திருவேகம்பவிருத்தம்
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?
2. திருத்தில்லை
காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
போம்பிணம் தன்னைத் திரளாகக்கூடிப் புரண்டினிமேற்
சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்கரனே. 1
சோறிடும்நாடு, துணிதருங் குப்பை தொண்டன்பரைக்கண்டு
ஏறிடுங்கைகள் இறங்கிடுந் தீவினை, எப்பொழுதும்
நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம்கண்டால்
ஊறிடுங் கண்கள் உருகிடும்நெஞ்சமென் னுள்ளமுமே. 2
அழலுக்குள்வெண்ணெய் எனவே உருகிப் பொன்னம்பலத்தார்
நிழலுக்குள் நின்றுதவம் உஞற்றாமல் நிட்டூரமின்னார்
குழலுக்கிசைந்த வகைமாலை கொண்டு குற்றேவல்செய்து
விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேனென் விதிவசமே. 3
ஓடாமற் பாழுக்கு உழையாமல் ஓரமுரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங்கோபம்நெஞ்சில்
நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வந் தருவாய், சிதம்பரதேசிகனே. 4
பாராம லேற்பவர்க் கில்லையென்னாமற் பழுதுசொல்லி
வாரமற் பாவங்கள் வந்தணுகாமல் மனமயர்ந்து
பேராமற் சேவைபுரியாம லன்புபெறா தவரைச்
சேராமற் செல்வந்தருவாய், சிதம்பர தேசிகனே. 5
கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள்
கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய்
சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர்மாயையிலே
செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே. 6
முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே. 7
காலையுபாதி மலஞ்சல மாமன்றிக் கட்டுச்சியிற்
சாலவுபாதி பசிதாக மாகுமுன் சஞ்சிதமாம்
மாலையுபாதி துயில்காம மாமிவை மாற்றிவிட்டே
ஆலமுகந்தரு ளம்பலவா, என்னை யாண்டருளே. 8
ஆயும்புகழ்ந்தில்லை யம்பலவாண ரருகிற் சென்றாற்
பாயுமிடபங், கடிக்குமரவம், பின்பற்றிச் சென்றாற்
பேயுங்கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்
போயென்செய்வாய் மனமே ! பிணக்காடவர் போமிடமே. 9
ஓடுமெடுத்தத ளாடையுஞ் சுற்றி, யுலாவிமெள்ள
வீடுகடோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்போ
லாடுமருட் கொண்டிங்கு அம்பலத்தேநிற்கு மாண்டிதன்னைத்
தேடுங் கணக்கென்னகாண் ? சிவகாம சவுந்தரியே. 10
ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானுமிங் கொன்றோ டொன்றை
மூட்டுவிப்பானு முயங்குவிப்பானு முயன்ற வினை
காட்டுவிப்பானு மிருவினைப் பாசக் கயிற்றின்வழி
யாட்டுவிப்பானு மொருவனுண் டேதில்லை யம்பலத்தே. 11
அடியார்க் கெளியவ ரம்பலவாண ரடிபணிந்தால்
மடியாமற்செல்வ வரம்பெறலாம், வையம் ஏழளந்த
நெடியோனும் வேதனுங்காணாத நித்த நிமலனருட்
குடிகாணு நாங்களவர்காணு மெங்கள் குலதெய்வமே. 12
தெய்வச் சிதம்பரதேவா, உன்சித்தந் திரும்பிவிட்டாற்
பொய்வைத்த சொப்பனமா மன்னர்வாழ்வும் புவியுமெங்கே?
மெய்வைத்த செல்வமெங்கே? மண்டலீகர்தம் மேடையெங்கே?
கைவைத்த நாடகசாலையெங்கே? இது கண்மயக்கே. 13
உடுப்பானும் பாலன்னமுண்பானு முய்வித்தொருவர் தம்மைக்
கெடுப்பானு மேதென்று கேள்விசெய்வானுங் கெதியடங்கக்
கொடுப்பானுந் தேகியென்றேற்பானும் ஏற்கக் கொடாமனின்று
தடுப்பானு நீயல்லையோ? தில்லையானந்தத் தாண்டவனே. 14
வித்தாரம் பேசினுஞ் சோங்கேறினுங் கம்பமீதிருந்து
தத்தாரவென் றோதிப் பவுரிகொண்டாடினுந் தம்முன்தம்பி
யத்தாசைபேசினு மாவதுண்டோ? தில்லையுண்ணிறைந்த
கத்தாவின் சொற்படியல்லாது வேறில்லை கன்மங்களே. 15
பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே. 16
தவியாதிரு நெஞ்சமே, தில்லைமேவிய சங்கரனைப்
புவியார்ந் திருக்கின்ற ஞானாகரனைப் புராந்தகனை
அவியாவிளக்கைப் பொன்னம்பலத் தாடியை யைந்தெழுந்தாற்
செவியாமல் நீ£செபித்தாற் பிறவாமுத்தி சித்திக்குமே. 17
நாலின் மறைப்பொரு ளம்பலவாணரை நம்பியவர்
பாலிலொருதரஞ் சேவிக்கொணா திருப்பார்க் கருங்கல்
மேலிலெடுத்தவர் கைவிலங்கைத் தைப்பர், மீண்டுமொரு
காலினிறுத்துவர், கிட்டியுந் தாம்வந்து கட்டுவரே. 18
ஆற்றோடு தும்பை யணிந்தாடும் அம்பலவாணர்தம்மைப்
போற்றாதவர்க்கு அடையாளமுண் டேயிந்தப் பூதலத்திற்
சோற்றாவி யற்றுச்சுகமற்றுச் சுற்றத் துணியுமற்றே
ஏற்றாலும் பிச்சைகிடையாம லேக்கற் றிருப்பார்களே. 19
அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை, அம்மை சிவகாமசுந்தரி நேசனை, யெம்
கூத்தனைப் பொன்னம் பலத்தாடு மையனைக் காணக்கண்கள்
எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றவே. 20
முதலாவது கோயிற்றிருவகவல்
(திருமண்டில ஆசிரப்பா)
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரி னலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க! 5
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன, 15
தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை, 20
இன்பமும் துன்பமும் இருநிலத் தருந்தினை;
ஒன்றென் றெழியா துற்றனை, அன்றியும்;
புற்பதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம்
என்ன நின்றியங்கு மிருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை, இதனுள், 25
பீளையு நீரும் புலப்படு மொருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி;
சளியு நீருந் தவழு மொருபொறி;
உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி;
வளியு மலமும் வழங்கு மொருவழி 30
சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச், சடைமுடிக் கடவுளை 35
ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை;
நிழலெனக் கடவா நீர்மையடு பொருந்தி,
எனதற நினைவற இருவனை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபர மறஒரு 40
முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே! 45
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே!
இரண்டாவது கோயிற்றிருவகவல்
காதள வோடிய கலகப் பாதகக்
கன்னியர் மருங்கிற் புண்ணுட னாடுங்
காதலுங் கருத்து மல்லால்நின் னிருதாள்
பங்கயஞ் சூடப் பாக்கியஞ் செய்யாச்
சங்கடங் கூர்ந்த தமியேன் பாங்கிருந் 5
தங்கோ டிங்கோ டலமருங் கள்வர்
ஐவர் கலகமிட் டலைக்குங் கானகம்;
சலமலப் பேழை; யிருவினைப் பெட்டகம்;
வாதபித் தங்கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோ லுதிரக் கட்டளை; 10
நாற்றப் பாண்டம், நான்முழத் தொன்பது
பீற்றத் துண்டம், பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்,
ஆசைக் கயிற்றி லாடும் பம்பரம்
ஓயா நோய்க்கிடம், ஓரு மரக்கலம்; 15
மாயா விகாரம், மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி, தூற்றம் பத்தம்;
காற்றில் பறக்கும் காணப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை,
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை 20
ஈமக் கனலி லிடுசில விருந்து;
காமக் கனலிற் கருகுஞ் சருகு;
கிருமிக் கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பாவக்கொழுந் தேறுங் கவைக்கொழு கொம்பு
மணமாய் நடக்கும் வடிவின் முடிவிற் 25
பிணமாய்க் கிடக்கும் பிண்டம், பிணமேல்
ஊரிற் கிடக்க வொட்டா வுபாதி
காலெதிர் குவித்த பூளை, காலைக்
கதிரெதிர்ப் பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத் தியங்கு மிந்திர சாபம்; 30
அதிரு மேகத் துருவி னருநிழல்
நீரிற் குமிழி; நீர்மே லெழுத்து;
கண்டுயில் கனவிற் கண்ட காட்சி;
அதனினும் பொல்லா மாயக் களங்கம்;
அமையு மமையும் பிரானே, யமையும் 35
இமைய வல்லி வாழியென் றேத்த
ஆனந்தத் தாண்டவங் காட்டி
ஆண்டுகொண் டருள்கைநின் னருளினுக் கழகே. 38
மூன்றாவது கோயிற்றிருவகவல்
பாற்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற் றடக்கிய சிவனே யடைக்கலம்!
அடங்கலு மடக்கிடுங் கடுங்கோலைக் காலனைக்
காலெடுத் தடக்கிய கடவுள்நின் னடைக்கலம்
உலகடங் கலும்படைத் துடையவன் றலைபறித்து 5
இடக்கையி லடக்கிய இறைவ! நின் னடைக்கலம்!
செய்யபொன் னம்பலச் செல்வ! நின் னடைக்கலம்!
ஐய! நின் னடைக்கலம்! அடியநின் னடைக்கலம்;
மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்;
விழுப்பொரு ளறியா வழுக்குறு மனனும் 10
ஆண மலத்துதித் தளைந்ததி னுளைத்திடும்
நிணவைப் புழுவெனத் தெளிந்தெடு சிந்தையும்
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்
தவறும் அழுக்காறும் இவறுபொய்ச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சினம் 15
இகலும், கொலையும், இழிப்புறு புன்மையுங்
பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும்
முக்குண மடமையும், ஐம்பொறி மயக்கமும்
இடும்பையும் பிணியு மிடுக்கிய ஆக்கையை
உயிரெனுங் குருருவிட் டோடுங் குரம்பையை 20
எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்து மொழுக்குவிழுங் குடிலைச்
செம்பெழு வுதிரச் சிறுபுழுக் குரம்பையை,
மலவுடற் குடத்தைப் பலவுடற் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் 25
கொலைபடைக் கலம்பல கிடக்கும் கூட்டைச்
சலிப்புறு வினைப்பல சரக்குக் குப்பையைக்
கோள்சரக் கொழுகும் பீறல் கோணியைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை
ஐம்புலப் பறவை யடையும்பஞ் சரத்தை 30
புலராக் கவலை விளைமரப் பொதும்பை,
ஆசைக் கயிற்றி லாடுபம் பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை,
மக்கள் வினையின் மயங்குங் திகிரியைக்
கடுவெளி யுருட்டிய சகடக் காலைப் 35
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத் தலைப்பக் கலங்கிக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடு மியங்குபுற் கலனை
நடுவன்வந் தழைத்திட நடுங்கிடும் யாக்கையைப் 40
பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக் கபயநின் னடைக்கலம்
வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுணின் னடைக்கலம்
இமையா நாட்டத் திறையே! அடைக்கலம். 45
அடியார்க் கெளியாய்! அடைக்கல மடைக்கலம்;
மறையவர் தில்லை மன்று நின் றாடிக்
கருணை மொண்டலையெறி கடலே! அடைக்கலம்;
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்துப்
பாசிழைக் கொடியடு பரிந்தருள் புரியும் 50
எம்பெருமா நின்இணை யடிக்கு கபயம்;
அம்பலத் தரசே அடைக்கல முனக்கே!