கண்களில் உள்ள வெண்விழிக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தம் தேங்கும் போதும், ரத்தக்கசிவு ஏற்படும் போதும், வெண்படலம் சிவப்பு நிறமாகத் தெரியும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் தாக்குதலாலும், “கஞ்சக்டிவா’ எனும் விழியடுக்கில் ஒவ்வாமை ஏற்பட்டு, உறுத்தலின் காரணமாக சிவப்பு நிறம் ஏற்படும். இதனால் கண்ணில் நீர்வடிதல், கண்வலி, கண் எரிச்சல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது காற்றின் மூலமாகவும், கிருமித்தொற்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளைத் தொடுவதாலும் மற்றவர்களுக்கு பரவுகிறது. வெயில் காலம் முடிந்து, குளிர் ஆரம்பிக்கும் போதும், கடும் மழை ஓய்ந்த பின்னும் இந்த கண்நோய் வேகமாக பரவுகிறது. சித்த மருத்துவத்தில் அதிமந்த நயனரோகம், அக்கரரோகம் என்றழைக்கப்படுகிறது. அக்கரரோகத்தில், நோய் வந்த சிலநாட்களில் தானாகவே குணமாகிவிடும் என்பதால் கண்களுக்கு ஓய்வும், சுத்தமான நீரில் கழுவுவதே ஆரம்ப சிகிச்சையாகும். நீரில் கிருமிநாசினி, ஆண்டிபயாடிக் மருந்துகளைச் சேர்த்து கண்களைக் கழுவலாம்.
ஒவ்வாமையை நீக்கி, நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புத பணியைச் செய்கிறது செண்பக பூக்கள். மைக்கேலியா செம்பகா என்ற தாவரவியல் பெயர்கொண்ட பெரிய செண்பக மரங்களின் பூக்களிலிருந்து, நுண்கிருமிகளை கொல்லும் கண்நோய் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. இப்பூக்களில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின்கள் கிருமிநாசினியாக பயன்படுகின்றன.
செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை நீர்விட்டு நன்கு அரைத்து, கலவையை கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும். செண்பகப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரில் கண்களைக் கழுவலாம். இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்தும் நீரில் கலக்கி கண்களை கழுவினால் சிவப்பு மாறும்.
நாக முனிவர் என்னும் சித்தர் கண்ணோய் தோன்றுவதற்கான காரணங்களை தன் நூலில் குறிப்பிட்டுள்ளதை அறியும்போது வியப்பு தோன்றலாம். ஆனால், அந்த கருத்துக்களின் உண்மைகள் தற்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. நமது உடலில் தோன்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மிகுகொழுப்பு, மிகுஉப்பு போன்றவை ரத்தத்தில் மிகுந்த இந்த உபாதைகளை கண்களுக்கும் சென்று கண்களின் ரத்தக்குழாய்களில் தங்கி, கண்களின் பாகங்களை கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கின்றன. கண்களில் தோன்றும் கூச்சம், வலி, சிவப்பு, உறுத்தல், கலக்கம், வீக்கம், பீளை, கனம், எரிச்சல், பார்வைகுறைவு போன்றவை மட்டுமின்றி குதிகால் வலி, வயிற்றுவலி மற்றும் தலைவலியும் கண்ணோய்களுக்கு பல காரணங்களாக நாகமுனிவர் குறிப்பிடுகின்றார்.
எனது மகளுக்கு வயது 12 ஆகிறது. சிறு வயதிலிருந்தே நகம் கடிக்கும் பழக்கம் உள்ளது. நகம் கடிக்கும் பொழுது தோலிலுள்ள சதையுடன் சேர்த்து கடிப்பதால் அந்த இடத்தில் ரத்தம் உண்டாகி புண்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், புண்கள் ஆறவும் சித்த மருத்துவம் கூறவும்.
சிலர் வேலைப்பளுவின் போதும், சும்மாயிருக்கும் போதும், சிந்திக்கும் போதும் நகத்தை கடித்து பழக்கப்படுத்துகின்றனர். பின் நாளடைவில் இந்த பழக்கத்தை விடமுடியாமல் சிரமப்படுகின்றனர். சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்பு சத்து குறைபாட்டினாலும் இந்தப் பழக்கம் தொடரலாம். நெல்லிக்காய், விளாம்பழம், மாதுளம்பழம் போன்றவற்றை அடிக்கடி மென்று சாப்பிட்டு பழக்கப்படுத்திக் கொண்டால் நகம் கடிக்கும் பழக்கம் நீங்கும். நகத்தைச் சுற்றி புண்ணுள்ள பகுதிகளில் வெங்காரம் என்னும் நாட்டு மருந்தை சட்டியில் போட்டு பொரித்து, பொடித்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வரலாம் அல்லது கஸ்தூரி மஞ்சளை விளக்கெண்ணையுடன் கலந்து தடவலாம்.