Posted by
அடியேன்S.வீரமனிகண்ணன்
at
11:25 PM
வள்ளலார் காட்டிய வாழ்க்கை நெறிகள்
"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என காரூண்யத்தை பூமியில் நிலைநாட்டியவர் திருவருட் பிரகாசர் எனும் வடலூர் வள்ளலார். இம்மகான் 5-10-1823 இப்புவியில் அவதரித்து அன்பின் வடிவமாய் அவனியில் வாழ்ந்து, மனித வாழ்வை மேம்படுத்தும் வாழ்க்கை நெறிகளை உருவாக்கித் தந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தி, அரிய போதனைகள் பல செய்து 30-1-1874(50 ஆண்டு 3 திங்கள் 25 நாட்கள்) நாளன்று வடலூர் சித்தி வளாகத் திருமாளிகையில் புற சோதியான அருட்பெருஞ் சோதியை ஏற்றி உலகத்து மானிடர்களுக்காய் வைத்து விட்டுத் தன் பொன்மேனியிலிருந்த ஆத்ம சோதிக் கதிர்களை எழுப்பி அதில் தன்னைக் கரைத்து ஒளிவடிவம் எனும் மரணமிலாப் பெருவாழ்வு எய்தியதாக வரலாறு கூறுகின்றது.இதோ வள்ளலார் மனித வாழ்வின் மேன்மைக்கு உருவாக்கிய சித்தாந்தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளாக உங்களது உபயோகத்திற்காக......
இறைநெறி
1.இயற்கையே இறைவர், அந்த இயற்கையை ஆளும் இறையான அருபெருஞ்சோதி ஆண்டவர் ஒருவரே! அவரை உண்மையாக நம்பி உணர்வோடு தியானித்தால் எல்லா நலமும் கிட்டும்.
2.சிவப் பரம்பொருளாய் உள்ள இறைவரை எக்காரணங்கொண்டும் உருவழிபாட்டில் நிறுத்தாமல் அகத்துள்ளும் அருட்பெருஞ்சோதியாயும், புறத்துள்ளும் அருட்பெருஞ்சோதியாயும் நினைந்து வழிபட வேண்டும்.
3.சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது அத்தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலிகள் கொடுத்தல், சடங்குகள் கிரியைகள் செய்தல் போன்ற அனைத்தையும் நீக்குதல் வேண்டும்.
4.புராணங்களும், சாத்திரங்களும் எல்லாக் காலங்களுக்கும் பொருந்துவனவன்று அவை முடிவான உண்மைகளைக்கூறமாட்டா. எனவே, புராணக்கதைகளைநம்பி விழா எடுத்தல், கிரியைகளைச் செய்தல் முதலிய அனத்தையும் தவிர்த்தல் வேண்டும்.
5.எக்காரணங் கொண்டும் இறந்தவர்களுக்குக் கருமாதி திதி, திவசம் போன்ற கிரியைகளும் சடங்குகளும் செய்தல் கூடாது. இறந்தவர்களை மண்ணில் நல்லடக்கம் செய்க. தீயிட்டுச் சுடல் வேண்டா.
6.திங்கள் தோறும் வரும் பூச நன்னாளில் இல்லங்களிலும், பொது இடங்களிலும் கூட்டு வழிபாடு, சோதி வழிபாடு நிகழ்த்தலாம், அருட்பா அகவல் ஓதலாம், ஏழைகட்கு அன்னமிடலாம். குழந்தைகளுக்குக் கல்வியுதவி செய்யலாம். சமன்மார்க்கிகள் தங்களின் ஆன்மா தேட்டங் குறித்துச் சிந்திக்கலாம்.
7.ஆண்டுதோறும் தைத்திங்களில் வரும் பூச நன்னாளில் வடலூர் சத்திய ஞான சபைக்குச் சென்று கூடி சோதி வழிபாடு செய்யலாம்!
8.எப்போதும், எவ்விடத்தும், "பசித்திரு", "விழித்திரு" , "தனித்திரு" என்ற பெரு நெறியை மனத்தெண்ணி எல்லாச் செயல்களிலும் கவனம் பேணி வாழ வேண்டும்.
9.வழிபடும் முன்னும் பின்னும், எப்போதும் யாண்டும் "அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி" மகா மந்திரத்தை ஓதவேண்டும். அருட்பெருஞ்சோதி கோடியின் அடியில் மனங்கூடி நின்று செயல்படவேண்டும்
10.இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க.
மனிதநெறி
1. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் ஆண்டவனின் படைப்பேயாகும். இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் கொள்ள ஒன்றுமில்லை. எனவே, இனம், சமயம், மார்க்கம் என்றோ சாதி, குலம், வருணம் என்றோ தங்களுக்குள் எள்ளளவும் பேதமுறக்கூடாது. அருட்பெருஞ்சோதி ஆண்டவரே அனைவர்க்கும் தாய், தந்தை, குருவாக உள்ளார்.
2.தயவு, கருணைக் கொன்டு அனைவரையும் நேசிப்பதுடன் அற்றார் அழிபசி தீர்த்தல், அகப்பிணி, புறப்பிணி போக்கல் போன்ற உயிரோழுக்கமே வீடுபேற்றைத்தருகின்ற அருள் முயற்சிகளாகும்.
3.புகை பிடித்தல், மது அருந்துதல், புலால் உண்ணல் மூன்றையும் கட்டாயம் நீக்கப்படுதல் வேண்டும். சூது, பேராசை, பொறாமை, ஆணவம், காமம், கோபம் தவிர்த்து, வாழும் ஆன்மநேய ஒருமைபாட்டு வாழ்வே அறங்கனிந்த பக்திவாழ்வாகும்.
4.சாதி, சமயப்பற்று நீங்கி ஆண்டவர் ஒருவரே என்பதுபோல் மனிதகுலம் யாவும் ஒன்றே என்று உணர்ந்து உலக ஆண்ம நேய ஒருமைப்பாட்டுரிமை கொண்டு எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி தயவொழுக்கம் பேணி வாழும் ஒவ்வொருவரும் சன்மார்க்க சங்கத்தின் அக உறுப்பினராவார்.
பொது நெறி
1.உழைத்துப் பொருளீட்டி உண்டுயிர்த்து வாழல் வேண்டும். வட்டி வாங்குதல் கூடாது. கிட்டியவரை எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க முயல வேண்டும்.
2.ஒவ்வோருவரும் தாய்மொழியும் நாட்டு மொழியும் கற்றிருப்பதுடன் உலகத் தொடர்புக்கேற்ற ஒருமொழியையும் கற்றிருத்தல் வேண்டும்.
3.ஒவ்வொருவரும் அடிப்படைக்கல்வியுடன் வாழ்க்கை நடத்த தன் அறிவிற்கு ஏற்றதொரு தொழிற்கல்வியும் கற்றிருப்பது முக்கியம். எனவே, தொழிற்கல்வி பயிற்றுவித்தல் வேண்டும்.
4.எல்லா மக்களுக்கும் திருக்குறள் நன்நெறியுடன் தியான வழிபாடு, சமயம் பற்றிய வகுப்புக்கலை நடத்துதல் வேண்டும்.
5.ஒவ்வொரு நாளும் செய்யும் எல்லாப் பொது வேலைகளிலும் அனைத்துக் குடும்பக் கடமைகளிலும் ஒழுங்கும், அழகும், நேர்மையும் மிளிரும்படியாகச் சத்தியமாகச் செய்ய வேண்டும்.
உணவு உடைநெறி
1.புலாலை முற்றாக நீக்க வேண்டும். மது அருந்துதல், புகைபிடித்தல் அவசியம் நீக்குதல் வேண்டும். பொருந்திய மரக்கறி உணவுகளையும், பழங்களையும் போதுமான அளவு உண்ணுதல் வேண்டும். இதனால் வாழ்நாள் முழுவது நோயின்றி வாழலாம்.
2.பருவ காலத்திற்கும் தட்ப வெட்ப நிலைகளுக்கும் தொழிலுக்கும் ஏற்ற உடைகளை உடுத்திக் கொள்க! ஆனால் வழிபாட்டுக் காலங்களில் வெள்ளாடையே அணிந்து கொள்க. வெளியில் காலில் செருப்பணிந்து செல்க.
3.காப்பி, தேநீர் நீக்குக. பால், இளநீர், வெந்நீர் அருந்திப் பழகுக. எதிலும் அளவும் நிதானமும் பெறுக.
0 Comments:
Post a Comment