருவள்ளுவர் காலத்திலேயே எடுத்துத்துரைத்திருந்தாலும் நாம் இதுவரை உணரவில்லை. இனியாவது இதனை பின்பற்றுவோமாக.
Posted by
அடியேன்S.வீரமனிகண்ணன்
at
3:21 AM
"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.
வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.
Posted by
அடியேன்S.வீரமனிகண்ணன்
at
3:14 AM
சித்தர் என்ற வார்த்தை சித்தியில் இருந்து வந்தது. ஆன்மீகத்திலும், அறிவியல் சாதனைகளிலும் முழுமை பெற்ற நிலை தான் சித்தி. சித்தி பெற்றவர் சித்தர். “தத்துவங்கள் முப்பத்து ஆறும் தாண்டியவர்கள் சித்தர்” என்பார் திருமூலர்.
சித்தர்களை “அறிவன்” என்றும் “நிறைமொழி மாந்தர்” என்றும் குறிப்பிடும் தொல்காப்பியம்.
”அவிர்சடை முனிவர்”என்கிறது புறநானூறு.
அழியக்கூடிய உடம்பின் அசுத்தமான மூலகங்களை இரசவாதத்தின் மூலம் தூய்மைப்படுத்திக் கொண்டவர்கள் சித்தர்கள்.பொருளை சக்தியாக்குகிற வித்தை. அதன் மூலம் சுத்த தேகம் பெற்றனர். மீண்டும் அதனை மாற்றி பிரணவ தேகம் ஆக்கினர். அதனுடைய அடுத்த கட்டம் உருமாற்றும் ஞான வடிவு.
சித்தர்களின் தேகம் நுட்பத்திலும் அதி நுட்பம், கடினத்துவத்திலும் அப்படித்தான்.அவர்கள் தங்கள் மனம் போல் உருமாறுவர். நோய்களூக்கும் மரணத்திற்கும் அப்பாற்பட்டது அவர்களுடைய அமைப்பு.மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு.
சித்தர்களிடம் அனுபவம்,ஆற்றல் எல்லாவற்றுக்கும் மேலாக இறையருள் இருந்தது.உயர்ந்த சிந்தனை உடையவர்கள் அவர்கள்.எளிய வாழ்க்கை முறை அவர்களுடையது.அதனால்தான் அவர்களூடைய வாக்கு பலித்தது.காரிய சித்தியில் அவர்களால் பெரும் புகழ் பெற முடிந்தது.
சித்தர்களின் வலிமை தூய்மையின் வலிமை. அவர்களின் மன உறுதி ஒருமுகப்பட்டது. வார்த்தைகள் சக்தி மிக்கவை.சித்தர்கள் இன்றும் நம்மிடையே இல்லாமல் இல்லை.நாம்தான் அவர்களை புரிந்து கொள்ள தவறி விடுகிறோம். பார்த்தால பிச்சைகாரர்கள் போலவும் பித்தர்கள் போலவும் தோற்றமளித்தாலும்-அவர்கள் தேகத்தில் தனி தேஜஸ் கண்களில் சக்தி(காந்தம்) ஒளி தெரியும். தேகத்தில் நறுமண வாடை மிதக்கும்.அவர்களை உணர்ந்து கொள்ள இறையருள் வேண்டும். அவர்களை தரிசிக்கவும்,உணரவும் பாக்கியம் செய்திருந்தால் தான் அது வாய்க்கும்.
நன்றி: ஞானபூமி
Posted by
அடியேன்S.வீரமனிகண்ணன்
at
3:11 AM
ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)
" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்
அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.
Posted by
அடியேன்S.வீரமனிகண்ணன்
at
3:07 AM
ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே! மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார். அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார். சீடனே! உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.சுவாமி! தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே! இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார். சீடனே! ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும். மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார்
Posted by
அடியேன்S.வீரமனிகண்ணன்
at
2:59 AM
1. பதினெட்டாம்படிக் கருப்புகள்
2. நவகோடி சித்தர்கள்
3. நவநாத சித்தர்கள்
4. நாத சித்தர்கள்
5. நாதாந்த சித்தர்கள்
6. வேத சித்தர்கள்
7. வேதாந்த சித்தர்கள்
8. சித்த சித்தர்கள்
9. சித்தாந்த சித்தர்கள்
10. தவ சித்தர்கள்
11. வேள்விச் சித்தர்கள்
12. ஞான சித்தர்கள்
13. மறைச் சித்தர்கள்
14. முறைச் சித்தர்கள்
15. நெறிச் சித்தர்கள்
16. மந்திரச் சித்தர்கள்
17. எந்திரச் சித்தர்கள்
18. மந்தரச் சித்தர்கள்
19. மாந்தரச் சித்தர்கள்
20. மாந்தரீகச் சித்தர்கள்
21. தந்தரச் சித்தர்கள்
22. தாந்தரச் சித்தர்கள்
23. தாந்தரீகச் சித்தர்கள்
24. நான்மறைச் சித்தர்கள்
25. நான்முறைச் சித்தர்கள்
26. நானெறிச் சித்தர்கள்
27. நான்வேதச் சித்தர்கள்
28. பத்த சித்தர்கள்
29. பத்தாந்த சித்தர்கள்
30. போத்த சித்தர்கள்
31. போத்தாந்த சித்தர்கள்
32. புத்த சித்தர்கள்
33. புத்தாந்த சித்தர்கள்
34. முத்த சித்தர்கள்
35. முத்தாந்த சித்தர்கள்
36. சீவன்முத்த சித்தர்கள்
37. சீவன்முத்தாந்த சித்தர்கள்
38. அருவ சித்தர்கள்
39. அருவுருவ சித்தர்கள்
40. உருவ சித்தர்கள்
பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர்.
“எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)”
“எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்”
“ஏதமில் நிறை சித்தர் எழுவர்”
“விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்”
என்று பல குறிப்புகள் உள்ளன.