best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, November 5, 2010

கடுவெளிச் சித்தர் பாடல்

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நந்த வனத்திலோ ராண்டி - அழகிய நந்தவனமான இவ்வுலகில் ஒரு ஆண்டி(மனிதன்)
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் - குயவனான இறைவனிடம் நாலும் ஆறும் - ஆக பத்து மாதமாக வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - ஒரு தோண்டியான குழந்தையை பெற்றான்.
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. - அதை சீராக பயன்படுத்தாமல்(கூத்தாடி), நல்வழியில் செலுத்தாமல் (கூத்தாடி), பாபங்களை செய்து கிடைத்தற்கரிய மாணிட பிறவியை வீணாக்கினான் (போட்டுடைத்தாண்டி).

கடுவெளிச் சித்தர் பாடல்

நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
மாயை இப்பாடலில் விளக்குகிறார்
நீர்மேற் குமிழியிக் காயம் - வினாடி நேரத்தில் உருவாகி, க்ஷன நேரத்தில் மறையும் நீர்குமிழி போன்ற வாழ்க்கை.
இது நில்லாது போய்விடும் நீயறிமாயம் - இது அநித்தியமானது, நிலையில்லாத நீயறியாத மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - உலகில் உயர்ந்தது அன்பு
சற்றும் பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். - உன்னை மாற்றாமல் இருக்க பண்ணும் உபாயம்

கடுவெளிச் சித்தர் பாடல்

சரணம் # 2

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம்.

பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சொல்லருஞ் சூதுபொய் மோசம் - சூது, பொய், மோச சிந்தனை அனைத்தும்
செய்தால் சுற்றத்தை - செய்தால் உன் உறவினர், நட்பு சுற்றும் அனைத்தையும்
முற்றாய்த் துடைத்திடும் நாசம் - களைந்துவிடும்
நல்லபத் திவிசு வாசம் - சிவ பக்தி, பகவத் பக்தி போன்ற நல்ல பக்தியும் எஜமானரிடத்தில் விசுவாசமும் கொண்டவர்கள்
எந்த நாளும் - ஞாலம் உள்ள மட்டும்
மனிதர்க்கு நம்மையாய் நேசம். - ராமரை போல், பரசு ராமரை போல், கண்ணனை போல், ஈசனை போல், மனிதர்க்கு நல்லுதாரனமாய் தோன்றுவர்.

கடுவெளிச் சித்தர்




பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய்தேயமன் கொண்டோடிப் போவான்
(பாபஞ்)

சரணம்
சாபங்கொடுத்திட லாமோ? - விதி
தன்னைநம்மாலே தடுத்துடலாமோ?
கோபந் தொடுத்திடலாமோ?-இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ
(பாபஞ்)
பாபஞ்செய்யாதிரு - பாவமான செயல்களை செய்யாதிரு
மனமே - மனமான மாயையே,
நாளைக் - வருங்காலத்தில்
கோபஞ்செய்தே - அப்பாவத்திற்க்கு கோபம் கொண்டு
யமன் - நமனான அந்த யமதருமர்
கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன் வசம் கொண்டு செல்வான்
சாபங்கொடுத்திட லாமோ? - சாபம் கொடுக்காதே
விதி தன்னைநம்மாலே தடுத்துடலாமோ? - அவர் விதியை நம்மால் மாற்ற
முடியாது
கோபந் தொடுத்திடலாமோ? - உயிர்களிடத்தில் கோபம் கொள்ளாதே
இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ - உன் சொற்-செயல்களை
மற்றவரிடத்தில் திணிக்காதே
பாபஞ்செய்யாதிரு - பஞ்சமா பாவமான செயல்களை செய்யாதிரு

மனமே - மக்கள் மனமான மாயையே,

நாளைக் - வருங்காலத்தில்

கோபஞ்செய்தே - அப்பாவத்தால் கோபம் கொண்டு

யமன் - நமனான அந்த யமதருமர்

கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன்
வசம் கொண்டு செல்வான்

குதம்பைச் சித்தர் பாடல்கள் 1

குதம்பை சித்தர், மக்களுக்கு சொல்லும் கருத்தை குதம்பை என்ற ஒரு பெண்ணுக்கு சொல்வது போல் தம் பாடலில் சொல்கிறார்.


குதம்பை சித்தர், சித்தர்களின் பன்பிற்க்கு சற்றும் மாறாதவர் என்று தான் சொல்ல வேண்டும்.




வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ? 1


கண்டதை மட்டும் உண்மை என்று இருப்போர்க்கு அத்தாட்சி எதற்க்கு?
இதன் மூலம் கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் என்கிறார் மேலும் உண்மையை அறியும் வாய்ப்புகள் இருந்தாலும் கேட்பதில்லை..


மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ? 2


இவ்வுடலால் பெற்ற பொருள் கொண்டு இன்பமுரும் மனிதருக்கு கேட்டதை தரும் கற்பகங்கள் எதற்க்கு?


காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ? 3


காண்பதை கூட காணமல் கருத்தில் சிக்கியிருப்போர்க்கு வீணான ஆசை எதற்க்கு,அது (அவ்வுடலின் உயிர்) இருந்தென்ன போயென்ன?


வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ? 4


வஞ்சகமில்லாத வழியான சிவபதத்தை கண்டோர்க்கு சஞ்சலம் தான் சஞ்சலத்தில் விழும்!


ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ? 5


அனைத்திற்க்கும் ஆதாராமான, எவருகும் எட்டாத அச்சிவனின் அடியையும் முடியையும் கண்டவர் சப்தநாடிகளும் ஒடுங்கி நிற்பர், எவ்விதமான வாத பிரதி வாதங்களும் அங்கு இடம் காணாது.


நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ? 6


எப்போதும் ஊன் உரக்கமில்லாமல் சிவநினைவோடு இருப்போர்க்கு அச்சாரம் தேவை இருக்காது.


தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ? 7


பூதநாதனின் தந்திரங்கள் நிறைந்த சன்னிதியில் இருப்போர்க்கு, அவன் நாம நினைவை தவிர மந்திரங்கள் கூட தேவை இருக்காது.


சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ? 8


உண்மையான தவத்தில் இருப்போற்க்கு, உயர்வு என்ற போதைக்கு அடிமை ஆவதில்லை.




நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ? 9


ஆவுடை நாதனின் நடுவில் இருக்கும் லிங்க சொருபத்தில் நாட்டம் கொண்டோர்க்கு துக்கம், சோர்வு, போன்ற எதிர்மரை விளைவுகள் வருவதில்லை.


முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ? 10


மெய்ஞானிகள் தாம் பேசுவதையே இறைவன் கேட்க வேண்டும் என்று எண்ணுபவரல்லர் ஆகவே அவர்களுக்கு பேச்சு என்னும் சத்தங்களின் தேவை இருக்காது.


உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11


வாயுவை உயர்த்தி தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்டகோடியை கண்டவர்களுக்கு இவுலகின்பகளின் தேவைஇருக்காது.


வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ? 12


துக்கமே வாழ்க்கையை நெறிபடுத்தும், அந்த துக்கதிலும், பிற இன்பத்திலும் வெளியொளியான அடியை கண்டோர்க்கு மோகம் நிறைந்த, சிற்றின்ப ஏகாந்த நினைவின் தேவைஇருக்காது


சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ? 13


இறப்பை போக்கும் சிவ வழியைவிட்டு, தம் தனிவழி சென்றோர்க்கு இனியதிலும் இனியதான பேரானந்த ஏகாந்தமிருக்காது.


அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ? 14


வேற்றுமை அந்தரங்கத்தில் உழழும் மூடர்கள், சிவதந்திர நினைவில் வரமாட்டர்.


ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ? 15


ஆனந்த தாண்டவ நாதனை எப்போதும் நினைவில் கொன்டோர்க்கு உலகஞானமெதற்க்கு?


சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ? 16


நாதன் தாள் கூடத்தை அனுதினம் துதிப்போற்க்கு, பத்திர பட்டயமெதற்க்கு.




முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ்
ஞானிக்குச் சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ?


அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ?


முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ?


அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ?


அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி ?


வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ?


மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ?


செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ?


கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ?


காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ?


வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?


மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?


பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ?


தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ?


தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ?


பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ?

சிவவாக்கியர் தைமாதம் மக நக்ஷத்திரத்தில் சிம்ம ராசியில் பிறந்தவர். இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். "காசியில் செருப்புத்தைத்த ஒரு சித்தரே இவரது ஞானகுரு.

அவர், " சிவவாக்கியா! பஞ்சமா பாதகங்கள் புரியாமல் எத்தொழில் செய்து பிழைத்தாலும் அது உயர்ந்ததே" என்பார்.

பயிற்சி முடியும் தருவாயில் "சிவவாக்கியா! இந்தப் பேய்ச்சுரைக்காயை கங்கையில் அமிழ்த்தி எடுத்துவா" என்றார் குருநாதர்.

'எதற்கு' என்று கேட்காமல் கீழ்படிந்தார் சீடர்.

இவ்வளவு காலமும் சிவவாக்கியாரின் பணிவை பார்த்த குரு நாதர்....

“அப்பா! சிவவாக்கியா! முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி பேய்ச்சுரைக்காயையு கொடுத்து “இதை சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார்.

அதோடு..... கொஞ்சம் மணலையும் கொடுத்து " இவை இரண்டையும் சமைத்துத் தருபவளை மணந்து கொள். அவள் உனக்கு ஏற்றவளாயிருப்பாள்" என ஆசீர்வதித்தார்.

சிவவாக்கியருக்கு கட்டு மஸ்தான உடல்வாகு, கருணையான முகம்.சுருட்டை முடி. பல மங்கையர் அவரை மணக்க ஆசை கொண்டனர். அவரது நிபந்தனையைக் கேட்டதும் பைத்தியக்காரன் என்று ஒதுங்கினர்.

ஆயின் சிவவாக்கியர் நம்பிக்கை தளரவில்லை. ஒருநாள் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்திருந்த பகுதியில் நுழைந்தார்.

ஒரு கூடாரத்திலிருந்து வெளிவந்த ஒரு நங்கை ஏதோ உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கினாள். "அம்மணி உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?" என்று கேட்டார் அவர். "இல்லை முனிவரே என்றாள் அந்நங்கை.

"உன்பெற்றோர்கள் எங்கே?"

"சாமி அவர்கள் வனத்தில் மூங்கில் வெட்டச் சென்றிருக்கின்றனர். மூங்கிலைப் பிளந்து முறம் செய்து கிராமத்தில் விற்று வயிறு வளர்க்கிறோம் சாமி! அது தான் எங்கள் குலத் தொழில். நீங்க பசியோடு இருக்கிறமாதிரித் தோன்றுகிறதே.

"என்ன சாப்பிடுவீங்க? " என்று கேட்டாள்.

"இதோ இவற்றைச் சமைத்துத் தரவேண்டும்" என்று பேய்ச்சுரைக்காயையும் மணலையும்
காண்பித்தார்.

அவள் சற்று யோசித்தாள்... இவரிடம் ஏதோ விசேடத் தன்மையிருக்கின்றது. நம்மைச் சோதிக்கிறார். முடியாததைச் செய்யச் சொல்வாரா? என்று எண்ணி அவற்றைப் பணிவோடு வாங்கிக்கொண்டு போனாள்.

அடுப்புப் பற்றவைத்து பானையில் நீர்வார்த்தாள்.... நீர் கொதித்ததும் சிவபெருமானைத் தியானித்து அதில் மணலைக் கொட்டினாள். என்ன ஆச்சரியம். சற்று நேரத்தில் மணல் பொல பொலவென்று சாதமாகப் பொங்கி வந்தது. கிளறிவிட்டாள். சாதம் வெந்ததும் இறக்கி வைத்தாள். பேய்ச்சுரைக்காயை நறுக்கி பொறியலாகவும், கூட்டாகவும் செய்தாள்.

"ஐயா! உணவு தயாராகிவிட்டது. சாப்பிட வாருங்கள்" என்று அழைத்தாள் முனிவரை. மணலை எப்படிச் சமைப்பது என்று இவள் தர்க்கவாதம் செய்யவில்லை. இவளேநமக்குத் தகுந்தவள்' என்றெண்ணியபடி உணவு அருந்த அமர்ந்தார் சிவவாக்கியர். பொல, பொல என்று அன்னமும், பேய்ச்சுரைக்காய் கூட்டும், பொறியலும் இலையில் விழுந்தன. ஒருபிடி உண்டார். பேய்ச்சுரைக்காய் கசந்து ருசிக்காமல் அமுதமாக இருந்தது. கங்கை மாதாவும் கற்ப்புக்கரசியும் தொட்டதின் பலன் என்பதை உணர்ந்தார்.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அப்பெண்ணின் பெற்றோரும் வந்துவிட்டனர்.
சிவவாக்கியரைப் பணிந்தனர்.

"உங்கள் புதல்வி எனக்கு வாழ்க்கைத் துணைவியானால் என் வாழ்க்கை சிறக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் எண்ணம் எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள்" என்றார்.

குறவர்கள் கூடிப் பேசினர்."சாமி! உங்களுக்குப் பொஞ்சாதி ஆக எங்க குலப் பொண்ணு எம்புட்டுப் புண்ணியம் செய்திருக்கோணும்! ஆனா, அவ எங்களுக்கு ஒரே மக! அவளைக்கண் காணாமக் கொடுக்கமுடியாது சாமி! எங்க கூடவே நீங்க இருக்கிறதானா நாளைக்கே கல்யாணத்தை நடத்திடலாம்" என்று சொல்லி ஆர்வத்தோடு அவர் முகத்தைப் பார்த்தான் பெண்ணைப் பெற்றவன்.

சிவவாக்கியர் சம்மதிக்க நரிக்குறவ மரபுப்படி திருமணம் நடந்தது. மூங்கிலை வெட்டி முறம் செய்யக் கற்றுக்கொண்டார் சிவவாக்கியர். கொங்கணர் இவரைப் பார்க்க அடிக்கடி வருவார். ரசவாதம் தெரிந்தவரான சிவவாக்கியர் வறுமையில் வாடுவதை அறிந்து சிவவாக்கியர் இல்லாத நேரமாய்ப் பார்த்து அவர் குடிலுக்கு வந்தார் கொங்கணர்.

அவர் மனைவியிடம், "அம்மணி! பழைய இரும்புத்துண்டுகள் இருந்தால் எடுத்து வா" என்றார். அவளும் கொண்டுவந்து அவர் முன் வைத்தாள். அவற்றைத் தங்கமாக்கி அவள் கையில் கொடுத்துச் சென்றார் கொங்கணர். சிவவாக்கியர் மூங்கில் வெட்டிச் சேகரித்து தலையில் சுமந்துகொண்டு வந்ததும் அவரிடம் கொங்கணர் வந்து சென்றதைச் சொல்லி தங்கத் துண்டுகளைக் காண்பித்தாள்.

"இது பாஷாணம். இதைக் கொண்டு பாழுங்கிணற்றில் போடு." என்றார்.

நல்ல குலமகளாதலால் கணவர் சொன்னபடி சிறிதும் முகம் மாற்றம் இல்லாமல் அவறைக் கொண்டுசென்று கிணற்றில் எறிந்து வந்தாள் அவள். மறு முறை கொங்கணர் வந்த போது கொங்கண முனிவரே! அறவழியில் எங்கள் இல்லறம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குப் புறம்பாக வேறு மார்க்கத்தில் இயமனைக் கொண்டு வரலாமா?" எனவும் கொங்கணரால் பதில் ஏதும் பேச முடியவில்லை.

ஒரு நாள்... முதிர்ந்த மூங்கிலை வெட்டினார், சிவவாக்கியர். அதிலிருந்துதங்கத் துகள் கொட்டியது. "ஐயோ! எமன்" என்று அவர் ஓட நான்கு குறவர்கள் அதைச் சேகரித்தனர். தங்கத் துகள்களை பங்கீடு செய்கையில் அவர்களுக்குள் சண்டை வந்து நான்கு பேரும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு மடிந்தனர். " அப்போதே சொன்னேனே கேட்டார்களா! தங்கம் எமனாக மாறிக் கொன்றுவிட்டதே" என்று அங்கலாய்த்தார் முனிவர்.
சிவவாக்கியர் நாடிப் பரிட்சை என்ற நூலை இயற்றியுள்ளார். இவர் கும்பகோணத்தில் சித்தியடைந்தார்.

சிவவாக்கியார் சித்தர் பாடல் ஞானத்தெளிவை ஊட்டுபவை. அவரது பாடல்களில் ஞானம் தொனிக்கும்.

"நட்டகல்லை தெய்வம்என்று நாலுபுஷ்பம் சாத்தியே !
சுற்றிவந்து முனுமுனுவென்று சொல்லும் மந்திரம்ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ?
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவைதான் அறியுமோ?"

இது எளிமையாகவே பொருள் விளங்கி கொள்ளும் பாடல்,

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை!
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்,
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்,
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே!!

சீவனாம் சிவன் தன்னுள்ளே எப்படி கலந்துள்ளது, என்பதை அவர் பாடுகிறார் பாருங்கள். ஓடி ஓடி ஓடி ஓடி (நான்குமுறை) சாதாரணமாக இல்லை மிக மிக மிக மிக ஆழமாய் தன்னுள் கலந்துள்ளது. அதை நாடியவர்களும் இங்கே கவனிக்க வெண்டும் நாடினார்கள். ஆனால் இறை தன்னை அடையும் வழி தெரியாமல் நாடுகிறார்கள் என்று அதைத்தான் அவர் கூற வருகிறார். அப்படி நாடியும் கண்டுகொள்ள இயலாது வாழ்வின் நாட்களும் கழிந்துபோய், உடல் வாடி, உள்ளமும் நொந்து வாடி மாண்ட மனிதர்கள் (மனுக்கள்) கோடான கோடியாம்.


இங்கே இன்னொரு பாடலும் நினைவிற்கு வருகிறது...... திருமூலர் பாடல் ஒன்றில்


'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
- திருமந்திரம் (1823)

சிவவாக்கியர் போக முனி பட்டினத்தார், தாயுமானவர் ஆகியவர்களால் பாராட்டப் பெற்றவர்.

ஆக தெளிந்தவர் எல்லாம் விடை பெற்று விட்டார். எல்லோரும் தெளிய நல்ல குரு வாய்க்கட்டும் இறையருளால்.

Thursday, November 4, 2010

அருணகிரிநாதர்

 
 
அருணகிரிநாதர்,  தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது, இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.

இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.

இவரது பிறப்பிடம் திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப் பூம்பட்டினம் என்று சிலரும் சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை.

இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.

என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது.

அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.

திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.

பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ??


கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.

அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.

மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.

சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.

தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காக்ஷி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காக்ஷி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காக்ஷி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. பேரொளி ஒன்று அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அருணகிரியார் காலி விழுந்து மன்னிப்பு கோரினான்.. சம்பாந்தாண்டனை மன்னித்து விட்டு, மன்னனையும் சம்பாந்தாண்டனை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.
அருணகிரிநாதர் இயற்றிய நூல்கள்

கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
கந்தர் அனுபூதி (52 பாடல்கள்)
திருப்புகழ் (1307 பாடல்கள்)
திருவகுப்பு
சேவல் விருத்தம்
மயில் விருத்தம்
வேல் விருத்தம்
திருவெழு கூற்றிருக்கை

;;

TIME