Posted by
அடியேன்S.வீரமனிகண்ணன்
at
1:43 AM
ஆடாதோடையின்
மருத்துவப் பயன்கள்
இயற்கையின் பரிசுகளான தாவரங்களும், அவற்றின் ஒவ்வொரு பாகங்களும் நமக்கு அரிய பயன்களை அளிக்கின்றன. பல்வேறு நோய்களைத் தீர்த்து, ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துகின்றன. இத்தாவரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோயைத் தீர்க்கும் சிறப்பு மருத்துவர்களாகும். குறிப்பிட்ட வேதிப்பொருளை தன்னகத்தே கொண்டு, குறிப்பிட்ட நோயைத் தீர்க்கும் வல்லமை கொண்டது நமது தாவரங்கள். ஆடாதோடை தாவரமானது நெஞ்சு சம்பந்தமான நோய்களைத் தீர்ப்பதில் முன்னணி வகிக்கிறது. இருமல், சளி, காசம், மூச்சிரைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களைக் குறைக்கிறது. ஆடாதோடை மிகுந்த குளிரான இடங்கள் தவிர மற்ற இடங்களில் தாராளமாக வளர்கிறது. இது சுமார் மூன்று முதல் ஐந்து மீட்டர் உயரத்தில், அதிக கிளைகளுடன், தழைத்து வளரும் தன்மையைக் கொண்டது. இலைகள் ஈட்டி போல காணப்படும். இலைகளில் உள்ள நரம்புகள் தெளிவாகத் தெரியும். பூக்கள் வெண்மை நிறத்தில் காணப்படும்.
குணங்கள்
ஆடாதோடையில் எண்ணெய், கொழுப்பு, ரெசின் மற்றும் சில அமிலங்கள் உள்ளன. ஆடாதோடையின் இலை, பூ, வேர் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டது. கபம் நீக்கி, சிறுநீர் பெருக்கி மற்றும் மூச்சுக்குழல் சீரமைப்பு போன்ற தன்மைகளைக் கொண்டுள்ளது.
சிறப்புத் தன்மைகள்
இதன் இலைகளிலுள்ள சில வகை காரச் சத்துக்களால் ஆடாதோடை இலை பூச்சியால் மற்றும் பிற காளான்களால் பாதிக்கப்படுவதில்லை. அதனால் பழங்களைச் சேகரித்து பாதுகாக்க, பொதிந்து வைக்கப் பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்
இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து இதோடு தேன் கலந்து (ஒரு கரண்டி சாறுடன்) அருந்த இருமல் தீரும். ஒரு ஸ்பூன் ஆடாதோடை இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறு கலந்து ஒரு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து அருந்தி வர ஆஸ்துமா குணமாகும். ஆடாதோடைஇலைச்சாறு ஒரு கரண்டி அருந்த வயிற்றுப்போக்கு இரத்தப் பேதி குணமாகும். ஆடாதோடை இலைகளை அரைத்து மூட்டு வலி ஏற்பட்ட இடங்களில் பூசி வர மூட்டுவலி குணமாகும். ஆடாதோடைஇலைகளை அரைத்து சொறி, அரிப்பு ஏற்பட்ட இடத்தில் பூசி வர அரிப்பு குணமாகும். ஆடாதோடை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு அவுன்ஸ் சாறுடன், ஒரு ஸ்பூன் நெய் கலந்து, சிறிதளவு சீனி, இரு சிட்டிகை மிளகு கலந்து ஒரு ஸ்பூன் வீதம் ஒரு நாள் இரு வேளை வைத்து, மூன்று நாள் சாப்பிட இருமல், சளி தீரும். ஒரு கரண்டி ஆடாதோடை இலைச் சாறுடன், அரைக்கரண்டி இஞ்சிச்சாறு, அரைக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு இருமல் ஆஸ்துமா குணமாகும். ஆடாதோடை இலைகளோடு வேர் (கைப்பிடி வீதம்) எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாள் இருவேளை வீதம் சாப்பிட மூச்சிரைப்பு குணமாகும். ஆடாதோடை பூக்களை எடுத்து, கண்களை மூடிய பின்பு மேலே கட்டி ஒரு மணி நேரத்திற்குப் பின்பு எடுக்க கண் சிவப்பு கணண் வலி மாறும். ஆடாதோடை இலைச்சாறை கைகளில், கால்களில் பூசிட கொசுக்கள் அருகில் வராது. ஆடாதோடை இலைச்சாறை வீட்டில் தெளிக்க ஈ, விஷப்பூச்சிகள் வராது. இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைவலி தீரும். கண் குளிர்ச்சி பெறும். காலை உணவுக்குப் பிறகு இரண்டு ஸ்பூன் ஆடாதோடை இலைச் சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த சளி, ஆஸ்துமா தீரும்.
துளசி
பன்னெடுங்காலமாக பாரதநாட்டுக் கலாச்சாரத்தில், ஆன்மீகத்தில், இறைவழிபாட்டில் துளசி முக்கியமாக இடம் பெற்றுத் திகழ்கிறது. இதனால் “புனித துளசி” என்று போற்றப்பட்டு வருகின்றது. இப்புனித துளசி பல வழிகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புனித துளசியின் முக்கிய மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொண்டு பயன்படுத்தி உடல் நலன் பெறுவோம்.
புனிதமானது
துளசி புனிதமானது என்பதை இதன் தாவர இயல் பெயரான, “ஆசிமம் சாங்டம்” (Occimum sanctum) என்பது நன்கு வலியுறுத்துகிறது. ஆங்கிலத்தில் sanctum என்ற சொல்லிற்கு “புனிதமானது” என்று பொருள்.
இந்தியாவில் 2000 ஆண்டுகளாக துளசி புனிதமாகவும், பல வகைகளின் இயற்கை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
துளசி குடிநீர்
முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி துளசி இலைகளை 3 லிட்டர் தண்ணீரில் இட்டு வைக்கவும். மறுநாள் காலையில் பத்து மணியிலிருந்து இந்த துளசி குடிநீரை, நாள் முழுவதும் வீட்டிலுள்ளோர் அனைவரும் அவ்வப்போது பருகி வரவும். இதனால் உணவு நன்கு ஜீரணிக்கும். பசி ருசி உண்டாகும். குடல் அழற்சி நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். உடல் சூடு கணிசமாகத் தணியும். மலச்சிக்கல் ஏற்படாது பாதுகாக்கும். சிறுகுடல், பெருங்குடல் பாதைகளிலுள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி வரும்.
துளசி பானம்
அரைகைப்படி துளசி இலைகளை நன்கு சுத்தம் செய்து கழுவி இத்துடன் நான்கு ஏலக்காய், சிறிதளவு பொடித்த சுக்கு, சித்தரத்தை, கால் கிலோ கருப்பட்டி சேர்த்து மூன்று லிட்டர் நீரிலிரிட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். இது துளசி பானம். இதைக் குடித்து வர காய்ச்சலுடன் கூடிய சளித்தொல்லை குணமாகும். ஆரம்ப நிலை ஆஸ்துமா அகலும். இருமலைப் போக்கும். கல்லீரல் கோளாறுகளை நீக்கும். உடல் அசதி, சோர்வு தீரும். சருமத்தில் ஏற்படும் அலர்ஜி குணமாகும்.
துளசி, சுக்கு, மிளகு, கஷாயம்
ஒரு கைப்படி அளவு துளசி இலை, சிறிது சுக்கு (பொடித்தது), இரண்டு தேக்கரண்டி மிளகு இவைகளை போதிய அளவு நீரிலிட்டு கஷாயம் செய்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் தம்ளர் அளவு, மூன்று வேளை குடித்து வர நெஞ்சுச்சளி குணமாகும். மழைக்காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களை நன்கு குணமாக்கும் தன்மை கொண்டது இந்தக் கஷாயம். கைகால் அசதிக்கு அரு மருந்து. மூட்டு வலியைத் தணிக்கும். தலைநீர் கோர்த்தலைப் போக்கும். ஆஸ்துமாவிற்கும் அருமருந்து. மூக்கிலிருந்து நீர் ஒழுகுவதை நிறுத்தும். சாதாரண காய்ச்சலைக் குணப்படுத்தும். தலைவலியைப் போக்கும். வயிற்றுப்பொருமலை வற்றச் செய்யும். நெஞ்சுச்சளியை இளக்கி வெளிப்படுத்தும். குற்றிருமலை குணப்படுத்தும். அஜீரணத்தை அகற்றும். மூட்டு வலியை மாய்க்கும். உடற்சோர்வை நீக்கி உற்சாகம் ஏற்படுத்தும்.
துளசி சீரப்
இரண்டு கைப்பிடி அளவு துளசி இலை, நான்கு ஏலக்காய் இவைகளை இரண்டு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். இந்த வடி நீருடன் அரை கிலோ வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கலவை சீரப் பதத்திற்கு வந்ததும் இறக்கி நன்கு ஆறினதும் பாட்டிலில் ஊற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். இதுதான் துளசி சீரப். இந்த சீரப்பை வேளைக்கு மூன்று தேக்கரண்டி வீதம், தினம் காலை, மாலையென இரு வேளை குடித்து வர, நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். கல்லீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும். பித்தத்தை மொத்தமாய் போக்கும். சளித்தொல்லை குற்றிருமலுக்கு இயற்கை மருந்து இது. ஆரம்ப நிலை இளைப்பு நோயைக் குணப்படுத்தும். தலை நீரேற்றம். தலைவலி இவைகளைத் தணிக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும். துளசி சீரப் உடல் ஆரோக்கியம் காக்கும் எளிய சீரப் ஆகும்.
நச்சுப்பொருட்களை வெளியேற்றும்
துளசி உடல் உறுப்புக்களின் செயல்பாடுகளைச் சீராக்கும் தன்மையுடையது. இரசாயன மருந்துகளால் உருவாகும் நச்சுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. எந்த விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தாத ஒரு சிறந்த இயற்கை மருந்து துளசி.
துளசி ஒரு சிறந்த ஆண்டிபையோட்டிக்
உடலில் உள்ள தீமை தரும் கிருமிகளை, நுண்ணுயிர்களை அழிக்கும் ஆற்றலுள்ளது துளசி. துளசியின் ஆண்டிபையோட்டிக் குணத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க நாட்டு மருத்துவர்கள் அறிந்திருந்தனர் என்பதை பல மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
வல்லாரை
வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.
இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.
வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.
வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.
இந்தக் கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.
வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.
வல்லாரை கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து அது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
வல்லாரை வைத்தியம்
1. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.
2. தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.
3. வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.
4. வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால் 100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.
5. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.
6. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.
7. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும். வெந்தயக் கீரை
சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம். வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும். இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.
மணத்தக்காளி கீரை
மணத்தக்காளி கீரையைச் சாப்பிட்டால், வாய்ப்புண், வயிற்றுப்புண், உடல் சூடு போன்றவை குணமாகும். டூந்தக் கீரையின் காயைச் சமைத்துச் சாப்பிட்டால், மலச்சிக்கல் தீரும். நாள்பட்ட கப நோய்களும், வாத நோய்களும் சரியாகும். குடல் புண்களை ஆற்றுவதில் கீரைகளில் மணத்தக்காளிக் கீரை முன்னோடியாக உள்ளது. இந்தக் கீரையில், புரதச் சத்தும் இரும்புச்சத்தும் நிறைய உள்ளன. வாய்ப்புண், அச்சரம் (நாவில் உண்டாகும் ஒரு வகை நோய்) மற்றும் கால்சியக் குறைபாடுகளுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. உடல் உறுப்புக்களில் எங்கு புண் இருந்தாலும் ஆற்றும் வல்மை இதற்கு உண்டு. இந்தக் கீரையை தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டால், சோரியாஸிஸ் எனப்படும் தோல் நோய் முற்றிலும் குணமாகும்.
மணத்தக்காளிக் கீரையின் மருத்துவப் பயன்கள்
1. கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவை குணமாகும்.
2. மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும்.
3. ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
4. ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளிக் கீரையுடன், ஒரு ஸ்பூன் பார்வி, நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்ந்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்.
5. மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதைத் தேனோடு சேர்த்து சர்பத் போல் காய்ச்சி, தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருக்கும்.
6. ஒரு கப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு மிளகு (10 எண்ணிக்கை), திப்பிலி (3 எண்ணிக்கை), நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்ந்து விழுதாக அரைத்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால், சளி, இருமன் போன்ற கப நோய்கள் குணமாகும். குளிர் ஜன்னிக்கு அற்புதமான மருந்து இது.
7. மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து 30 மி.லி. அளவுக்குத் தினமும் மூன்று வேளையும் சாப்பிட்டால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். பெருவயிறு, வாய்ப்புண், உடல் சூடு போன்றவை குணமாகும்.
8. ஒரு கப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு, பூண்டு (4 பல்) நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால், இதய நோய்கள் குணமாகும்.
9. மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தொண்டைச் சதை (Tonsils) குணமாகும். இனிய குரல் வளமும் உண்டாகும்.
10. மணத்தக்காளிக் கீரையைச் (100 கிராம்) சுத்தம் செய்து, கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, அதில் எலுமிச்சம் பழத்தைப் (பாதி அளவு) பிழிந்து, சின்ன வெங்காயத்தை (2) அரிந்து போட்டு அரைத்துச் சாறு எடுக்கவும். இதைக் காலை உணவுக்குப் பிறகு சாப்பிட்டால், உடல் எடை, பெருவயிறு போன்றவை குறையும்.
மணத்தக்காளிக் கீரை சூரணம்
மணத்தக்காளிக் கீரை (நிழலில் உலர்த்தியது) - அரை கிலோ
மிளகு 10 கிராம்
சீரகம் 20 கிராம்
சோம்பு 30
மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து பொடி செய்துகொள்ளவும்.
மணத்தக்காளிக் கீரைரையைத் தொடர்ந்து சமையலில் சேர்க்க இயலாதவர்கள் இதை இயற்கை உணவாகக் கொள்ளலாம். காலைய¢லும் இரவு சாப்பாட்டு முன்னும் இந்தச் சூரணத்தைச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் பலப்படும். குடல் நோய்கள், நீரிழிவு, வாயுக் கோளாறுகள், உடல் பலவீனம் போன்றவை குணமாகும். புளியாரைக் கீரை
அரைக்கீரை வகையைச் சேர்ந்த புளிப்புச் சுவையை உடைய இந்தக் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நன்கு பசியைத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும். உடலில் புது ரத்தம் ஊற வைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து இது. தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், வாந்தி, மயக்கம், வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் அதிசயமான பலன்களைப் பெறலாம். குளிர்ச்சியான உடல் தன்மை கொண்டவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடக்கூடாது.
புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்
1. புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் (2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2. புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.
3. புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
4. புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
5. புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் சரியாகும்.
6. புளியாரைக் கீரையைச் சாறு எடுத்து, அதில் உப்பு சேர்த்துக் காய்ச்சவும். மீண்டும் மீண்டும் காய்ச்சுவதில் பாத்திரத்தில் படியும் உப்புப் படிவத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும். இதைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, 2 சிட்டிகையை எலுமிச்சைச் சாறில் கலந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட வயிற்று வலியும் உடனே மறையும். குடற்புண்களும் மாயமாக மறையும்.
7. புளியாரைக் கீரை சாறு எடுத்து, அதில் மாதுளம் பழத்தோலை அரைத்து, தயிரில் குழைத்துச் சாப்பிட்டால் சீதபேதி, வயிற்றுக் கடுப்பு இரண்டும் தீரும்.
8. புளியாரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணம¡கும்.
9. புளியாரைச் சாறில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும்.
10. புளியாரைச் சாறில் ஓமத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
புளியாரைக் கீரை கடைசல்
தேவையான பொருள்கள்
புளியாரைக் கீரை 300 கிராம்
பூண்டு 4 பல்
துவரம் பருப்பு 50 கிராம்
தேங்காய்ப்பால் 100 மிலி
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
கீரையைச் சுத்தம் செய்து, துவரம் பருப்பு, பூண்டு, சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்கவும். பிறகு மத்தால் கடைந்து, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் உப்பு சர்த்து இறக்கிவிடவும். எண்ணெயில் கடுகு, பருப்பு தாளித்து கீரையில் சேர்க்கவும். இரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு இது.
0 Comments:
Post a Comment