best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Tuesday, November 30, 2010

யோக சித்தி ரகசியங்கள்




ஞான யோகம், இராஜ யோகம், சன்மார்க்க யோகம் 

1. உயிர் வர்க்க சன்மார்க்க நெறி
2. யோக ஞான மார்க்கங்களுக்கு அழைத்துச் செல்லும் கிரக அமைப்புகள்
3. உண்மையான குருமார்கள் நிலை
4. தேகதத்துவங்கள் - ஸ்தூல பூதங்கள்
5. உள்கருவிகளில் பஞ்சபூதங்கள்
6. காலாகில வாசி
7. பஞ்சாக்கினி விபரம்
8. யோகிகளின் பார்வையால் ஸ்பரிசத்தால் சப்தத்தால் நோய் தீர்த்தல்
9. பஞ்சாட்சர மந்திரங்கள்
10. அஷ்டாங்க விவரம்
11. நித்திரை செய்யும் முறை
12. சுத்தாரம்மம்
13. சித்திகளடைய முக்கிய கவனிப்பு
14. சிவயோக சாரம்
15. இடகலை, பிங்கலை, சுழுமுனை தன்மைகள்
16. பூரக, ரேசக, கும்பக விபரம்
17. பிராணாயாம நிர்ணயம்
18. குண்டலினி ஸ்தான நிலை - அமிர்த்த நிலை ஸ்தானம்
19. குண்டலினி யோக கிரியைகள்
20. ஜப, நாத யோகம்
21. தாடன நௌமுகி கிரியைகள்
22. சாம்பவி முத்திரை விளக்கம்
23. உண்மை உபதேசம்
24. சொரூபதரிசனம், சூட்சும சரீரத்தை செயல்படுத்துதல்
25. சிதாகாச தரிசனம்
26. யோகநிஷ்டை செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள்
27. சாயா புருஷ தரிசனம்
28. ஆசனங்கள்
29. மானச தந்தி [Telepathy]
30. மூளையை வலுப்படுத்தும் பயிற்சி
31. தொலைவில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கிரியை
32. தண்ணீரில் சக்தியை ஏற்றுதல்
33. இராஜ யோகம் செய்யும் முறை [கேசரி-சாம்பவி முத்திரை-பிராணாயாமம்-குண்டலினி யோக முறை]





இந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல், என்று மூத்த சித்தர்கள் கூறினர். போகருக்கு மனம் கேட்கவில்லை. கூடாது. இந்த மக்கள் அழியக்கூடாது. உலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்டும்... போகரின் வேட்கை அதிகரித்தது. போகா! நீ தெய்வத்தின் கட்டளைகளுக்கு புறம்பாகச் செல்கிறாய். இது நல்லதல்ல. இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள். அதுதான் உனக்கு நல்லது, என்று சித்தர்கள் சொன்னதை அவர் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. கடும் தவம் செய்தேனும் அந்த மந்திரத்தைக் கற்றே தீருவேன், அல்லது இறையருளால் அதை பெற்றே தீருவேன் என்ற உறுதி எடுத்துக் கொண்டார். இந்த போகசித்தர் சீனாவில் பிறந்தவர். தமிழகம் இவரது முன்னோரின்  பூர்வீகம் என்றாலும், அவர்கள் பிழைப்புக்காக சீனா சென்று விட்டனர். இவரது பெற்றோர் சீனாவில் சலவைத்தொழில் செய்து வந் தனர். 

அந்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப இவருக்கு போ-யாங் என பெற்றவர்கள் பெயர் வைத்தனர். மற்றொரு கருத்தின்படி, போகர் தமிழகத் தில் தான் பிறந் தார் என்றும், இவரது பெற்றோர்  இவரது பிறப்புக்கு பிறகே சீனா சென்றனர் என்றும், அங்கே போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. பல்லாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் என்பதால் எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. அகஸ்தியர் பனிரெண்டாயிரம் என்ற நூலில் வரும் பாடலில், சித்தான சித்து முனி போகநாதன் கனமான சீனப்பதிக்கு உகந்த பாலன் என சொல்லப்பட்டுள்ளதில் இருந்து, இவரது சீனத்தொடர்பை தெரிந்து கொள்ள முடிகிறது. சீனாவில் குறிப்பிட்ட காலம் தங்கியிருந்த இவர், இவரது பெற்றோர் மறைவுக்கு பிறகு தாயகம் வந்தார். மேருமலை, இமயமலையில் தங்கியிருந்த சித்தர்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. இவரது முக்கிய நோக்கம் பாரதத்தின் மலைப்பகுதிகளில் மக்களின் கண்ணுக்கு  தெரியாமல் மறைந்து கிடக்கும் செல்வத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிப்பதும், நோய்கள் தாக்கியோரை மீண்டும் அவை தாக்காமல் இருக்க வழி செய்வதுமாகும்.


இமயமலையில் தவம் செய்த முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் அவர் தங்கம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். பொருள் என்பது தக்கவர்களிடம் இருக்க வேண்டும். முனிவர்களுக்கு அதிகப் பொருள் தேவையில்லை. பொருளை வெறுக்கும் அவர்கள், நிச்சயமாக உலக மக்களின் நன்மைக்கே அதைச் செலவிடுவார்கள் என்பதால் போகர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்.இமயமலையில் அவர் தங்கியிருந்த போது பல மாணவர்கள் அவரைச் சந்தித்தனர். அவரது திறமையை அறிந்த அந்த மாணவர்கள் போகரின் சீடர்கள் ஆயினர். அவர்களில் புலிப்பாணி, கருவூரார், சட்டைமுனி, இடைக்காடர் உள்ளிட்ட 63 பேர் இருந்தனர். மனிதர்களை ஒரே ஒரு ஆணவ குணம் இன்று வரை வாட்டி வதைக்கிறது. அதாவது, தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த போக்கை போகர் அறவே வெறுத்தார். தனக்கு தெரிந்த நல்ல சித்து வேலைகளை தன் சீடர்கள் 63 பேருக்கும் சொல்லிக் கொடுத்து, பாரததேசத்திலுள்ள மக்கள் அனைவரும் அதனால் பயன்படும் ஏற்பாட்டைச் செய்தார். வானில் பறப்பது, நீரில் மிதப்பது, காயகல்பம் எனப்படும் உடலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருந்துகளைத் தயாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சீடர்களுக்கு கற்றுத் தந்திருந்தார்.

அவர்களுக்கு தேர்வும் வைத்தார். தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றனர்.பின்னர், அந்த சீடர்கள் தேசத்தின் பல திசைகளுக்கும் சென்றனர். தங்கள் சித்துவேலைகளை மக்களிடம் கற்றுக் கொடுக்க முயன்றனர். அறியாமையில் தவித்த மக்களோ, அவற்றை அவர்களிடம் கற்றுக் கொள்ள  முன்வரவில்லை. இதையறிந்த போகர் வருத்தப் பட்டார்.இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம், அவர்கள் சித்து வித்தைகளை கற்று நன்மை பெற வேண்டும் என உறுதியெடுத்தார். இமயமலையில் பல மூத்த சித்தர்களையும் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்த போது, இந்தக் கதையின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள உரையாடல் சித்தர்களுக்கும், போகருக்கும் இடையே நிகழ்ந்தது. சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுத்தர  மூத்த சித்தர்கள் மறுத்துவிட்டதால், உலக மக்களின் சாவுப்பிணியை தீர்க்க முடியாமல் போனது குறித்து போகர் வருந்தினார். மக்களைக் காப்பாற்ற முடியாத நான்உலகில் வாழ்ந்து பயனில்லை. நான் சாகப்போகிறேன் எனச் சொல்லி தரையில் புரண்டு அழுதார்.மற்ற சித்தர்கள் அவரைத் தேற்றினர்.போகா, நீ எடுத்த முடிவு சரியல்ல. நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக, உயிரை விட்டால், உலகில் யாருமே மிஞ்சமாட்டார்கள். நினைப்பது எதுவும் நடப்பதில்லை. மரணம் என்பது உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் வகுத்த நியதி. இறைநியதியை மீறுவது நல்லதல்ல. மேலும், நீ அவரது கோபத்திற்கு ஆளாவாய். உன் தற் கொலை எண்ணத்தை மாற்றிக் கொள். நீ காயகல்பம் உள்ளிட்ட மருத்துவ முறைகளைக் கற்றவன். அதைக் கொண்டு, மக்களுக்கு தீர்க்காயுள் தர முயற்சிக்கலாமே தவிர, நிரந்தர வாழ்வு தரும் எண்ணத்தை விட்டு விடு. நடக்காததைப் பற்றி சிந்திக்காதவனே ஞானி, என்று அறிவுரை கூறினர்.போகர் அரை மனதுடன் அங்கிருந்து கிளம்பி மேருமலைக்குச் சென்றார். அங்கே காலங்கிசித்தரின் சமாதி இருந்தது. அதை வணங்கியபோது, அவர் முன்னால் பல சித்தர்கள் தோன்றினர்.போகரே! நாங்கள் காலங்கி சித்தரின் சீடர்கள். ராமன், பாண்டவர்கள், திருதராஷ்டிரன், அரிச்சந்திரன், ராவணன் போன்றவர்களெல்லாம் இப்போது நாங்கள் தங்கியிருக் கும் இடத்திற்கு வந்து, தாங்கள் படித்த வித்தைகளை சோதித்து பார்த்தனர். அந்தக்காலம் முதலே இங்கு தங்கியிருக்கிறோம். உனக்கு என்ன வேண்டும்? என்றனர்.
உலகத்தில் பிறந்த எவரும் இறக்காத சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதே தனது நோக்கம் என்பதை போகர் அவர்களிடம் பணிவுடனும், கருணை பொங்கவும் கேட்டார். அந்த சித்தர்கள் போகரிடம், மகனே! இதோ, அங்கே பார் என ஓரிடத்தைச்சுட்டிக்காட்டினர். போகர் வியந்தார். அங்கே ஏராளமான நவரத்தினங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. இன்னொரு இடத்தை அவருக்கு காட்டினர். அங்கே தங்கம் குவிந்து கிடந்தது. எங்கும் பிரகாச மயம்! போகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்நேரத்திலும் மக்களைப் பற்றிய சிந்தனையே அவர் உள்ளத்தில் எழுந்தது. சாதாரண மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? இது அத்தனையையும் வெட்டியெடுத்து, உலகின் முதல் பணக்காரன் என்ற அந்தஸ்தைப் பெற்று, பெருமையடிக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருப்பான். போகரோ, அந்த சித்தர்களிடம், சித்தர்களே! இது இங்கே வீணாகக் கிடக்கிறதே. உலக மக்கள் அனைவருக்கும் இதை அள்ளிக்கொடுத்தாலும் கூட, மிஞ்சும் போல தெரிகிறதே. எல்லோரும் வளமுடன் வாழ்வார்களே! இது இங்கிருந்தும் மக்களுக்கு கொடுக்காமல் வீணடிக்கிறீர்களே! என்றார். சித்தர்கள் வேதனையுடன் சிரித்தனர். போகா! எதற்காக இந்த மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நம்மைப் போன்ற ஆன்மிக சிந்தனையுள்ளவர்களை அவர்கள் மதிப்பதும் இல்லை; இறையருளை நாடுவதுமில்லை. நிஜமான இன்பத்தை பற்றி நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை. அந்த நன்றிகெட்ட ஜனங்களுக்கு இதெல்லாம் போய் சேர வேண்டும் என எண்ணுகிறாயே! அவர்கள் இந்த செல்வத்தை அனுபவிக்க தகுதியில்லாதவர்கள், என சொல்லிவிட்டு, போகரின் பதிலுக்கு காத்திராமல் மறைந்தனர்.ஐயையோ! இந்த சித்தர்கள் திடீரென மறைந்து விட்டார்களே! இந்த செல்வத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில்,  அவர்களை நிரந்தரமாக வாழ வழி செய்யும் மந்திரம் பற்றி பேச மறந்து விட்டேனே! இந்த செல்வம் தான் மனங்களை எப்படி மாற்றி விடுகிறது! கொண்ட கடமையையே மறக்கச் செய்து விடுகிறதே, என வருந்திய போகரை நோக்கி ஏதோ ஒரு ஒளி பாய்ந்தது. அது அவரது கண்களை கூசச் செய்தது.
போகர் தன் கைகளை மடக்கி, கண்களை மறைத்தபடியே, ஒளி வந்த திசையை நோக்கினார். ஆள் அளவு உயரமுள்ள ஒரு புற்றில் இருந்து அந்த ஒளி பாய்ந்து வந்தது. அந்த புற்றை நோக்கி நடந்தார் போகர். புற்றுக்குள்ளிருந்து மூச்சு வந்தது. இது பாம்புகளின் மூச்சு போல இல்லையே! யாரோ ஒருவர் புற்றுக்குள் அமர்ந்திருக்கிறார் போல் தெரிகிறதே, என கணித்த அவர், உள்ளிருப்பவர் மகா தபஸ்வியாகத்தான் இருக்க வேண்டும். இவர் மூலமாக சஞ்சீவினி மந்திரத்தை கற்று விடலாம் என்ற ஆர்வத்தில், அவர் வெளியே வரும் வரை காத்திருப்பது என முடிவு செய்து, உள்ளிருக்கும்  முனிவரை மனதில் எண்ணி தவம் செய்யத் தொடங்கி விட்டார்.இவரது தவத்தின் வெப்பம் உள்ளிருந்த முனிவரைத் தாக்கியது. அவர் புற்றில் இருந்து வெளியே வந்தார். அந்த முனிவர் கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும், எதிர்காலத்தில் நிகழப்போவதையும் அறிந்த மகாஞானி. அவர் தவமிருந்த போகரை எழுப்பி, போகரே! என ஆரம்பித்ததும்,  சுவாமி! என் பெயர்  தங்களுக்கு எப்படி தெரியும்? என வியப்புடன் கேட்டார். எல்லாம் அறிந்த அந்த சித்தர் சிரித்துக் கொண்டார். போகரே! தவ சித்தர்கள் அனைவருக்கும் ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பது கடினமல்ல, என்ற சித்தரிடம், சித்தரே! தாங்கள் எவ்வளவு காலமாக இங்கே தவம் செய்கிறீர்கள்? என்றார் போகர். இப்போது எந்த ஆண்டு நடக்கிறது? என சித்தர் கேட்கவே, சித்தரே! இது கலியுகம் துவங்கி சில ஆண்டுகள் ஆகிறது, என்றதும், ஆஹா...காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.

நான் துவாபராயுகத்தின் துவக்கத்தில் இருந்து இங்கே தவமிருக்கிறேன். ஒரு யுகமே முடிந்து விட்டதா? என்ற சித்தர், போகனே! உன் குறிக்கோளையும் நான் அறிவேன்.  முதலில், அதோ தெரிகிறதே! அந்த மரத்திலுள்ள பழத்தை சாப்பிட்டு பசியாறு. பிறகு பேசலாம், என்று சித்தர் சொன்னதும், போகர் அந்த மரத்தை நோக்கி நடந்தார். அதிலுள்ள கனியைப் பறித்து சாப்பிட்டதும், எங்கோ மிதப்பது போல் இருந்தது. தன்னை மறந்த நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். புற்றில் இருந்து வந்த சித்தர், அவரிடம் ஒரு மூலிகை பொம்மையைக் கொடுத்து, போகா! இந்த பதுமை உன் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும், என சொல்லிவிட்டு, மீண்டும் புற்றுக்குள் போய் விட்டார். போகர் அந்த பதுமையிடம், இறப்புக்குப் பின் உயிர் வாழும் வித்தை பற்றி கேட்டார். அந்தப் பொம்மையோ, பிறந்தது முதல் இறக்கும் வரை உள்ள விஷயங் களை பேசியதே அன்றி, அந்த வித்தையும், அதற்குரிய மூலிகைகளும் தனக்குத் தெரிந்தாலும், உலக நியதிப்படி அதைச் சொல்லித் தர முடியாது எனச் சொல்லி மறைந்து விட்டது.எவ்வளவு முயன்றாலும், இந்த ஒரு விஷயம் மட்டும் நடக்க மறுக்கிறதே என கலங்கிய போகசித்தர், தன் முயற்சியை விட்டாரில்லை. முயற்சி உடையவனுக்கு அவன் முயலுவது கிடைக்காமல் போனதில்லை. சித்தருக்கும் அந்த நல்ல நாள் வந்தது.அவர் ஒருமுறை, மேருமலை உச்சியில் ஏறினார். அந்த மலையில் சித்தர்கள் பலர் வசித்து, பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தியதன் விளைவாக தங்கப் பாறைகள் நிறைந்ததாக இருந்தது. ஓரிடத்தில், தங்கத்தின் ஒளி கண்ணைப் பறிக்கவே, அதன் பிரகாசம் தாங்க முடியாமல், போகர் தடுமாறி கீழே விழுந்தார். அவரை சில சித்தர்கள் தாங்கிப் பிடித்தனர்.
போகனே! நாங்கள் நான்கு யுகங்களாக இங்கே வசிப்பவர்கள். உலகை வாழ வைக்க வேண்டுமென்ற உன் விடாமுயற்சியைப் பாராட்டுகிறோம். வா எங்களுடன்!இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மூலிகை இந்த மலையிலுள்ள ஒரு குகைக்குள் இருக்கிறது. அதை உனக்கு காட்டுகிறோம். சஞ்சீவினி மந்திரத்தையும் போதிக்கிறோம், என்றதும், போகரின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. குகைக்குள் சென்றதும், பச்சை பசேலென பல மூலிகைச் செடிகள் காணப்பட்டன. அவற்றில் யாரும் கை வைக்காததாலும், தூசு பட வழியே இல்லாததாலும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தெய்வத்தன்மை வாய்ந்ததாலும் பளபளவென மின்னின. போகரை அழைத்துச் சென்ற மற்ற சித்தர்கள் அந்த மூலிகைகளின் தன்மை, அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றி  விளக்கமாக எடுத்துச்சொன்னார்கள். பிறந்த பலனை அடைந்த மகிழ்ச்சியில் போகரின் நெஞ்சு ஆனந்தத்தால் விம்மியது. உணர்ச்சிக்கடலாக மாறிப்போன அவர், தனக்கு தகவல் தந்த சித்தர்களின் பாதங்களில் பணிந்து வணங்கி, இனி, இவற்றைக் கொண்டு உலகில் இறப்பில்லாமல் செய்வேன் எனச் சொல்லி அவர்களிடம் விடை பெற்றார். மனிதனுக்கு கிடைக்காத ஒன்று கிடைத்து விட்டால், அவன் ஆனந்தக் கூத்தாடுகிறான். ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். போகரைப் போன்ற சித்தர்கள் கூட, இதற்கு விதிவிலக்கல்ல போலும்! மிதமிஞ்சிய கவலையும் ஆபத்து, மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் ஆபத்தான விஷயம் தான்! எதற்கும் ஒரு அளவு வேண்டும். போகர், தனக்கு கிடைக்காத ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் குகையை விட்டு வெளியே வந்து துள்ளித் துள்ளி குதித்தார். ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்! அவர் ஆடிய ஆட்டத்தில் பூமியே அதிர்ந்தது. அப்போது, அப்பகுதியில் தவமிருந்த கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் பலர் அவர் முன்பு தோன்றினர். போகா! என்ன இது! மகிழ்ச்சியின் போது தான் மனிதன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். உன் நடனத்தால், கலையாத எங்கள் தவத்தைக் கலைத்து விட்டாய். பல யுகங்களாக நாங்கள் செய்த தவம் வீணாகிப் போய் விட்டது. இதற்கு கடும் தண்டனையை உனக்கு அளிக்கப் போகிறோம். ஒருவர் செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும். எங்கள் நீண்ட கால தவம் எப்படி பயனற்றுப் போனதோ, அதே போல நீ இங்கே பார்த்த சஞ்சீவினி மூலிகைகளை பயன்படுத்தி உயிர்களைக் காக்க நினைத்த உங்கள் நீண்ட நாள் முயற்சி பயனற்றுப் போவதாக! இந்த மூலிகைகளை நீ பறித்துச்  சென்றாலும், நீ அதைப் பயன்படுத்தும் போது அதற்குரிய மந்திரம் உனக்கு மறந்து போகும் என சாபமிட்டனர். போகர் அலறித்துடித்தார்.

சித்தர் பெருமக்களே! செய்தற்கரிய தவறு செய்து உங்களின் சாபத்தை அடைந்தேனே! வேண்டாம்....  வேண்டாம்... இந்த உலகைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா! நமக்குள் நடந்த இந்த விவாகரத்துக்காக உலகத்தை பழி தீர்த்து விடாதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள், என கண்களை மூடிக்கொண்டு கதறினார். அவரது கதறலைக் கேட்க அங்கே சித்தர்கள் இருந்தால் தானே! அவர்கள் காற்றில் கரைந்தது போல மறைந்து விட்டனர். ஐயோ! என் வாழ்க்கை லட்சியம் அழிந்ததே! இனி இந்த மக்கள் மரணத்தின் பிடியில் இருந்து எப்படி மீள முடியும்? இறைவா! என்னை சோதித்து விட்டாயே, என புலம்பியவர், வேறு வழியின்றி அப்படியே மயங்கி சாய்ந்து விட்டார். எதுவும் காரணத்துடனேயே நடக்கிறது. வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த உலகம் தாங்காது. உலகத்திற்கு வருபவர்களெல்லாம் பிழைத்திருக்க வேண்டுமானால், அவர்களை வழி நடத்துவது யார்? இயற்கைக்கு இறைவன் விதித்திருக்கும் கட்டளைகளில் மிக முக்கியமானது மரணம். அதை இயற்கை எப்படி மீறும்? அதனால் தான், இறைவன் இப்படி ஒரு லீலையை சித்தர்கள் மூலமாக நிகழ்த்தியிருக்கிறான். அப்படியானால், அவன் ஏன் சஞ்சீவினி போன்ற மூலிகைகளைப் படைத்திருக்க வேண்டும் என்றால், அது தான் தெய்வ ரகசியம். தெய்வத்தின் சூட்சுமங்கள் முழுவதுமாக நமக்கு புரிந்து விட்டால், அதெப்படி தெய்வமாக இருக்க  முடியும்? மயங்கிக் கிடந்த போகரை நோக்கி ஒரு பறவை வந்தது. அந்தப் பறவையை கண்டப் பேரண்டம் என்பார்கள். அது, குகைக்குள் சென்று ஒரு மூலிகையைப் பறித்து வந்து போகரின் மூக்கருகே நீட்டியது. போகர் மயக்கம் தீர்ந்து எழுந்தார். போகரே! நடந்ததை நினைத்து வருத்தப்படக்கூடாது. இங்கே லட்சக்கணக்கான சித்தர்கள் தங்களை மறந்த நிலையில் தவமிருந்து வருகின்றனர். உன் நடமாட்டம் அவர்களை விழிக்கச் செய்து விடும். இப்போது கற்ற வித்தைகளே போதும்! இதைக் கொண்டே நீ உலகிலுள்ளோரின் ஆயுளை விருத்தி செய்து, தீர்க்காயுளுடன்  வாழ வழி செய்யலாம். இங்கிருக்கும் மற்ற சித்தர்களையும் விழிக்கச் செய்து, இருப்பதையும் இழந்து விடாதே. இருப்பதைக் கொண்டு திருப்தியடைபவனே புத்திமான், என அறிவுரை கூறியது. போகரும் அங்கிருந்து கிளம்பி ஆகாயமார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு அன்னை உமையவள் காட்சி தந்தாள்.போகா! வருந்தாதே! உலகை அழிப்பதும், காப்பதும் எனது பணி. நீ இங்கிருந்து பழநிமலைக்குச் செல். அங்கே என் மகன் முருகனை வழிபடு, என்று கூறி மறைந்தாள். அன்னையின் கட்டளையை ஏற்று போகர் பழநிக்கு வந்தார். கடும் தவமிருந்தார். அவர் முன்னால் முருகப்பெருமான் கோவணத்துடன், தண்டாயுதபாணியாகக் காட்சி தந்தார். போகரே! நீர் நவபாஷாணத்தால் எனக்கு சிலை வடிக்க வேண்டும். 

நான் சொல்லும் வழி முறைகளின் படி வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், எனக்கூறி அதுபற்றி தெளிவாகச் சொன்னார். போகரும் மனம் மகிழ்ந்து நவபாஷாணத்தால் சிலை வடித்தார்.  முருகப்பெருமான் அருளியபடியே அதை பிரதிஷ்டை செய்து அபிஷேகமும் பூஜையும் செய்து வந்தார். அந்த அபிஷேகப் பிரசாதத்தைப் பெற்றவர்கள், நோய்கள் நீங்கி, சுகவாழ்வு பெற்று, தீர்க் காயுளுடன் வாழ்ந்தனர். இதனால் தான் இன்றைக்கும் பழநிமலைக்கு மக்கள் ஏராளமாக வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக வருமானம் உள்ள கோயிலாகவும் இது விளங்குகிறது. போகர், நாமக்கல் அருகிலுள்ள திருச்செங்கோடு சென்றார். அங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரரையும் நவபாஷாணத்தில் வடித்தாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அவர் சீனாவுக்கும் அடிக்கடி வானமார்க்கமாக சென்றார்.  ஒரு கட்டத்தில் தனது சக்தியை இழந்தார். புலிப்பாணி அங்கு சென்று, அவரை மீட்டு வந்து மீண்டும் சக்தி  பெற ஏற்பாடு செய்தார்.  கொங்கணர், இடைக்காடர், கமலமுனி, மச்சமுனிவர், நந்தீசர் ஆகிய சித்தர்களும் இவரது சீடர்களாக இருந்தவர்களே! சீனாவில் இருந்து திரும்பி, பழநியில் தங்கிய போகசித்தர், அங்கேயே சமாதி அடைந்தார்.




தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் தலைவனே! தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும், என்றனர். இந்திரன் தேவர்களின் குறையை கருணையுடன் கேட்டான். தேவர்களே! கலங்க வேண்டாம். தேவராயினும், மனிதராயினும், சிறு பூச்சி புழுவாயினும், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். எனினும், இதுகண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அசுரர்களில் உயர்ந்தவனான தாரகன் தவவலிமை மிக்கவன். கடலுக்குள் மறைந்து வாழும் சக்தி படைத்தவன். பிரம்மாவின் அருளால் சாகாவரம் பெற்றவன். ஒரு கும்பத்தின் அளவே உருவமுடைய ஒருவரே அவனைக் கொல்ல முடியும். ஆனால், அவன் குறிப் பிட்டுள்ள அளவு உயரமுள்ளவர் எவரும் பூவுலகில் இல்லை. பிரம்மனால் கூட அப்படிப்பட்டவரைப் படைக்க முடியாது. இருப்பினும், பிறந்தவர் மாள்வது உறுதி. நீங்கள் அமைதி காக்க வேண்டும். நான் அவர்களை கடலுக்குள் வசிக்க இயலாத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பின்னர், அவர்களது தொந்தரவு குறையும், என்றான்.


தேவர்கள் அரைகுறை மனதுடன் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினர். இந்திரன் ஆழ்ந்து யோசித்தான். கடலை வற்றச்செய்வது என்பது எப்படி ஆகக்கூடிய காரியம். என்ன செய்வது? என குழம்பிப் போயிருந்த வேளையில், அதுவே சரி, என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை தன் சபைக்கு வரச்செய்தான். அக்னி! நீ உடனே பூலோகத் துக்குச் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன் புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்து போனதும், அரக்கர்கள் நம்மை துன்புறுத்தி விட்டு, ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர். இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம்,  என்றான். அக்னி சிரித்தான். இந்திரரே! தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர் களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். உலகில் கடல் இல்லை என்றால் மழை எப்படி பொழியும்? மழை இல்லை என்றால் ஆறுகள் எப்படி ஓடும்? ஆறுகள் இல்லையென்றால், நமக்கு அவிர்பாகம் தரும் யாகங்களை நடத்த தீர்த்தம் கூட இல்லாமல் போய் விடுமே. நீர் வாயுவை அழைத்துப் பேசும். ஒருவேளை வறண்ட காற்றால் அவன்  கடலை வற்றச்செய்யக்கூடும், என்றான்.

இந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏ அக்னி! நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக் காரன் நீ. தலைவனாகிய என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா?இந்த யோசனை யெல்லாம் இல்லாமலா நான் உன்னை கடலை வற்றச்செய்யும்படி பணிப்பேன். சொன்னதைச் செய்,என்றான்.அக்னியோ ஒரேயடியாக மறுத்து விட்டான். தாங்கள் என் எஜமானர் தான். எஜமானர் என்பதற்காக, அந்த எஜமானர் உள்ளிட்ட அத்தனை பேரையும் அழிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன், எனச் சொல்லி விட்டு,கைகட்டி நின்றான். அடுத்து வாயு வரவழைக்கப் பட்டான். அவனிடமும் இந்திரன், கடல் சமாச்சாரம் பற்றிக் கூற, வாயுவும், அக்னி சொன்ன அதே பதிலையே சொன்னான். அக்னியும், வாயுவும் சொல்வதிலும் நியாயமிருக்குமோ என்னும் அளவுக்கு இந்திரனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான். ஆனால், சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடைபெறாமல் தேவர்கள் மெலிந்து போயினர். இப்போது, இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின் மீதே திரும்பியது.
மீண்டும் அவர்களை வரவழைத்து, ஏ அக்னி! ஏ வாயு! அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் தங்கள் அட்டகாசத்தை முடித்து விட்டு,  கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும்? அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம்? என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும், என சாபமிட்டான். அக்னியும், வாயுவும் பூலோகத்தில் பிறந்தனர். அக்னி மித்திரா என்ற பெயரிலும், வாயு வருணர் என்ற பெயரிலும் வாழ்ந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான் செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள். அவள், ஒரு நீர்நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்தகும்பத்தில் வீரியத்தை இட்டார். வருணரோ, அதைத் தண்ணீரில் இட்டார். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து ஒரு குழந்தையாக மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது.
குடத்தில் இருந்து பிறந்ததால், அந்த குள்ள முனிவருக்கு கும்பமுனிவர் என்றும், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவே உயரமுள்ள ஒரு முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது ஒருபுறம் இருக்க, வாயுபகவான், தண்ணீரில் இட்ட வீரியத்தில் இருந்து வசிஷ்டர் பிறந்தார். இவர் அயோத்தியை நோக்கி போய் விட்டார். பிற்காலத்தில், இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருடன் சேவை செய்ய  வேண்டியிருந்ததைக் கருத்தில்  கொண்டு அங்கு சென்று விட்டார். கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ எல்லை மீறியதாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள் குறையை வெளியிட்டனர். சுவாமி! தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும், என்றனர்.அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக்காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியான தண்ணீரிலேயே தவத்தை துவங்கினார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரில் படுத்த படியே இறைவனை தியானித்தார். இறைவன் அருளும் கிடைத்தது.
அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலை நோக்கிச் சென்றார். தங்களை குள்ள முனிவர் ஒருவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள்  தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அகத்தியர் விடுவாரா என்ன? தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார்.  ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடிப்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா? மேலும், உலகையே காக்க வேண்டிய  தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும்? அந்த மாமுனிவர், தான் வந்த வேலையை அத்துடன்  முடித்துக் கொள்ள வில்லை. மகாவிஷ்ணு அப்போது மனித அவதாரமான ராமாவதாரம் எடுத்து இலங்கையிலே இருந்தார். ராமனின் மனைவியான சீதாவை, அந்நாட்டு அரக்க அரசனான ராவணன்  தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, அவரால் ராவணனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பெரும் பலம் பெறலாம் எனக்கூறி, ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகங்களைப் போதித்தார். மேலும்  அவருக்கு சிவகீதையையும் கற்றுத் தந்தார்.

ராமபிரானின் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் அகத்தியரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இமயமலைச் சாரலுக்கு வந்தார். அப்பகுதியில் தவமிருந்தார். ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை. பெரியவர்களுக்கும்,  முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன் என்று கூறிய அவர், நீ யானையாகப் போ என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், மன்னா! நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி? என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே! என கேட்ட போது, மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும், என அருள் செய்தார்.
பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால், யானையாகத் திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது ஆதிமூலமே என அலற, ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சென்று சேர்த்தார். இப்படி  ஆடம்பரத்தில் சிக்கித் திளைத்த அரசர்களுக்கு வைகுண்ட பிராப்தி அளிப்பவராகவும் அகத்தியர் விளங்கினார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர்,  தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். இமயமலையில், பார்வதி, பரமேஸ்வரனுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை  மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழயில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள்  அகத்தியா! அகத்தியா! என கத்தினர். நீங்களெல்லாம் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை  வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே! உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார். அகத்தியா! நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை.  சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே! நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக் குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயே தொங்க வேண்டியது தான், எனக் கூறி வருந்தினர். உயரத்தில் குள்ளமான அவருக்கு யார் பெண் தருவார்கள்?  
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பார்கள் நம்மவர்கள். அதுபோல, அகத்தியர் உயரத்தில் மிகச்சிறியவர் என்றாலும், அவரது மகிமைகளை அறிந்த பெண்மணி ஒருத்தி, நிச்சயம் வாழ்க்கைப்பட்டே தீருவாள். தென்னகம் வரும் வழியில், அவர் விதர்ப்பம் என்ற நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அதில் பங்கேற்க அகத்தியரை அவன் அழைத்துச் சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே! நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றாள்.
லோபா! என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர், என்றார். இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,அகத்தியரே! உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை? துறவியிடம் ஏது செல்வம்? இந்த மன்னன் கேட்கும் தொகைக்கு எங்கு போவேன்? என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே! என்ன யோசனை? இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம்செல் வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளும், என்றார்.
ஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் பொருளை யாசித்து பெற்றார். லோபமுத்திரை கேட்ட அளவுக்கு பொன்னும், பொருளும் கிடைத்தது. அதை அவளிடம் தந்து அவளைத் திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். தன் மனைவி லோபமுத்திரையிடம், அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா? இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி  விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா! நீ என் கமண்டலத்துக்குள் வந்து விடு, எனச்சொல்லி அவர் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி, கமண்டலத்தில் புகுந்தாள். அந்த கமண்டலத்துடன் அவர்  குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு காகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது. கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய்பிரவாகம் எடுத்தது.
பெரிய நீர்வீழ்ச்சியாய் அது கொட்டியது. இதை எதிர்பாராத அகத்தியர் கமண்டலத்தில் கொட்டியது போக மீதி தண்ணீரை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்டார். பிரவாகம்எடுத்த நதி கடல் போல் பெருகியதால் சிவசமுத்திரம் என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது கா என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரவிச் சென்றதால், காவிரி என்று பெயர் வைத்தார். பின்னர், மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், லோபா! நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிராவகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப் புள்ள உலகத்தில் வறியவர் இருக்கமாட்டார்கள். வறியவர்இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும், என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சத்தில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு பாண தீர்த்தம் என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அப்போது, ஓரிடத்தில் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. அதைக் கண்ட  லாபமுத்திரை ஆனந்தமயமாகி மற் றொரு அருவியாய் வீழ்ந்தாள். அதற்கு கல்யாண தீர்த்தம் என பெயர் சூட்டினார் அகத்தியர். மீண்டும் ஓரிடத்தில் பக்தர்கள் நீராடி மகிழ ஒரு நீர்வீழ்ச்சியாய் மாறி, தன் கணவரின் பெயரால் அகத்தியர் தீர்த்தம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். இன்றும் அதில் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர். தாமிரபரணி என்னும் பெயர் பெற்று அப்பகுதியை வளப்படுத்தினாள். பின்னர் அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். உலகை சமநிலையாக்கிய மகிழ்ச்சியில் அங்கிருந்து மலைப்பாதையில் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கே அவர் சமாதி நிலையடைந்தார்.

Saturday, November 27, 2010


ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய ஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளியது இந்த சிவ கீதை. கீதை என்பது பாட்டு. கீதைகள் சிவ கீதை, ஸ்ரீ இராம கீதை, பகவத் கீதை, சூர்ய கீதை எனப் பலவாகும். இதில் சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது.

இராமர் வனவாசத்தில் சீதையைத் தேடி வருந்திய பொழுது அகத்தியமுனிவரால் இராமருக்கு விரஜா தீட்சை செய்விக்கப் பெற்று, பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, அதன் பயனால் சிவபெருமான் பாசுபத அஸ்திரப் படையைத் தந்து, அதனால் இராவணனை வென்று சீதையை மீட்பாய் என்று கூறி, சிவபெருமான் விஸ்வரூப தரிசனம் தந்தருளி, சிவகீதையை உபதேசித்தார். இராமர் பேரானந்த மடைந்தார்.

இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரும் பின்பற்ற வேண்டிய சிவநெறியாகவும், இறைவழிபாடு, இயற்கை வழிபாடு என்னும் பேருண்மையை உலகிற்கு உணர்த்தியும், மேலும் சிவபூஜா முறைகளை அருளிச் செய்திருக்கிறார்.

கீதைக்கு முந்தைய காலத்தே நடந்தது. சிவகீதை இராம் அவதாரத்தில் பெற்றது என்றும், கிருஷ்ணர் அவதாரத்தில் கொடுத்தது என்றும், கிருஷ்ணர் தாம் பகவத்கீதையில் "சிவோகம்-பாவனை" செய்கின்ற போது தம்மை பரமாகக் கூறினார் என்பதை அவருடைய சரித்திரங்களில் காணலாம்.

சிவகீதையில் சூதமுனிவர் தனது சீடர்களுக்கு உபதேசித்த காலத்தில் இதைக் கேட்டாலும், படித்தாலும், சிவசாயுச்சியம் கிடைக்கும் என்று உரைத் தருளினார்.

சிவகீதையை முன்னர் புலோலி சிவஸ்ரீ ம.முத்துக்குமாரசாமி குருக்கள் அவர்களாலும், நல்லூர் தா. கைலாசப் பிள்ளை அவர்களாலும் ஆனந்த வருடம் ஆங்கிலம் 1914-ல் வெளிவந்துள்ளது. தற்போது சிவஸ்ரீ அ.சொர்ண சுந்தரேசன், தேவகோட்டை மற்றும் திருவாடானை சிவஸ்ரீ சொ. சந்திரசேகர குருக்கள் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

Friday, November 12, 2010

திருவள்ளுவர் ஞானம்



திருவள்ளுவர் ஞானம்





























திருமூல நாயனார் ஞானம்

அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி









சட்டைமுனி ஞானம்








;;

TIME