best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Thursday, October 21, 2010


இடைக்காடர் என்னும் சித்தர், சிறந்த சிவபக்தர். சிவனின் அருளால் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறமை பெற்றிருந்தார். ஒருசமயம் எதிர்காலத்தில் மழை பொய்த்து, நாட்டில் வறட்சி உண்டாகும் என்பதைக் கணித்தார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவர், விஷயத்தை மக்களிடம் சொன்னார்.அதைக்கேட்டவர்கள் சிரித்தனர்.
""என்னது மழை பெய்யாமல் போய்விடுமா? வறட்சி தலைவிரித்து ஆடுமா? இந்தக் கதையை வேறெங்காவது போய் சொல்லுங்கள்,'' என அவரை ஏளனம் செய்தனர்.
""ஐயோ! மக்கள் என் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறார்களே... இவர்களை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றலாம் என நினைத்தால், இவர்கள் என்னை நம்பாமல் இருக்கும் போது என்ன செய்ய முடியும்? அவர்களின் விதி அவ்வளவு தான்,'' என்று நொந்து கொண்டார் இடைக்காடர். அவ்வேளையில் வறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்தார். தான் வளர்த்த ஆட்டுக்குட்டிகளுக்கு, எருக்கஞ்செடியை சாப்பிடப் பழக்கினார். மேலும், கேழ்வரகு தானியத்தை, மண்ணில் கலந்து சிறிய குடிசையையும் கட்டிக்கொண்டார். இடைக்காடரின் வித்தியாசமான இந்த செய்கையைக் கண்டு சிலர் கேலியும் செய்தனர். ஆனால், இடைக்காடர் சற்றும் சளைக்காமல் தன் பணியைச் செவ்வனே செய்தார்.

இடைக்காடர் சொன்னது போலவே, சில மாதங்களில் வறட்சி துவங்கியது. நெடுநாட்களாக மழை பெய்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. முதலில் இடைக்காடர் சொன்னதை சாதாரணமாக நினைத்த மக்கள், அவர் சொன்ன உண்மையை அப்போது புரிந்து கொண்டனர். ஊரே வானம் பார்த்த வறண்ட பூமியாக மாறிவிட்டது. பயிர் பச்சைகள் அழிந்தன. ஒரு சாரார் பட்டினியால் மடிந்தனர். இவ்வேளையில் இடைக்காடர் தன் ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை சாப்பிடக் கொடுத்தார். அதைச்சாப்பிட்ட ஆடுகள் அரிப்பு தாங்காமல், இடைக்காடர் கேழ்வரகைக் குழைத்துக் கட்டிய குடிசையில் உரசின. அப்போது, கேழ்வரகு கீழே சிந்தியது. அதைக் கொண்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டு பசியாறினார் .
இச்சமயத்தில், வானுலகில் சஞ்சாரம் செய்த கிரகங்கள், வறட்சியான இடத்தில் இடைக்காடர் கேப்பைக்கூழ் காய்ச்சுவதையும், ஆடுகள் சிரமமின்றி இருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டு அவரது குடிசைக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற இடைக்காடர், ""ஐந்தாறு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் பஞ்சம், இன்னும் தொடர்ந்தால் என்னாகும்? பூலோக வாழ்வே ஸ்தம்பித்துப் போகுமே! இருக்கிற மக்களையாவது காப்பாற்றியாக வேண்டுமே!'' என நினைத்தார். அவரது மூளை வேகமாக வேலை செய்தது. உடன் அவர், "கிரகங்களே! நீங்கள் இன்றிரவு என் குடிசையில் தங்க வேண்டும்,'' என வேண்டினார்.
கிரகங்களும் ஒப்புக்கொண்டன. இடைக்காடர் அவர்களுக்கு ஆட்டுப்பாலும், கேப்பைக் கூழும் தந்து உபசரித்தார். அவற்றைப் பருகிய கிரகங்கள், உண்ட மயக்கத்தில் படுத்துவிட்டனர். அவர்கள் அயர்ந்து தூங்கிய வேளையில், தன் சக்தியால் அவர்களை மழை பெய்வதற்கு எந்த கிரகநிலை இருந்தால் சரியாக இருக்குமோ, அதற்கேற்ப படுக்க வைத்து விட்டார். அவ்வளவு தான்! மழை கொட்டோ கொட்டென கொட்ட ஆரம்பித்து விட்டது. பூமி, வறட்சி நீங்கி பசுமையாக மாறியது. சிறிது நேரம் கழித்து எழுந்த கிரகங்கள், அனல் காற்றுக்கு பதிலாக குளிர்க்காற்று வீசுவதையும்,

பெருமழையால், தண்ணீர் பெருகி ஓடுவதையும் கண்டனர். தங்களை மாற்றி வைத்தது இடைக்காடராகத்தான் இருக்கும் என்றெண்ணியவர்கள் அவரைத் தேடினர். அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இவரை இப்போதைக்கு எழுப்ப முடியாது என உணர்ந்து கொண்ட நவக்கிரகங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டனர். சமயோசிதமாக செயல்பட்டு பஞ்சம் போக்கிய இடைக்காடரை வணங்கிய மக்கள், தங்கள் செய்கைக்கு மன்னிப்பு கேட்டனர்.

0 Comments:

Post a Comment



TIME