best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Sunday, January 2, 2011

சித்தர்கள் காட்டிய கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவிலும்..!

 
'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
-ஆசான் திருமூலர்-

நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து,வென்று சிவத்தை(கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை(சித்தர்களை)வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.


"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"
- ஆசான் திருமூலர்

என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!

என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.
-ஆசான் வள்ளலார் - 14.

குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.
-ஆசான் கருவூர் முனிவர் -11-

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :;

சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.

எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.

இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.

எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.

  நன்றி.

சித்தநெறி

சித்தர்கள் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி
இறைப்பொருளுடன் ஒன்றுவதையே ஒருவிதமான ரசவாதமாகப் பயின்றனர். இதையே 'தெய்வீக ரசவாதம்' என்றும் 'பேரின்பரசவாதம்', 'இன்பரசவாதம்', என்றும் 'ஞானரசவாதம்' என்றும் சொல்வார்கள். 


செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச்
பொன்னான திருவம்பலவே.


என்று திருமூலர் கூறியிருக்கிறார்.


தூரத்தில் இருக்கும் மலையைக் கிட்டத்தில் தோன்றச் செய்து, கிட்டத்தில்
இருந்த மலையைத் தூரத்திற்குச் செல்லவைப்பது; ரொம்பவும் கிழட்டு
ஆசாமிகளை இளைஞர்கள் ஆக்குவது; குழந்தைகளாக இருக்கும் மக்களைக்
கிழடாக ஆக்குவது;


ஆணைப் பெண் வடிவிலும் பெண்ணை ஆண்வடிவிலும் தோன்றச்
செய்வது; மலடியைப் பிள்ளைபெறச் செய்தல்; அங்கவீனர்களுடைய
குறைகளைப் பலரும் காணும்போதே உடனே தீர்த்து அவர்களைச்
சீர்படுத்துவது; நாலு லோகத்தையும் பொன்னாக மாற்றுவது.
கையில் வைத்திருக்கும் மாத்திரைக்கோலை ஆகாயத்தில் வீசி எறிந்து,
அதை அப்படியே நெட்டுக்குத்தலாய் நிறுத்தி, அதன்மேல் ஊசியை
நெட்டுக்குத்தலாய் நிறுத்தி, அந்த ஊசியின் முனைமேல் ஒரு காலின்
பெருவிரலை ஊன்றி அசைவின்று நின்று, அதன்பின்னர் அதே
ஊசிமுனைமீது தலைகீழாக நின்று பாதங்கள் மேலே வானில் மலர்ந்திட
அப்படியே சுழல்வது; பறந்து சென்று விண்ணில் தாவி மேகத்தைப் பிடித்து,
இடி தோன்றச்செய்து, அந்த மேகத்திலிருந்து குடிநீரைப் பிழிந்தெடுத்து
பார்ப்பவர்களெல்லாம் அதிசயம்போல் காட்டுவது.

 

இது போன்ற
சித்திகளைப் பற்றி ஏராளமான விபரங்களைப் பெரும் பெரும் சித்தர்கள் எழுதியுள்ளார்கள்.சித்தம் போக்கு சிவன்போக்கு என்பது முதுமொழி. அஃதாவது மனம் போன போக்கெல்லாம் போகக் கூடியவர் சிவபெருமான் என்பதல்ல இதன் கருத்து. சிவனுடைய போக்கு அன்பு நிலை. அதனாலேயேஅன்பே சிவம்என்றார். திருமூலரும்,

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே
என்கிறார்.
இவ்வன்பு நிலையை மையமாகக் கொண்டு இறைவனை நேசித்தவர்கள் சித்தர்கள். அதனால் சித்தர்கள் பின்பற்றிய வழி அன்பு நெறியாகும்.
கடவுள் வெளியில் இல்லை , நம் உள்ளத்திற்குள்ளே இருக்கின்றான் என்று கூறி வலியுறுத்தியவர்கள் சித்தர்கள்.
சித்தர்கள் மெய்யறிவினால் ஐம்புலனைக் காத்து வாழ்வதுதான் முக்தியாம் என்கின்றனர். ஐம்புலன்களின் உணர்வுகளை வழிமுறையோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்பொறிவாயில் ஐந்து அவித்தல்என்றும், சிவநெறியைச் சார்கின்ற அறிவு பெற்று, வரும் வழியைத் தெரிந்து கொண்டால் அதன்பின் இந்த உடம்பு சாவை அடைவதில்லை என்றும்,
ஐந்து புலன்களின் அவாவைக் கட்டறுத்திருந்தால் இந்த உடம்புக்குச் சாவேயில்லை என்றும் கூறுகின்றனர்.
உடம்பினை முழுவதும் அழியாமல் காத்துக் கொள்ள முடியும். அதற்குவழி ஒன்றே தான். குண்டலி யோக சாதனையால் மூலதாரத்தினின்று எழுப்புகின்ற குண்டலினி சக்தியை நெற்றிக்கு நேராகச் சுழிமுனையிலே வியாபித்திருக்கும் ஞானாக்கினியைக் காண வேண்டும். அப்படிக் கண்டு விட்டால் உடம்பானது என்றைக்கும் அழியாதிருக்கும் என்று கூறி, இதுவே சாகாக் கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு என்கின்றனர். இச்சாகாக் கலையைப் பற்றிச் சித்தர்கள் விரிவாகக் கூறுகின்றார்கள்.
 
சித்த வைத்தியர்கள் அல்லது சித்தர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, நோயினை நீக்குவர். மலைகளிலிருந்து கொண்டு வரும் மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் தருவர். இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். இதனால் எந்த விதமான பின் விளைவும் இருக்காது. தீராத வியாதிகளும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் சித்த வைத்தியம் ஆகும். இவ்வைத்தியத்தினை எல்லாச் சித்தர்களும் பின்பற்றியுள்ளனர். சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை, நூல்களை
படைத்துள்ளனர். மொழி நூல், யோகநூல் ; மந்திரம் ; தந்திரம் ; யந்திரம் ;மருத்துவ நூல் ; புவியியல் நூல் ; தாவரயியல் நூல் ; சோதிட நூல் ;கணித நூல் ; வானநூல் என தமிழுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

சில அனுவபங்களை படித்தால் புரியும் , சில கேட்டால் , சில நுகர்ந்தால், சிலவே உணர்ந்தால் புரியும். அத்தனை விதங்களிலும் , நிறைவாய் , சுகானுபவமாய் நமக்கு சாந்தமும் -இன்பமும் அளிப்பது சித்தர் இலக்கியம்.


மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தை எண்ணி பங்கம் போதாதேதங்க இடம் பாரப்பா….

 
இதுவே சித்தர்களின் கொள்கை. நலம் சிறக்க , நல்லன விளைக.

Saturday, January 1, 2011

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே

;;

TIME