best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Saturday, February 26, 2011

பட்டினத்தார்-பாடல்கள்

பட்டினத்தார்-பாடல்கள்

ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 1

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைசுற்றி,
முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்த பின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கெண்ன? காண்கயிலாபுரிக் காளத்தியே! 2

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே? 3

நீறார்த்த மேனியும் ரோமஞ் சிலிர்த்து உளம் நெக்கு நெக்குச்
சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி, நின் சீரடிக்கே
மாறாத் தியான முற்று ஆனந்த மேற்கொண்டு மார்பிற் கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடைப்ப தென்றோ? கயிலாயத்தனே. 5

செல்வரைப் பின் சென்று சங்கடம் பேசித், தினந் தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்
எல்லையிற் புக்கிட ஏகாந்தமாய் எனக்காம் இடத்தே
அல்லல் அற்று என்றிருப்பேன் அத்தனே, கயிலாயத்தனே. 6

வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன் வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன், புகழ் வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயல் ஐஞ்செழுத்தாம்
அருந்தேன் அருந்துவன் நின் அருளால், கயிலாயத்தனே. 8

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்து உருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும், நின் ஐஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே. 13

பிறக்கும் பொழுது கொடு வந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடு போவ தில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச் செல்வஞ் சிவன் தந்த தென்று கொடுக்க அறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7

நல்லாய் எனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப்
பொல்லா எனைக் கொன்று போடும் பொழுதியல் பூசைசெபஞ்
சொல்லா நற்கோயில் நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லா முடிந்தபின் கொல்லு கண்டாய் கச்சியேகம்பனே. 32

நாறு முடலை, நரிப்பொதி சோற்றினை, நான் தினமுஞ்
சோறுங் கறியும் நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும் மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில் விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே. 34

எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லான் அலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன் செயலே என்பார் காண் கச்சியேகம்பனே. 37

பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர், பூவை அன்னாள்
தன்னை நினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்
உன்னை நினைந்திங் உனைப் பூசியாத உலுத்த ரெல்லாம்
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே. 38

கொன்றேன் அனேக முயிரை எலாம் பின்பு கொன்று கொன்று
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்க வென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம் நீபொறுப்பாய்
என்றே உனை நம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே. 40

ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள
பேரிருந்தென்ன ? பெற்ற தாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே. 41

கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள்
கல்லாமற் கைதவரோடு இணங்காமற் கனவினும் பொய்
சொல்லாமற் சொற்களைக் கேளாமற் தோகையர் மாயையிலே
செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே. 6

முடிசார்ந்த மன்னரு மற்ற முள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதுங் கண்டு பின்னு இந்தப்
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லாற் பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டு மென்றே அறிவாரில்லையே. 7

0 Comments:

Post a Comment



TIME