best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, November 5, 2010

இடைக்காட்டுச் சித்தர் பாடல்

     

     

     

     

    இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்

     

    காப்பு கலிவிருத்தம் ஆதி யந்தமில் லாதவ னாதியைத் தீது றும்பவம் தீப்படு பஞ்சுபோல் மோது றும்படி முப்பொறி யொத்துறக் காதலாகக் கருத்திற் கருதுவோம். தாண்டவராயக் கோனார் கூற்று கண்ணிகள்
    எல்லா உலகமும் எல்லா உயிர்களும்
    எல்லா பொருள்களும் எண்ணரிய
    வல்லாளன் ஆதிபரம சிவனது
    சொல்லால் ஆகுமே கோனாரே.
    1
    வானியல் போல் வயங்கும் பிரமமே
    சூனியம் என்றறிந்து ஏத்தாக்கால்
    ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்று
    ஓர்ந்து கொள்ளுவீர் நீர் கோனாரே.
    2
    முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
    முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்
    சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும்
    சேரா வாகுமே கோனாரே.
    3
    தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே
    சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால்
    எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு
    இல்லையென்று எண்ணுவீர் கோனாரே.
    4
    ஆரண மூலத்தை அன்புட னேபர
    மானந்தக் கோலத்தைப் பண்புடனே
    பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
    போதத்தைச் சார்ந்திரும் கோனாரே.
    5
    காலா காலங் கடந்திடும் சோதியைக்
    கற்பனை கடந்த அற்புதத்தை
    நூலார் பெரியவர் சொன்னநுண் பொருளை
    நோக்கத்திற் காண்பது கோனாரே.
    6
    சொல்லருஞ் சகள நிட்களம் ஆனதைச்
    சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
    அல்லும் பகலும் அகத்தில் இருந்திடில்
    அந்தகன் கிட்டுமோ கோனாரே.
    7
    சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடும்
    தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
    நாறி இடப்பாகன்தாள் நெஞ்சிற் போற்றியே
    நற்பதி சேர்ந்திடும் கோனாரே.
    8
    மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
    முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
    செம்மறி யோட்டிய வேலை யமயத்தும்
    சிந்தையில் வைப்பீரே கோனாரே.
    9
    பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
    பற்றற்று நின்றதைப் பற்றி அன்பாய்
    நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே
    நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே.
    10
    நாராயணக் கோனார் கூற்று (தரவு கொச்சகம்)
    சீரார் சிவகொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
    பாராதி வான்பொருளைப்பஞ்ச உரு ஆனஒன்றைப்
    பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை
    நேராக எந்நாளும் நெஞ்சுஇருத்தி வாழ்வேனே.
    11
    கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
    பெண்ணுருவப் பாதியினைப் பேசரிய முப்பொருளை
    விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்
    தண்ணளியை உள்ளில் வைத்துசாரூபஞ் சாருவனே.
    12
    கண்ணிகள்

    மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முத்தி

    வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே
    13
    சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
    சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே
    14
    ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த
    அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே
    15
    ஓசையுள் அடங்குமுன்னம் தாண்டவக்கோனே - மூல
    ஓங்காரங் கண்டறிநீ தாண்டவக்கோனே
    16
    மூலப் பகுதியறத் தாண்டவக்கோனே - உள்ளம்
    முளைத்தவேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே
    17
    சாலக் கடத்தியல்பு தாண்டவக்கோனே - மலச்
    சாலென்றே தேர்ந்தறிநீ தாண்டவக்கோனே
    18
    பற்றே பிறப்புண்டார்க்கும் தாண்டவக்கோனே - அதைப்
    பற்றாது அறுத்துவிடு தாண்டவக்கோனே
    19
    சற்றே பிரமத்திச்சை தாண்டவக்கோனே - உன்னுள்
    சலியாமல் வைக்கவேண்டும் தாண்டவக்கோனே
    20
    அவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே - பத்தி
    அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே
    21
    செவிதனிற் கேளாத மறை தாண்டவக்கோனே - குரு
    செப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே
    22

    கட்டளைக் கலித்துறை

    மாடும் மனைகளும் மக்களுஞ் சுற்றமும் வான்பொருளும்

    வீடும் மணிகளும் வெண்பொன்னுஞ் செம்பொன்னுஞ் வெண்கலமும்
    காடும் கரைகளும் கல்லாம் பணியுங் கரிபரியும்
    தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே.
    23

    நேரிசை வெண்பா

    போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்

    மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் - தாகம்போம்
    வேதமுதல் ஆகமங்கள் மேலானதென்று பல்கால்
    ஓதுபிர மரத்துஉற்றக் கால்.
    24

    தாண்டவராயக்கோனார் கூற்று

    தாந் திமித்திமி தந்தக்கோ னாரே

    தீந் திமித்திமி திந்தக்கோ னாரே
    ஆனந்தக் கோனாரே - அருள்
    ஆனந்தக் கோனாரே.

    ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்

    அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
    மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
    மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் (தாந்)
    25
    அந்தக் கரணம் எனச்சொன்னால் ஆட்டையும்
    அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்
    சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
    சாவாது இருந்திடக் கோட்டையுங் கட்டினேன் (தாந்)
    26
    மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் ஐந்தாட்டை
    வீறுஞ் சுவையொளி ஊறோசை யாம்காட்டை
    எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
    ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (தாந்)
    27
    பற்றிரண் டும்அறப் பண்புற்றேன் நண்புற்றேன்
    பாலையும் உட்கொண்டேன் மேலையாம் கண்கண்டேன்
    சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
    சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன் (தாந்)
    28
    அண்ணாக்கை யூடே யடைத்தே அமுதுண்ணேன்
    அந்தரத் தரத்தை அப்பொழு தேயெண்ணேன்
    விண்ணாளும் மொழியை மேவிப்பூசை பண்ணேன்
    மெய்ஞ்ஞானம் ஒன்றுஅன்றி வேறேஒன்றை நண்ணேன் (தாந்)
    29
    மண்ணாதி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே
    மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே
    விண்ணாளி மொழியை மெய்யினுள் கொண்டேனே
    மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே (தாந்)
    30
    வாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
    மாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே
    நோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே
    நுவலுமற்ற ஐந்தியோக நோக்கம் பரிந்தேனே (தாந்)
    31
    ஆறாதாரத் தெய் வங்களை நாடு
    அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
    கூறான வட்ட ஆனந்தத்திற் கூடு
    கோசமைந் துங்கண்டு குன்றேறி ஆடு (தாந்)
    32
    நாராயணக் கோனார் கூற்று

    ஆதிபகவனையே ......பசுவே!

    அன்பாய் நினைப்பாயேல்
    சோதி பரகதிதான் ......பசுவே!
    சொந்தமது ஆகாதோ?
    33
    எங்கும் நிறைபொருளைப் ......பசுவே!
    எண்ணிப் பணிவாயேல்
    தங்கும் பரகதியில் ......பசுவே!
    சந்ததம் சாருவையே.
    34
    அல்லும் பகலும்நிதம் ......பசுவே!
    ஆதி பதந்தேடில்
    புல்லும் மோட்சநிலை ......பசுவே!
    பூரணங் காண்பாயே.
    35
    ஒன்றைப் பிடித்தோர்க்கே ......பசுவே!
    உண்மை வசப்படுமே
    நின்ற நிலைதனிலே ......பசுவே!
    நேர்மை அரிவாயே.
    36
    எல்லாம் இருந்தாலும் ......பசுவே!
    ஈசர் அருள் இல்லையேல்
    இல்லாத் தன்மையென்றே ......பசுவே!
    எண்ணிப் பணிவாயே.
    37
    தேவன் உதவியின்றிப் ......பசுவே!
    தேர்ந்திடில் வேறொன்றுமில்லை
    ஆவிக்கும் ஆவியதாம் ......பசுவே!
    அத்தன் திருவடியே.
    38
    தாயினும் அன்பன்அன்றோ ......பசுவே!
    சத்திக்குள் ளானவன்தான்?
    நேயம் உடையவர்பால் ......பசுவே!
    நீங்காது இருப்பானே.
    39
    முத்திக்கு வித்தானோன் ......பசுவே!
    மூலப் பொருளானோன்
    சத்திக்கு உறவானோன் ......பசுவே!
    தன்னைத் துதிப்பாயே.
    40
    ஐயன் திருபாதம் ......பசுவே!
    அன்புற்று நீபணிந்தால்
    வெய்ய வினைகளெல்லாம் ......பசுவே!
    விட்டோ டும் கண்டாயே.
    41
    சந்திர சேகரன்தாள் ......பசுவே!
    தாழ்ந்து பணிவாயேல்
    இந்திரன் மான்முதலோர் ......பசுவே!
    ஏவல் புரிவாரே.
    42
    கட்புலன் காணஒண்ணாப் ......பசுவே!
    கர்த்தன் அடியிணையை
    உட்புலன் கொண்டேத்திப் ......பசுவே!
    உன்னதம் எய்வாயே.
    43
    சுட்டியும் காணஒண்ணாப் ......பசுவே!
    சூனிய மானவத்தை
    ஒட்டிப் பிடிப்பாயேல் ......பசுவே!
    உன்னை நிகர்ப்பவர் யார்?
    44
    தன்மனந் தன்னாலே ......பசுவே!
    தானுவைச் சாராதார்
    வன்மரம் ஒப்பாகப் ......பசுவே!
    வையத்துள் உரைவாரே
    45
    சொல்லெனும் நற்பொருளாம் ......பசுவே!
    சோதியைப் போற்றாக்கால்
    இல்லென்று முத்திநிலை ......பசுவே!
    எப்பொ ருளுஞ்சொல்லுமே.
    46

    பலரோடு கிளத்தல்
    (குறள் வெண்செந்துறை)

    கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை

    விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.
    47
    மனம்வாக்குக் காயம்எனும் வாய்த்தபொறிக்கு எட்டாத
    தினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே.
    48
    காலமூன் றுங்கடந்த கதிரொளியை உள்ளத்தால்
    சாலமின்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே.
    49
    பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுபோலும்
    நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே.
    50
    மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
    தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே.
    51
    தூய மறைப்பொருளைச் சுகவாரி நல்அமிழ்தை
    நேய முடனாளும்நிலை பெறவே போற்றீரே.
    52
    சராசரத் தைத்தந்த தனிவான மூலம்என்னும்
    பராபரத்தைப் பற்றப் பலமறவே போற்றீரே.
    53
    மண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்
    கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே.
    54
    பொய்ப்பொருளை விட்டுப் புலமறிய ஒண்ணாத
    மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே.
    55
    எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை
    உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே.
    56

    நெஞ்சொடு கிளத்தல்

    பூமியெல்லாம்ஓர் குடைக்கீழ்ப் பொருந்த அரசாளுதற்குக்

    காமியம்வைத்தால் உனக்குக் கதியுளதோ கல்மனமே!
    57
    பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால்
    விண்ணாசை வைக்க விதியில்லையே கல்மனமே!
    58
    மேயும் பொறிகடமை மேலிடவொட் டார்க்குவினை
    தேயும்என்றே நல்வழியில் சொல்லுகநீ கல்மனமே!
    59
    பொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்
    மன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே!
    60
    பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கம் கொள்ளாமல்
    மெய்யான ஞானக்கல்வியினை விரும்புவாய் கல்மனமே!
    61
    பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
    நாய்நரிகள் போலலைந்தால் நன்மையுண்டோ கல்மனமே!
    62
    இரும்பைஇழுக் குங்காந்தத்து இயற்கைபோல் பல்பொருளை
    விரும்பினதால் அவைநிலையோ? விளம்புவாய் கல்மனமே!
    63
    கற்பநிலை யால் அலவோகற்பக லங்கடத்தல்?
    சொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண் கல்மனமே!
    64
    தேகம் இழப்பதற்குச் செபஞ்செய்தேன் தவஞ்செய்தேன்?
    யோகமட்டுஞ் செய்தால்என்? யோசிப்பாய் கல்மனமே!
    65
    பேசாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வியன்றோ
    வாகான மெய்க்கல்வி? வகுத்தறிநீ கல்மனமே!
    66

    அறிவோடு கிளத்தல்

    எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த

    வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே.
    67
    கட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும்
    உட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே.
    68
    விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்
    செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்தறிநீ புல்லறிவே.
    69
    மெய்யில்ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்
    பொய்யில்ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே.
    70
    ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
    கூத்துபுரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே.
    71
    இருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை
    அருள்துறையில் நிறுத்தி விளக்காகுநீ புல்லறிவே.
    72
    நல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல்
    கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே.
    73
    கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல்
    மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே.
    74
    வாசிக்கு மேலான வாள்கதியுன் னுள்ளிருக்க
    யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே.
    75
    அன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
    முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே.
    76

    சித்தத்தொடு கிளத்தல்

    கண்ணிகள்


    அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீபற - பர

    மானந்தம் கண்டோ ம் என்று தும்பீபற!
    மெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற - பர
    மேலேறிக் கொண்டோ ம் என்று தும்பீபற!
    77
    அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
    ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீபற!
    தொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற - பரஞ்
    சோதியைக் கண்டோ ம் எனத் தும்பீபற!
    78
    ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
    அறிவே பொருளாம் எனத் தும்பீபற!
    செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
    தெய்வீகம் கண்டோ ம் என்றே தும்பீபற!
    79
    மூவாசை விட்டோ மென்றே தும்பீபற - பர
    முத்தி நிலை சித்தியென்றே தும்பீபற!
    தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்தச்
    செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற!
    80
    பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
    பற்றற்றோம் என்றேநீ தும்பீபற!
    வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை
    வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற!
    81
    எப்பொருளும் கனவென்றே தும்பீபற - உல
    கெல்லாம் அழியுமென்றே தும்பீபற!
    அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்
    அழிவில்லாதது ஆதியென்றே தும்பீபற!
    82

    குயிலொடு கிளத்தல்

    கரணங்கள் ஒருநான்கும் அடங்கினவே - கெட்ட

    காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே;
    சரணங்கள் ஒருநான்கும் கண்டனமென்றே - நிறை
    சந்தோட மாகவே கூவு குயிலே!
    83
    உலகம் ஒக்காளமாம் என்றோதுகுயிலே - எங்கள்
    உத்தமனைக் காண்பதரிதென்று ஓதுகுயிலே!
    பலமதம் பொய்மையே என்றோதுகுயிலே - எழு
    பவம் அகன்றிட்டோ ம் நாமென்று ஓதுகுயிலே!
    84
    சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லாத்
    தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார்குயிலே!
    மாதவங்கள் போலும்பலன் வாயாக்குயிலே - மூல
    மந்திரங்கள் தான்மகிமை வாய்க்கும்குயிலே.
    85
    எட்டிரண்டு அறிந்தோர்க்குஇடர் இல்லைகுயிலே - மனம்
    ஏகாமல் நிற்கில்கதி எய்துங்குயிலே!
    நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளு குயிலே - ஆதி
    நாயகனை நினைவில் வைத்தோதுகுயிலே.
    86

    மயிலொடு கிளத்தல்

    ஆடுமயிலே நடமாடு மயிலே எங்கள்

    ஆதியணி சேடனைக் கண்டாடுமயிலே!
    கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றும்
    குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே.
    87
    இல்லறமே அல்லலாமென்று ஆடுமயிலே - பத்தி
    இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே!
    நல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த
    நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே.
    88
    காற்றூனைப் போல்மனத்தைக் காட்டுமயிலே - வரும்
    காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே!
    பாற்றூடு உருவவே பாயுமயிலே - அகப்
    பற்றுச் சற்றுமில்லாமற் பண்ணுமயிலே.
    89

    அன்னத்தொடு கிளத்தல்

    சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தின் நிழல்மறையும்

    மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கும் மடவனமே.
    90
    காற்றின் மரமுறியும் காட்சியைப்போல் நல்லறிவு
    தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மடவனமே.
    91
    அக்கினியாற் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்
    பக்குவநல் அறிவாலே பாவம்போம் மடவனமே.
    92
    குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல்போல்
    வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே.
    93
    அப்புடனே உப்புச் சேர்ந்தளவுசரி யானதுபோல்
    ஒப்புறவே பிரமமுடன் ஒன்றிநில்லு மடவனமே.
    94
    காய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை
    வாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே.
    95

    புல்லாங்குழலூதல்

    தொல்லைப் பிறவி தொலைத்தக்கார்க்கு முத்திதான்

    இல்லையென்று ஊதுகுழல் - கோனே
    இல்லையென்று ஊதுகுழல்.
    96
    இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்று
    அந்தமாய் ஊதுகுழல் - கோனே
    அந்தமாய் ஊதுகுழல்.
    97
    மோன நிலையில் முத்திஉண்டாம் என்றே
    கானமாய் ஊதுகுழல் - கோனே
    கானமாய் ஊதுகுழல்.
    98
    நாய்போற் பொறிகளை நானாவி தம்விட்டோ ர்
    பேயரென்று ஊதுகுழல் - கோனே
    பேயரென்று ஊதுகுழல்.
    99
    ஓடித் திரிவோர்க்கு உணர்வுகிட் டும்படி
    சாடியே ஊதுகுழல் - கோனே
    சாடியே ஊதுகுழல்.
    100
    ஆட்டுக் கூட்டங்களை அண்டும் புலிகளை
    ஓட்டியே ஊதுகுழல் - கோனே
    ஓட்டியே ஊதுகுழல்.
    101
    மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களைக்
    கட்டிவைத்து ஊதுகுழல் - கோனே
    கட்டிவைத்து ஊதுகுழல்.
    102
    கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்
    கிட்டாவென்று ஊதுகுழல் - கோனே
    கிட்டாவென்று ஊதுகுழல்.
    103
    பெட்டியிற் பாம்பெனப் பேய்மனமே அடங்க
    ஒட்டியே ஊதுகுழல் - கோனே
    ஒட்டியே ஊதுகுழல்.
    104
    எனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே
    தனதாக ஊதுகுழல் - கோனே
    தனதாக ஊதுகுழல்.
    105
    அற்ற விடமொன்றே அற்றதோடு உற்றதைக்
    கற்றதென்று ஊதுகுழல் - கோனே
    கற்றதென்று ஊதுகுழல்.
    106

    பால் கறத்தல்

    சாவாது இருந்திட பால்கற - சிரம்

    தன்னில் இருந்திடும் பால்கற
    வேவாது இருந்திட பால்கற - வெறு
    வெட்ட வெளிக்குள்ளே பால்கற.
    107
    தோயாது இருந்திடும் பால்கற
    தொல்லை வினையறப் பால்கற
    வாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்
    வயிறார உண்டிடப் பால்கற.
    108
    நாறா திருந்திடும் பால்கற
    நாளும் இருந்திடப் பால்கற
    மாறாது ஒழுகிடும் பால்கற - தலை
    மண்டையில் வளரும் பால்கற.
    109
    உலகம் வெறுத்திடும் பால்கற - மிக
    ஒக்காளம் ஆகிய பால்கற
    கலசத்தினுள் விழப் பால்கற - நிறை
    கண்டத்தின் உள்விழப் பால்கற.
    110
    ஏப்பம் விடாமலே பால்கற - வரும்
    ஏமன் விலக்கவே பால்கற
    தீப்பொறி ஓய்ந்திடப் பால்கற - பர
    சிவத்துடன் சாரவே பால்கற.
    111
    அண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்
    அண்டத்தில் ஊறிடும் பால்கற
    விண்ணாட்டில் இல்லாத பால்கற - தொல்லை
    வேதனை கெடவே பால்கற.
    112

    கிடை கட்டுதல்

    இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே - உன்

    அடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே.
    113
    சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும்
    தவமாகக் கழிப்பவரே சன்னமதில் வருவார்.
    114
    அகங்கார மாடுகள்மூன்று அகற்றிவிடு கோனே - நாளும்
    அவத்தையெனும் மாடதைநீ அடக்கிவிடு கோனே.
    115
    ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டு கோனே! - உன்
    உறையுமிரு மலந்தனையும் ஓட்டிக் கட்டுக் கோனே.
    116
    மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுக் கோனே - மிக
    முக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே.
    117
    இந்திரியத் திரயங்களை இறுக்கிவிடு கோனே - என்றும்
    இல்லை என்றேமரணக்குழல் எடுத்து ஊதுகோனே.
    118
    உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே! - உனக்
    குள்ளிருக்கும் கள்ளமெல்லாம் ஓடிப்போம் கோனே.
    119
    முக்காய மாடுகளை முன்னங்கட்டுக் கோனே - இனி
    மோசமில்லை நாசமில்லை முத்திஉண்டாங் கோனே.
    120
    கன்மமல மாடுகளைக் கடைக்கட்டுக் கோனே - மற்றக்
    கன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டுக் கோனே.
    121
    காரணக்கோ மூன்றையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல
    கைவசமாய் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே.
    122
    பிரம்மாந்திரத்திற்பே ரொளிகாண் எங்கள்கோனே - முத்தி
    பேசாதிருந்து பெருநிட்டைசார் எங்கள் கோனே.
    123
    சிரமதிற் கமலச் சேவைதெரிந் தெங்கள்கோனே - வாய்
    சித்திக்குந் தந்திரம் சித்தத்தறியெங்கள் கோனே.
    124
    விண்நாடி வத்துவை மெய்யறிவிற் காணுங்கோனே - என்றும்
    மெய்யே மெய்யில்கொண்டு மெய்யறிவில் செல்லுங்கோனே.
    125
    கண்ணாடியின் உள்ளே கண்டுபார்த்துக் கொள்ளுகோனே - ஞானக்
    கண்ணன்றிக் கண்ணடிகாண ஒண்ணாதெங்கள் கோனே.
    126
    சூனியமானத்தைச் சுட்டுவார் எங்குண்டு கோனே - புத்தி
    சூக்குமமேயதைச் சுட்டுமென்று எண்ணங்கொள் கோனே.
    127
    நித்தியமானது நேர்படி லேநிலை கோனே! - என்றும்
    நிற்குமென்றே கண்டு நிச்சயங்காணெங்கள் கோனே.
    128
    சத்தியும் பரமும் தன்னுட் கலந்தேகோனே - நிட்டை
    சாதிக்கில் இரண்டுந்தன்னுள்ளே காணலாங் கோனே.
    129
    கூகைபோல் இருந்து மோனத்தைச்சாதியெங் கோனே - பர
    மூலநிலைகண்டு மூட்டுப் பிறப்பறு கோனே.
    130
    -------------------------------------------------- 2. வயங்கும் - விளங்கும் 7. சகளம் - உருவுள்ளது; நிட்களம் - உருவமில்லாதது 8. நாரி இடப்பாகன் - அர்த்தநாரீஸ்வரன் 9. முப்பாழ் - விந்து, மோகினி, மான் ஆகிய மூன்று மாயை 24. போக்கியம் - அனுபவம் 32. கோசம் - கருப்பை 38. அத்தன் - தந்தை 51. மூவர் முதல் - மும்மூர்த்திகளின் தலைவன் 52. சுகவாரி - இன்பக்கடல் 53. சராசரம் - உலகம்; பவம் - பிறப்பு 57. காமியம் - விருப்பம் 70. கால் - காற்று 80. மூவாசை - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை;
    தேவாசை - கடவுள் மீது கொள்ளும் ஆசை 82. அப்பு - நீர் 85. வாயா - வாய்க்காது 86. நட்டணை - நடிப்பு 114. தற்பரம் - பரம்பொருள் 129. நிட்டை - சிவயோகம்

Thursday, October 21, 2010


இடைக்காடர் என்னும் சித்தர், சிறந்த சிவபக்தர். சிவனின் அருளால் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறமை பெற்றிருந்தார். ஒருசமயம் எதிர்காலத்தில் மழை பொய்த்து, நாட்டில் வறட்சி உண்டாகும் என்பதைக் கணித்தார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவர், விஷயத்தை மக்களிடம் சொன்னார்.அதைக்கேட்டவர்கள் சிரித்தனர்.
""என்னது மழை பெய்யாமல் போய்விடுமா? வறட்சி தலைவிரித்து ஆடுமா? இந்தக் கதையை வேறெங்காவது போய் சொல்லுங்கள்,'' என அவரை ஏளனம் செய்தனர்.
""ஐயோ! மக்கள் என் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறார்களே... இவர்களை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றலாம் என நினைத்தால், இவர்கள் என்னை நம்பாமல் இருக்கும் போது என்ன செய்ய முடியும்? அவர்களின் விதி அவ்வளவு தான்,'' என்று நொந்து கொண்டார் இடைக்காடர். அவ்வேளையில் வறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்தார். தான் வளர்த்த ஆட்டுக்குட்டிகளுக்கு, எருக்கஞ்செடியை சாப்பிடப் பழக்கினார். மேலும், கேழ்வரகு தானியத்தை, மண்ணில் கலந்து சிறிய குடிசையையும் கட்டிக்கொண்டார். இடைக்காடரின் வித்தியாசமான இந்த செய்கையைக் கண்டு சிலர் கேலியும் செய்தனர். ஆனால், இடைக்காடர் சற்றும் சளைக்காமல் தன் பணியைச் செவ்வனே செய்தார்.

இடைக்காடர் சொன்னது போலவே, சில மாதங்களில் வறட்சி துவங்கியது. நெடுநாட்களாக மழை பெய்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. முதலில் இடைக்காடர் சொன்னதை சாதாரணமாக நினைத்த மக்கள், அவர் சொன்ன உண்மையை அப்போது புரிந்து கொண்டனர். ஊரே வானம் பார்த்த வறண்ட பூமியாக மாறிவிட்டது. பயிர் பச்சைகள் அழிந்தன. ஒரு சாரார் பட்டினியால் மடிந்தனர். இவ்வேளையில் இடைக்காடர் தன் ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை சாப்பிடக் கொடுத்தார். அதைச்சாப்பிட்ட ஆடுகள் அரிப்பு தாங்காமல், இடைக்காடர் கேழ்வரகைக் குழைத்துக் கட்டிய குடிசையில் உரசின. அப்போது, கேழ்வரகு கீழே சிந்தியது. அதைக் கொண்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டு பசியாறினார் .
இச்சமயத்தில், வானுலகில் சஞ்சாரம் செய்த கிரகங்கள், வறட்சியான இடத்தில் இடைக்காடர் கேப்பைக்கூழ் காய்ச்சுவதையும், ஆடுகள் சிரமமின்றி இருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டு அவரது குடிசைக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற இடைக்காடர், ""ஐந்தாறு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் பஞ்சம், இன்னும் தொடர்ந்தால் என்னாகும்? பூலோக வாழ்வே ஸ்தம்பித்துப் போகுமே! இருக்கிற மக்களையாவது காப்பாற்றியாக வேண்டுமே!'' என நினைத்தார். அவரது மூளை வேகமாக வேலை செய்தது. உடன் அவர், "கிரகங்களே! நீங்கள் இன்றிரவு என் குடிசையில் தங்க வேண்டும்,'' என வேண்டினார்.
கிரகங்களும் ஒப்புக்கொண்டன. இடைக்காடர் அவர்களுக்கு ஆட்டுப்பாலும், கேப்பைக் கூழும் தந்து உபசரித்தார். அவற்றைப் பருகிய கிரகங்கள், உண்ட மயக்கத்தில் படுத்துவிட்டனர். அவர்கள் அயர்ந்து தூங்கிய வேளையில், தன் சக்தியால் அவர்களை மழை பெய்வதற்கு எந்த கிரகநிலை இருந்தால் சரியாக இருக்குமோ, அதற்கேற்ப படுக்க வைத்து விட்டார். அவ்வளவு தான்! மழை கொட்டோ கொட்டென கொட்ட ஆரம்பித்து விட்டது. பூமி, வறட்சி நீங்கி பசுமையாக மாறியது. சிறிது நேரம் கழித்து எழுந்த கிரகங்கள், அனல் காற்றுக்கு பதிலாக குளிர்க்காற்று வீசுவதையும்,

பெருமழையால், தண்ணீர் பெருகி ஓடுவதையும் கண்டனர். தங்களை மாற்றி வைத்தது இடைக்காடராகத்தான் இருக்கும் என்றெண்ணியவர்கள் அவரைத் தேடினர். அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இவரை இப்போதைக்கு எழுப்ப முடியாது என உணர்ந்து கொண்ட நவக்கிரகங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டனர். சமயோசிதமாக செயல்பட்டு பஞ்சம் போக்கிய இடைக்காடரை வணங்கிய மக்கள், தங்கள் செய்கைக்கு மன்னிப்பு கேட்டனர்.

Sunday, October 17, 2010

 

 



அண்ணாக்கை யூடே யடைத்தே அமுதுண்ணேன்
அந்தரத் தரத்தை அப்பொழு தேயெண்ணேன்
விண்ணாளும் மொழியை மேவிப்பூசை பண்ணேன்
...மெய்ஞ்ஞானம் ஒன்றுஅன்றி வேறேஒன்றை நண்ணேன் (தாந்)




ஆழ்நிலைத் தியானத்தில், ஆயிரம் இதழ் தாமரைச் சக்கரக் கிளர்தலில் பீனியல் சுரப்பி (மாங்காய்)சுரக்கும் பால் ஆயுளை நீட்டிக்கும் அமிர்த‌மாகும்.
இச்சுர‌ப்பைத் தூண்டுவ‌து என்ப‌து உள்நாக்கை ம‌டித்து குண்ட‌லினி சக்தியால்
ந‌ம‌து உட‌லின் ப‌ஞ்ச‌பூத‌க் க...ூறுக‌ளான‌ ந‌ர‌ம்பு(ம‌ண்),சுக்கில‌ம்(நீர்),பைத்திய‌ம்(மூளையின் வெப்ப‌ம்), த‌ன‌ஞ்ச‌ய‌ன்(வாயு), நாடி (சுழுமுனை , புருட‌ன் முத‌லான‌ நாடிகள்) ஒத்த‌திர்வு செய்து செய்ய‌க் கூடிய‌ அரும்பெரும் முயற்சியாகும்.
இப்பயிற்சி மானுட‌ம் என்ற‌ கூற்றின் அடிப்ப‌டை அமைப்புக‌ளை எல்லாம் சித்த‌த்தால் க‌ட்டி ஆளும் ம‌க‌த்தான‌தும் மிக்க ஆப‌த்தான‌துமான‌ ஒன்று.

த‌க்க‌ த‌குதியில்லார் , முறையான‌ ஆசிரியர் இன்றி செய்த‌லினால் ஏற்ப‌டும் விளைவுக‌ள் மிக்க‌ தீமையை ப‌ய‌க்கும் என்ப‌து உள்ள‌ங்கை நெல்லிக்க‌னி.

அவ்வாறு செய்த‌லை அறிந்திருந்தாலும் அத‌ன் விளைவான‌ அமுத‌த்தை விரும்பேன். அவ்வ‌முத‌தை அருந்துவ‌தால் வ்ரும் வான‌வ‌ர் த‌ன்மையையும் விரும்பேன்.

ஆதார‌ ஒலிக‌ள் என்று க‌ண்டுகொண்ட‌வ‌ற்றை அடிப்ப‌டையாக‌க் கொண்டு அமைக்க‌ப் ப‌ட்ட‌ அமைக்க‌ப் ப‌ட்ட‌ வ‌ட‌மொழியினால் ம‌ந்திர‌ உச்சாட‌ன‌ங்க‌ள் செய்து அத‌னால் வ‌ரும் ப‌ய‌னையும் விரும்பேன்.

எல்லாவ‌ற்றிற்கும் அடிப்ப‌டையான மெய்யான‌ அறிவு ஒன்றே நிலையான‌து. அதைத் த‌விர‌ வேறு ஓன்றும் வேண்டேன்.

Saturday, October 16, 2010

இடைக்காட்டு சித்தர் பாடல்கள்

பற்றிரண் டும்அறப் பண்புற்றேன் நண்புற்றேன்
பாலையும் உட்கொண்டேன் மேலையாம் கண்கண்டேன்
சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
...சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன் (தாந்) 28

இடைக்காட்டு சித்தர் பாடல்கள்

மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவையொளி ஊறோசை யாம்காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
...ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (தாந்) 27
 

மெய்,வாய்,கண், மூக்கு, செவி என்னும் இந்து பொறிகளையும்;

சுவை, ஒளி, ஊறு , ஓசை , நாற்றம் என்னும் ஐம்புலன்கள்;

இவைகளை ஒட்டாமல்.. விலகிநின்றேன்...

இப்படி இந்த ஐம்புலன்கல்லையும் ஐம்பொறிகளையும் மேல் செல்லாது அடக்கி உள்ளுக்கு இழுத்து அடக்கும் போது இற...ைவனின் ஏக வெளி யோகா வெளியில்...இருகிறேன்..

இடைக்காட்டுசித்தர் பாடல்கள்

இடைக்காட்டுசித்தர்


அந்தக் கரணம் எனச்சொன்னால் ஆட்டையும்
அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்
சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
...சாவாது இருந்திடக் கோட்டையுங் கட்டினேன் (தாந்)26
 

அந்தக்கரணங்களாய் உள்ள மனோ புத்தி அகங்கார சித்தம்..ஆன்மா? என்றால் அது இல்லை என்றும், மனம் ஒரு பகுதியை மட்டும் காண முடிவு செய்தால், அடுத்த பகுதியைக் காண மறுத்தால், மறுப்பால் அஞ்ஞானம் எழுகிறது என்றும் இவைகளை ஒழிக்க சந்தக் கவிதைகள் இயற்றி தவம் என்னும் வாளினால் அழித்து சாவாது இருக்க கோட்டை (சமாதி) காட்டினேன்.

இடைக்காட்டு சித்தர் பாடல்கள்

ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன்
...
தாந் திமித்திமி தந்தக்கோ னாரே
தீந் திமித்திமி திந்தக்கோ னாரே
ஆனந்தக் கோனாரே - அருள்
ஆனந்தக் கோனாரே

Tuesday, September 28, 2010

இடைக்காட்டு சித்தர்

அது என்ன எட்டிரண்டு....?



யோக ஞானம் பயில்வோர் ஒவ்வொருவரும் அறிந்து தெளிய வேண்டிய தத்துவம்தான் இந்த எட்டிரண்டு. ஆதி முதல் அந்தம் வரை அனைத்துக்குமே ஆதாரம் இந்த எட்டிரண்டு தத்துவம்தான். அண்ட சராசரங்கள் முழுதும் நீக்கமற நிறைந்திருப்பது இது ஒன்றுதான். இதன் மகத்துவம் உணர்ந்து தெளிந்தவர்களுக்கே சித்தரகசியம் சித்திக்கும்.


எட்டிரண்டின் பெருமையினை அநேகமாக எல்லா சித்தர்களும் உபதேசித்திருக்கின்றனர்.


"எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை"


என்கிறார் இடைக்காட்டு சித்தர்.

;;

TIME