பதினெண்சித்தர்கள் என்ற வரிசையில் சிவவாக்கியரின் பெயர் இடம்பெறவில்லை யெனினும், திருமூலர், சிவவாக்கியர், பட்டினத்தார் எனும் மூவரும் தமிழகத்தின் முப்பெருஞ் சித்தர்களெனப் போற்றப்பட்டு வருகின்றனர். இவர் இயற்றிய நூலுக்கு “சிவவாக்கியம்” என இவரே முதற் காப்புச் செய்யுளில் பெயரிட்டிருக்கின்றார். அதனால் நூலின் பெயரைக் கொண்டு இவருக்கு சிவவாக்கியர் எனும் பெயர் ஏற்பட்டு வழங்கி வருகின்றது. (அவருடைய பாடல் தொகுப்பில் “சிவாயம்” என்ற சொல் அறுபதுக்கும் மேலான இடங்களில் வந்திருப்பதனால் அநேகமாக அவர் இப்பெயரை அடைந்திருக்கலாம் எனக் கருதுவோரும் உண்டு.) பெரிய ஞானக்கோவைக் கணக்குப்படி தத்துவ சித்தாந்தக் கோட்பாடுகளை உட்கொண்ட 550 பாக்களாலான நூல் சிவவாக்கியம். அபிதான சிந்தாமணி எனும் நூலில் காணப்படும் ஒரு கதைக்குறிப்பைத் தவிர இந்நூலின் ஆசிரியரான சிவவாக்கியரைப்பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
சிவவாக்கியர் வேதியர் குலத்திற் பிறந்தவரென்றும், காசிக்குச் சென்ற இவரிடம் செருப்புத் தைப்பது தொழிலான ஒரு சித்தர் கொஞ்சம் மணலும், ஒரு பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து, “எந்தப்பெண் இந்தச் சுரைக்காயையும், மணலையும் சமைத்துப் பரிமாறுகின்றாளோ அவளே உமக்கு மனைவி” என்று கூறியதாகவும், அவ்வாறே சமைத்து உணவிட்ட ஒரு குறப்பெண்ணை இவர் மணந்து இல்லறத்தில் ஈடுபட்டார் எனவும், ஒரு சமயம் மூங்கில் வெட்டும்போது அது பொன் பொழிய அதை ஆட்கொல்லி என வெறுத்து நீத்தார் எனவும், பின்னர் கொங்கண சித்தரின் நட்புடன் ஞானமார்க்கத்தில் திகழ்ந்த சித்தராக விளங்கினார் எனவும் அக்கதை குறிப்பிடுகிறது.
சிவவாக்கியரின் பாடல்களை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது சில பாக்கள் இருமுறை மீண்டும் கூறப்பட்டிருப்பதையும், சிற்சில பாக்களின் சில வரிகள் வேறு பாக்களில் மறுபடியும் வந்திருப்பதையும், சில பாடல்கள் உட்கருத்திலும், நடைநயத்திலும் மற்ற பாடல்களிலிருந்து மாறுபட்டிருப்பதையும் காணலாம். இக்காரணங்களால் சிவவாக்கியத்தின் சில பாடல்கள் இடைச்செருகல்களே என உறுதியாகக் கூறலாம்.
சிவவாக்கியர் பாடல்களின் சிறப்பு அம்சம் யாதெனின், அவற்றில் பக்தி அல்லது கடவுள்பற்றிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்பதேயாகும். திரு.ஏ.வீ.சுப்ரமணிய ஐயர் அவர்களின் “கவிதையும், தமிழ்ச்சித்தர் தத்துவமும்” (Poetry and the philosophy of the Tamil Siddhars) என்ற நூலில் இவ்வாறு கூறியுள்ளார்: “Sivavakkiyar’s poem is a grand remonstrance almost against everything that was held sacred in his time”. அதாவது, “அவரது காலத்தில் புனிதத்தன்மைவாய்ந்தவை எனக் கருதப்பட்டுவந்த ஏறத்தாழ அனைத்தையுமே சிவாவாக்கியர் பாடல்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றன”. இருப்பினும் அவர் ஒரு நாத்திகரோ, லோகாயதவாதியோ அல்லர். மெய்ந்நெறியில் ஆர்வமும், தெய்வ சிந்தனயும் கொண்ட புரட்சியாளரும், சமய ஒருமைப்பாட்டின் ஆதரவாளரும் ஆவார் அவர். சூது தெரியாத, கலப்படமற்ற உளந்திறந்த அறிவுரையையே சிவவாக்கியம் அளித்துள்ளது. தனது “தமிழ் இலக்கிய வரலாறு” (History of Tamil Literature) எனும் நூலில் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இப்பாடல்களை, “ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையால் சிலசமயங்களில் நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் ஆற்றல்வாய்ந்த தெளிவுபடைத்தவை” என்கின்றார். “ஆபாசமானவை என்றும், நயமற்ற வக்கிரமானவை என்றும் விடாப்பிடியான ஒழுக்கக் கொள்கையுடையவர்கள் அழைக்கக்கூடிய சொற்றொடர்களை வரையாது பயன்படுத்துவதில் சிவவாக்கியர் சற்றும் தயக்கம் காட்டவில்லை”. மனிதரின் நிலையற்ற காமவேட்கையையும், மனிதப்பிறப்பின் உயிரியல் ரீதியான உண்மைகளையும் ஏளனத்தொனியில் அவரது பாடல்களில் இடையறாது சுட்டிக்காட்டியிருப்பதே சிவவாக்கியருக்கு நேரான ஆபாசக்குற்றச்சாட்டிற்குரிய காரணமாகும்.
சடங்குவெறிகொள்வதன்று சமயம்:
சிவவாக்கியம் சைவசமயத்தில் விளந்ததுமட்டுமன்று, அச்சமயத்தின், முக்கியமாக அதனுடைய ஆசாரக்கோட்பாட்டில் உறுதியாக இருக்கின்ற, சடங்கு வினைகளால் செறிவு குன்றிய அமைப்புமுறைகளின் எதிர்க் கிளர்ச்சியாக எழுந்ததுமாகும். எல்லாச் சித்தர்களையும்போல சிவவாக்கியரும் ஒரு சுதந்திரச் சிந்தனையாளரும், சமயம், மறைநூல்கள், ஆசாரச் சடங்குகள், முதலானவற்றால் ஈர்க்கப்படாத புரட்சியாளரும் ஆவார். சிவவாக்கியரைப் பொறுத்தவரையில் சமயம் என்பது ஒரு விதிகளின் தொகுப்போ, நம்பிக்கைக் கோட்பாடோ அன்று. பரம்பொருளான இறைவனைப்பற்றிய நுண்ணறிவுத்திறமும், ஆழ்ந்த தொடர்புமாகும் அது.
“ஒன்றும் ஒன்றும் ஒன்றலோ உலகனைத்தும் ஒன்றுமே
அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே”
என உலகம் அனைத்தும் ஒன்று என்றும், அன்றும் இன்றும் அனாதியானவன் இறைவன் ஒருவனே என்றும் பறைசாற்றுகிறார் சிவவாக்கியர்.
அதுமட்டுமன்று. எங்கும் நிறைந்த, எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்திருக்கும் சிவபெருமானை உள்ளும் புறமுமாக உணர்வுபூர்வமாக அறிபவனே ஞானியாவான்;
“பாரடங்க வுள்ளதும் பரந்தவானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண்சுடர்
ஆரிடமும் இன்றியே அகத்துள்ளும் புறத்துள்ளும்
சீரிடங்கள் கண்டவர் சிவன் தெரிந்த ஞானியே”
எனவும் வரையறுத்துக் கூறுகின்றார்.
சிவவாக்கியர் கருத்துப்படி,
“அண்டர்கோனிருப்பிடம் அறிந்துணர்ந்த ஞானிகள்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே”
அதாவது, ஞானியான ஒருமனிதன் கோயிலிற்சென்று கைகூப்பி வேண்டுதல் செய்து இறைவழிபாடு நடத்துவதில்லை.
எங்கும் நிறைந்த இறைவன் உமக்குள்ளேயே இருக்கும்போது அவ்விறைவனை அந்தர்முகமாக உன்னி வணங்குவீராயின், அச்சுருக்கமற்ற சோதிவடிவினனான இறைவனை அடையலாம். அவ்வாறிருக்க,
நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தநித்த நீரிலே
விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியங் கேளுமின்
என்று கூறி,
நெருப்புநீரு மும்முளே நினைத்துகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே
என்று சரியானமுறையையும் புகட்டுகின்றார்.
ஆனால், அந்தர்முகமாகச் செய்யப்படுகின்ற வெறுமையான தியானமுறைகளும் பலன்தரப் போவதில்லை. கையில் உருத்திராட்ச மாலையை வைத்து உருட்டிக்கொண்டு, கண்ணையும் சிமிட்டிக்கொண்டிருப்பினும், மனம்போவது எவ்விடம்! மனதிற்கிடக்கும் பொய், வஞ்சனை முதலானவற்றைத் துடைத்தெறியாமல் மெய்ப்பொருளை மனதின்கண் காணவும் இயலாது என்பதனை,
கைவடங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீ ரெண்ணியெண்ணி பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையை பொருந்திநோக்க வல்லிரேல்
மெய்கடிந்த தும்முளே விரைந்துகூற லாகுமே
எனச் சுட்டிக்காட்டுகிறார்.
நல்லெண்ணத்துடன் செய்வதாயினும் கூட சிற்சில கிரியைகள் அதைச் செய்பவன் மனதிற்கு ‘நானே அதைச்செய்தேன்’ என்ற போலியான நிறைவு தருமேயல்லாமல் வேறெந்த பலனையும் கொடா என்பதனை,
பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே
எனச் செய்த பூசையைக் கொண்ட பொருள் யாதென விளக்கித் தருமாறு கேட்கின்றார்.
சமைத்த கறியின் சுவையை அக்கறியைச் சமைத்த சட்டியும், கிளறும் சட்டுவமும் தெரிந்துகொள்ளாது. பரம்பொருள் மனத்தின்கண்ணேயே இருக்க சிற்பியினால் உருவாக்கப்பட்ட கற்சிலை நிட்கள, நின்மல பர-வத்துவான பொருளாகாது என்பதனை உணர்த்த,
நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சார்த்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லுமந்திர மேதடா?
என்று கேட்கிறார்.
பேதமை நிறைந்த மக்கள் அனைவரும்கூடி விழாமுதலான பேரில் செப்புச் சிலையை வைத்துச் செய்யும் பித்தலாட்டங்களையும் கடுமையாகச் சாடுகிறார் சிவவாக்கியர்.
ஊரிலுள்ள மனிதர்கா ளொருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர்
ஆரினாலு மறியொணாத வாதிசித்த நாதரை
பேதையான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே.
எனத் தேர்த்திருவிழா போன்ற வெறும் சமய சம்பிரதாயங்களை ஏளனம் செய்கின்றார்.
மூடநம்பிக்கைகளில் உழலும் உலகத்தவர் தங்களுக்கு ஏதாவதொரு நோய் வந்தால் கொல்லா விரதத்தை எள்ளளவும் கொண்டாடாமல், ஆடு, கோழி முதலியவற்றைப் பலி கொடுக்கும் ஈனச்செயல்களைத் தவிர்க்குமாறு எச்சரிக்கிறார் சிவவாக்கியர். ‘அத்தகைய பாபச்செயல்களைச் செய்யத்தூண்டும் உங்களது குலதெய்வங்கள் உங்களைக் குணமாக்கப்போவதும் இல்லை. உடல்நலம் மேலும் குன்றி மூஞ்சூறு போல இளைத்துப் போவீர்களேயன்றித், தேறும் நிலை உண்டாகாது.’
தங்கள்தேகம் நோய்பெறின் தனைப்பிடாரி கோயிலிற்
பொங்கல்வைத்தும் ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளுந்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே.
என்று அழுத்தமாகச் சொல்கின்றார்.
ஐம்புலன்களையும் வெல்லாது அவற்றின் வழியே செல்லும் அஞ்ஞானிகளுக்கு அன்னதானம் முதலான தருமங்கள் செய்வதும் வீணே. அத்தகைய போலித் துறவிகளுக்கு ஈகைசெய்வது தீமையையே விளைவிக்கும்.
ஐம்புலனை வென்றிடா தவத்தமே யுழன்றிடும்
வம்பருக்கு மீவதுங் கொடுப்பதும்ம வத்தமே
என்பதே சிவவாக்கியரின் அறிவுரை.
நல்ல இடங்களைத் தேடி அவற்றைச் சுத்திசெய்து பீடமிட்டு, அதன் மீது திருநீறு பூசி அமர்ந்து அருமையாகத் தவங்கள் செய்வார்கள். ஆனால், ஆன்மவடிவினனான இறைவன் ஒடுங்குமிடமும் உதிக்குமிடமும் யாதென்று அறிந்து பின் தவம் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகின்றார் சிவவாக்கியர்.
இடங்கள்பண்ணி சுத்திசெய்தே யிட்டபீட மீதிலே
அடங்கநீரும் பூசல்செய் தருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனா ருதிக்குஞான மெவ்விடம்
அடங்குகின்ற தெவ்விடம் அறிந்துபூசை செய்யுமே.
அதுமட்டுமல்ல,
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியேக தறியே கண்கள்மூடி என்பயன்
என்றும்,
தேடிவைத்த செம்பெலாந் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசையென்ன பூசையோ
என்றும்,
மெய்ப்பொருளாகும் இறைவனை உள்நோக்கியுணர வேண்டுமேயன்றி வெளிப்புறமான மரபுவழிச் சடங்கு வழிபாடுகளாலும், ஆசாரங்களை மேற்கொள்ளுதலாலும் எந்தப் பயனும் இல்லை என்று மனதில் பதியும்படிப் பல பாடல்களில் ஆவேசமாகக் கண்டனம் செய்கின்றார் சிவவாக்கியர்.
ஒன்றே தெய்வம்:
தமிழ்ச்சித்தர்கள் கடைப்பிடித்த மெய்யுணர்வு நெறிமுறையில் தனிப்பட்ட தெய்வங்களுக்கு இடமில்லை. இறைவனைப்பற்றிய ஆத்திகக் கோட்பாடு தவறான இரண்டு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. தனிப்பட்ட தெய்வம் என்ற கருத்து ஒன்று; படைத்தவனான இறைவன் படைப்புக்களிலிருந்து நிரந்தரமாக வேறுபட்டிருப்பவன் என்பது மற்றொன்று. சிவவாக்கியரின் பார்வையில் எனக்கென்றொரு தனிக்கடவுள், உனக்கென்றொரு தனிக்கடவுள் என்று இருக்கமுடியாது. ஏனெனில் அதனால் இரண்டு கடவுளர் உருவாவர்.
எங்கள்தேவ ருங்கள்தேவ ரென்றிரண்டு தேவரோ
அங்குமிங்கு மாகிநின்ற வாதிமூர்த்தி யொன்றலோ
அங்குமிங்கு மாகிநின்ற வாதிமூர்த்தி யொன்றெனில்
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.
என இடித்துரைக்கின்றார் சிவவாக்கியர்.
இரண்டற விளங்கும் இறைவனை விட்டுணு எனவும் சிவன் எனவும் பாகுபடுத்தி வணங்குவது மடமை. பொன்னாற் செய்யப்படுகின்ற நகைகள் பல வடிவம் கொண்டவையாயிருப்பினும் ஆதாரமாயிருப்பது பொன் ஒன்றே.
தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே
மற்றும்,
எங்கள்தெய்வ முங்கள்தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள்பேத மன்றியே வுண்மைரெண்டு மில்லையே
என்று, கடவுளைப் கூறுபோட்டுக்கொள்வது மனிதர்களிடமுள்ள பேதமையாலும், பேதவுணர்வாலுமே என்பதனையும் வலியுறுத்துகிறார்.
அரியுமாகி யயனுமாகி அண்டமெங்கு மொன்றதாய்
பெரியதாகி யுலகுதன்னில் நின்றபாத மொன்றலோ
விரிவதென்று வேறுசெய்து வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாருமிங்கு மங்குமெங்கு மொன்றதே
எனவும் கூறி, ஒன்றே இறைவன் எனும் உண்மையை வலியுறுத்துகின்றார்.
உடலே இறையுறையும் கோயில்:
சித்தர் மரபில் மனிதவுடல் என்பது பேரண்டத்தின் குறுவடிவமாகக் கொள்ளப்படுகின்றது. உடலை ஒப்புக்கொள்கின்றவன் உலகையே ஒப்புக் கொண்டவனாகின்றான் என்பதே சித்தர்களின் நிலைபாடு. உருவிலங்குமேனி எனும் புலன்களால் உணரத்தக்க மனித உடலின் தன்மை காலத்தால் அழிவதும், திருவிலங்குமேனி எனும் அகவுணர்வால் உணரத்தக்க உடல் அழியாமற் பாதுகாக்கப்பட வல்லதுமாகும் என்பது சிவவாக்கியர் கொள்கை.
உருவிலங்கு மேனியாகி யும்பராகி நின்றநீர்
திருவிலங்கு மேனியாகச் சென்றுகூட லாகுமே
என்று அவர் உறுதியளிக்கின்றார்.
சிவவாக்கியத்தின் ஆறாவது பாடல் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவ னத்தினால்
விடுவனோவ வனையின்னம் வெட்டவேணு மென்பனே
நடுவன்வந் தழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டுங் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பரே
இதன் பொருளாவது, யாக்கையே இறைவனை அறியவல்ல கருவியாக இருக்கும்போது, அதனைப் பேணாது புறக்கணித்து முடிவில் மரணமடைந்து சுடலையில் எரிபடக்கொடுக்கின்றனர். அடுத்ததாக சிவவாக்கியர் சொல்லணிமிக்க ஒரு கேள்வியைக் கேட்கின்றார்: இதே மனிதர்கள் அழகிய உடல்வடிவுள்ள பெண்ணைத் தேடிக்கண்டுபிடித்து திருமணம் செய்துகொண்ட பின், அப்பெண்ணை மற்றொருவன் கவர்ந்து கொண்டு போக எண்ணினால் அனுமதிப்பார்களா? ஆகவே மாந்தர் தங்கள் இல்லப் பெண்களைக் காப்பது போல யோகமுறைகளால் தத்தம் உடல்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என மக்களுக்கு உணர்த்துகிறார்.
சருகருந்தி நீர்குடித்து சாரல்வாழ் தவசிகாள்
சருகருந்தில் தேகங்குன்றி சஞ்சலமுண் டாகுமே
என உதிர்ந்த இலைச்சருகுகளை மட்டும் தின்று, தண்ணீரையும் குடித்து மலைச்சாரல்களில் வாழும் தவசிகளிடமும் அவர் உடலைப் பேணிக்காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
இவ்வாறு, மனிதவுடலுக்கான முக்கியத்துவத்தையும், அதன் உள்ளார்ந்த பயனையும் சுட்டிக்காட்டுகின்றார் சிவவாக்கியர். உடலாகின்ற கோவிலில் இறைவனைக் காணலாம் என உறுதியாக நம்பிக்கையூட்டுகிறார் அவர். ஆனால், ஞானம் கொண்டு நல்லெண்ணத்துடன் வணங்கவேண்டியது அவசியம்.
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலா மிறையையே.
அதுமட்டுமன்று, எவ்வாறு குடமானது நீரில் அமிழ்த்தப்படும்போது வெள்ளத்தால் நிரம்பப் படுகின்றதோ, அவ்வாறே எங்கும் இறைமயமாக இருக்கின்ற இவ்வெளியிலுள்ள இவ்வுடலும் சிவத்தால் நிறைந்திருக்கின்றது என்பதனை,
அக்குடஞ் சலத்தைமொண் டமர்ந்திருந்த வாறுபோல்
இச்சடஞ் சிவத்தைமொண் டுகந்தமர்ந் திருப்பதே
என்று விளங்கக் கூறுகின்றார்.
மனிதவுடலுருவால் ஆன அரங்கமே இறைவனின் திருவரங்கம் என்ற உண்மையறியாது உழலும் மாந்தர்களைக்கண்டு அவர் வருந்துகிறார்.
உருவரங்க மாகிநின்ற வுண்மையொன்றை யோர்க்கிலீர்
கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்துபின்
திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே.
இங்ஙனம் இறைவனை மெய்யுள் காணும் பயிற்சி நாடாமல் வெளியேதேடி அலையும் மக்களை நோக்கி,
தூரந்தூரந் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணு மெங்குமாய்ப் பரந்த அப் பராபரம்
ஊருநாடு காடுமோடி யுழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே
எனவும்,
காடுநாடு வீடுவிண் கலந்துநின்ற கள்வனை
நாடியோடி யும்முளே நயந்துணர்ந்து பாருமே
எனவும் கடிகிறார்.
அதுமட்டுமன்று,
உறியிலே தயிரிருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும்
அறிவிலாத மாந்தரோ டணுகுமாற தெங்ஙனே
என்றும் வருந்துகிறார் சிவவாக்கியர்.
சிவவாக்கியர் மனிதவுடலைத் தனிமுதலான மெய்ப்பொருளை அடைவதற்கான புனித வழியின் வாயிற்படியாக அடையாளம் காட்டுகிறார். புண்ணிய நதிகளெனவும், கோயில்களெனவும், மலைகளெனவும் அநேகவாசல்களைத் தேடிப்போவானேன். ஏழையான மனிதனுக்குகந்த புனிதவாசல் உடலான இவ்வாசலே.
அண்டவாச லாயிரம்ப்ர சண்டவாச லாயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாச லாயிரம்
இந்தவாச லேழைவாச லேகபோக மானவாசல்
எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே.
என்று அவர் பாடுகிறார்.
அகநிலையனுபூதி:
இறைவனான சிவபெருமானுடன் ஒத்து வேறுபடாநிலையை உணர்தலே தமிழ்ச்சித்தமரபில் அகவறிவு அல்லது ஆன்ம அனுபூதி எனப்படுவது. தன்னையறிதல் தன்னுளேயிருக்கும் இறைவனையும் அறியும் வழியாகின்றது. ஆனால் சிவவாக்கியர் ஒருபடி மேலே போகின்றார். மெய்ஞ்ஞானம் பெற்று இறைவனையுணர்ந்த நிலையில் தனக்குள்ளே தானன்றி மற்றொன்றையும் கண்டிலேன் என்று வியக்கின்றார்.
என்னகத்து ளென்னைநா னெங்கும்நாடி யோடினேன்
என்னகத்து ளென்னைநா னறிந்திலாத தன்மையால்
என்னகத்து ளென்னைநா னறிந்துமே தெரிந்தபின்
என்னகத்து ளென்னையன்றி யாதுமொன்று மில்லையே
அதுமட்டுமன்று, காண அரிதான அந்த மெய்ப்பொருளை முயன்று காணும்போது மட்டுமே அது அறிவில் விளங்கும். “நோக்கொணாத அந்த நோக்கு” கைவரப்பெறின் எல்லாவிடத்திலும் மெய்ப்பொருளாம் இறைவனைக் காண்பதும் எளிதாகி விடும் என்ற பொருள்பட,
“நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கையெங்க ணோக்குமே”
என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
சுத்தமெய்ஞ்ஞானமே யோகநிலையின் உன்னதமான குறிக்கோளாகும். சிவவாக்கியர் இந்நிலையை, “seedless consciousness” என்று ஆங்கிலத்தில் கூறப்படுகின்ற, வித்தானது இற்றுப்போய் அதிலுண்டான வித்துப்போன்ற அவத்தையென்கிறார். கட்டற்ற அந்நிலையில் சித்தமும், சிந்தையும், சீவனும், மோட்சமும், மூலமந்திரங்களும் நீக்கம்பெற்று விடுகின்றன என்பதை,
சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தையிற்று ஈன்றவித்தில் விளைந்ததே சிவாயமே
என்று நவில்கின்றார்.
செத்தபின் முக்தி என்ற கருத்தில் சிவவாக்கியருக்கு ஒப்புதலில்லை. அத்தகைய விடுதலை வெறும் ஒரு அனுமானம் மட்டுமே. மறுபிறவியை மறுக்கும் சிவவாக்கியரின் புகழ்பெற்ற பாடலொன்று உண்டு. அறியவிருப்பவனின் மரணம் அவன் அறிவதைத் தடைசெய்யும் என்றும், அதனால் மரணத்திற்குப் பின் முக்தி என்பது சாத்தியமன்று என்பதற்கும் உள்ள சான்றாகும் அப்பாடல்.
கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணைய் மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை யுயிர்களும் முடற்புகா
விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே.
என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார் சிவவாக்கியர்.
ஓடம்போலோடுகின்ற உடல் கவிழுமுன்னே யோகஞ்செய்து தேகத்தை நிலைநிறுத்திச் மெய்ப்பொருளையறிய வேண்டும் என்பதை,
ஓடமுள்ள போதெலா மோடியே யுலாவலாம்
ஓடமுள்ள போதெலா முறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடமு முடைந்தபோது வொப்பிலாத வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே
என்று, இறந்துபட்ட பிறகு சூனியமென்ற இடத்தில் யாவருள்ளனர் என்ற கேள்வியை அவர் எழுப்புகின்றார்.
மறைநூல்களின் பயனின்மை:
ஆன்மமுத்தி அல்லது சிவப்பேறு என்பது ஜாதி, குலம், பதவி, வயது எனும் பேதங்களற, மனிதராகப் பிறந்தவர் அனைவருக்குமுள்ள பிறப்புரிமையாகும். சிவவாக்கியரின் கணக்குப்படி நமதுவாழ்வில் காணப்படுகின்ற மருட்சிக்குக் காரணம் சமூக அமைப்புகளேயன்றி தனிமனிதனின் இயல்பன்று. ஆகவே சில சமய சமூக அமைப்புக்களையும், ஒழுங்குகளையும், சிவவாக்கியர் மிகத்தீவிரமாகத் தாக்குகின்றார். சமயக்கோட்பாடுகளில் உறுதியாகவிருக்கின்ற சிந்தனையாளர்கள் இதனை ஏற்புடைய வழிமரபிற்கு எதிராக எழுந்த கிளர்ச்சி இயக்கமென பொருள்கொடுத்து வந்துள்ளனர். சமய மறைநூல்களுக்கும் இறைமைக் கோட்பாட்டிற்கும் எதிராகவுள்ள அவரது மனப்பான்மையும், அத்துடன் சாதிப்பிரிவினைகள், உருவ வழிபாடு, அர்த்தமற்ற சமய ஆசாரங்கள், சடங்குகள் முதலானவற்றைப் பற்றிய கடுமையான விமரிசனமும், போலிப் போதகர்களையும், பொய்த்துறவிகளையும் பற்றி விடுத்துள்ள எச்சரிக்கைகளும் சமூக-ஒழுங்குநெறிக் கோணத்திலிருந்து (socio-ethical angle) மதிப்பிட வேண்டியவையாகும்.
பகுத்தறிவுச் சிதைவிலிருந்தும், இயல்பற்ற சமுதாயமரபு சார்ந்த சிந்தனைகளிலிருந்தும் மக்களை உலுக்கியெழச்செய்ய பல்வேறான சாத்திரங்களையும், மறைநூல்களையும் சிவவாக்கியர் கடுமையாகச் சாடுகிறார். இறக்குந் தறுவாயில் வேர்வையும், மூச்சுத்திணறலும் வந்து அலட்டும்போது வேதங்கள் பலனளிக்கா.
“வேர்த்திரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ” என்று எள்ளி நகையாடுகிறார்.
அதேவேளையில், ஒரு மாத்திரைப் பொழுதாவது தன்னைத்தானே அறிந்து கொள்ள இயலுமாயின் சாத்திரங்கள் மீதுள்ள அளவற்ற வேட்கை எனும் நோயிலிருந்து விடுபட்டுவிடலாம். சத்தியமான முத்தி சித்திக்கவும் வாய்ப்புண்டு.
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்களேது! சத்திமுத்தி சித்தியே.
எனத் தெளிவுபட உரைக்கிறார்.
மெய்ப்பொருளையறிய இயல்பான, நேரடியான அணுகுமுறையைத் தேடும் ஒருவன் தனது ஆன்மிகப் பயிற்சிக்குச் சாத்திரங்களும், சமயவிதிமுறை நூல்களும் பெரும் இடையூறாக இருப்பதனையறிந்து அவற்றை விலக்கவேண்டும் என்பதே சிவவாக்கியரின் அறிவுரை. பாலுக்குள் நெய் மறைந்திருப்பதைப்போல் “ஆலமுண்ட கண்டனார் அகத்துளே” யிருப்பதை உணராமல்
நாலுவேத மோதுவீர் ஞானபாத மறிகிலீர்
பாலுணெய் கலந்தவாறு பாவிகா ளறிகிலீர்
என்று வருந்துகிறார்.
சூரியனை நேராகப்பார்த்துத் துதிசெய்தால் விளையும் பயன் கண்குருடாகும் என்பதுதான். இறையுறையும் பாத்திரமான சித்தத்தினுள் ஒன்றி மோன பக்தியில் ஆழும்போது சிவத்தையுணர்ந்து அனைவரும் சித்தராகலாம். அல்லாது சாத்திரங்களை மட்டும் நம்புவதில் பயனில்லை என்பதனை
சாத்திரங்கள் பார்த்துபார்த்து தான்குருடு ஆவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள்
பாத்திரம் அறிந்துமோன பத்திசெய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவருஞ் சித்தராவி ரங்ஙனே என்று பாடுகிறார்.
மறைநூல்களெனத் தொன்றுதொட்டுப் பாராயணம் செய்யப்பட்டு வரும் நான்கு வேதங்களும், ஆறு சாத்திரங்களும், ஐம்பூதங்களையும், தொண்ணூற்றாறு தத்துவங்களையும் விளக்குகின்ற ஆகமங்களும், மற்றும் சாதிபேதங்களை எடுத்துக்கூறுகின்ற தருமசாத்திர நூல்களும், ஆகிய இவையனைத்துமே பற்பல வேறுபாடுகளுடையவையாகத் தோன்றி, மீண்டும் ஏற்றபடியான, பிழையற்ற முறை இல்லாத காரணத்தால் உழன்றுகொண்டிருக்கின்றன என்பதனை
ஓதும்நாலு வேதமும் உரைத்தசாத்தி ரங்களும்
பூததத்து வங்களும் பொருந்துமாக மங்களும்
சாதிபேத வன்மையுந் தயங்குகின்ற நூல்களும்
பேதபேத மாகியே பிறந்துழன்றி ருந்தவே.
எனத் தன்கருத்தை வெளியிடுகின்றார்.
சொந்தமான அனுபவத்தை விட உயரியவல்ல ஏட்டளவிற் படிக்கின்ற சாத்திரங்கள்.
நூறுகோடி யாகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாளிருந்து மோதினால தென்பயன் என்பதே அவரது கேள்வி.
இறையனுபூதிக்குப் புலன்களையடக்கியுள்ள உள்நோக்கே முக்கியமானது. சாமங்கள் தோறும் நான்கு வேதங்களையும் சந்தச்சிதைவு வராதபடி பாராயணஞ் செய்தாலும், சகல சாத்திரங்களையும் ஐயந்திரிபுற ஆராய்ந்தாலும் பயனில்லை. இறைவனையறியப் புலனடக்கம்செய்து ஒருமுகமாக உள்நோக்கினால் மட்டுமே சிவத்தை உணரமுடியும் என்றும், அங்ஙனம் உணர்ந்துகொண்டபின் அச்சிவநிலை உங்களது உடலின்கண் “ஊமையானகாயமாக” – மௌனநிலையாகக் குடிகொள்ளும்.
சாமம்நாலு வேதமுஞ் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதினுஞ் சிவனைநீ ரறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே யுணர்ந்தபின்
ஊமையான காயமா யிருப்பனெங்க ளீசனே
என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
மறைநூல்களும், சாத்திரங்களும் மெய்ப்பொருளிருக்குமிடத்தையும், அதனை அடையவேண்டிய முறையையும் குறிப்பால் காட்டுகின்ற தாற்காலிகமான வெறும் கருவிகளேயன்றிச் சுயமாகக் கடைப்பிடித்தொழுகவேண்டிய பயிற்சிக்கு ஈடாகமாட்டா. வேதங்களோதுவது வெறுமொரு சமயச் சம்பிரதாயம் ஆகிவிட்ட நிலையில், அதைக் கண்டிப்பதற்கு சிவவாக்கியர் இந்தப் பாடல்களைப் பாடியிருக்க வேண்டும்.
வேதமோது வேலையோ வீணதாகும் பாரிலே என்றும்,
இட்டகுண்ட மேதடா விருக்குவேத மேதடா
சுட்டமட் கலத்திலே சுற்றுநூல்க ளேதடா
என்றும் சினத்துடன் வினவுகின்றார்.
சாதிப்பிரிவினை எதிர்ப்பு:
கடவுட்பாகுபாடுகளை எதிர்ப்பதுபோலவே சாதிப்பிரிவினைகளையும் கடுமையாக எதிர்க்கிறார் சிவவாக்கியர். அவரது காலத்தில் சாதிபேதம் பாராட்டுவது மிக மோசமன நிலையில் இருந்திருக்க வேண்டும். மேற்குடியினர் கீழ்க்குடியினரை மிகக் கேவலமாக நடத்தியிருக்க வேண்டும். சாதிகளின் பேரால் நிகழும் இக்கொடுமைகளைக் கண்டு சிவவாக்கியர் குமுறுகிறார். அவரது வெகுளி இப்பாடலில் பெருக்கெடுத்து எழுகிறது.
பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினும் இலக்கமிட் டிருக்குதோ
சாதிப்பிரிவையொட்டி மனிதர்களின் மாமிசம், தோல், எலும்பு ஆகியவற்றில் வேறுபடுத்திக்காட்ட இலக்கங்கள், அடையாளங்கள் இடப்பட்டிருக்கின்றனவா என்று சிவவாக்கியர் குமுறுகின்றார்.
சாதியென்பது என்ன என்ற கேள்வியை எழுப்பி அதனுடைய குறிக்கோளின்மையை
சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம்
பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னொன்றலோ
சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே
என்று எடுத்துக் காட்டுகின்றார். அதாவது, மனிதர்கள் எச்சாதியைச் சார்ந்தவராயினும் பஞ்சபூதச் சேர்க்கையாலான உடலையே அனைவரும் கொண்டுள்ளனர். பொன்னாலான அணிகலன்கள் அவற்றை அணிபவரின் சாதியையொட்டி மதிப்பை இழப்பதில்லை என்பதே.
பிறப்பினால் ஒருவன் கீழ்ச்சாதியில் தள்ளப்படும் கொடுமையை வன்மையாகக் கண்டிக்கிறார் சிவவாக்கியர்.
பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்துடன் பிறந்ததோ பிறங்குநாட் சடங்கெலாம்
அதாவது, தாயின் வயிற்றினின்றும் பிறந்த காலத்திலேயே கோவணம், பூணூல், குடுமி இவைகளும், அந்தந்த நாட்களில் செய்யப்படும் சடங்குகளும் கூடவே பிறந்தனவோ என்று பரிகாசமாகக் கேட்கிறார்.
வேதியர்போன்ற உயர்குடிகளிற் கடைப்பிடிக்கும் உடல்சார்ந்த எச்சில், தீட்டு முதலானவற்றைத் ஆசாரத்தூய்மை கெட்டவையாக மதிக்கும் வழக்கத்தையும் சிவவாக்கியர் கண்டிக்கின்றார். வாயினாற் குடித்தநீர் எச்சிலாகுமெனின் எச்சிலல்லாத வத்து யாதொன்று என்பது அவருடைய கேள்வி.
ஓதுகின்ற வேதமெச்சி லுள்ளமந்திரங்க ளெச்சில்
போதகங்க ளானதெச்சில் பூதலங்க ளேழுமெச்சில்
மாதிருந்த விந்துவெச்சில் மதியுமெச்சி லொலியுமெச்சில்
ஏதிலெச்சி லில்லதில்லை யில்லையில்லை யில்லையே என்கிறார்.
உணவுஉண்ட கலத்தை எச்சிலென்று கூறி தூக்கியெறிகின்றீர்கள்; அப்போது அதிலிருந்து எடுத்து உண்ட உமது கைகள் எச்சிலல்லவோ? அந்தக் கை மட்டும் கடவுளுக்கு ஏற்றுக்கொள்ளத் தக்கதோ? அக்கையில் தண்ணீர் படும்போது மட்டும் அந்த அசுத்தம் எப்படி மறைகிறது? என்பதும் அவருடைய ஐயவினா.
உண்டகல்லை யெச்சிலென் றுள்ளெறிந்து போடுறீர்
கண்டவெச்சில் கையலோ பரமனுக்கு மேறுமோ
கண்டவெச்சில் கேளடா கலந்தபாணி யப்பிலே
கொண்டசுத்த மேதடா குறிப்பிலாத மூடரே என்று கேட்கின்றார்.
வேதியர்கள் ஆன நீவிர் இறைவனையுணர்ந்தவர்களாயின் அனைத்தும் அவனல்லாது எச்சிலென்று என்னவுள்ளது?
வாயிலெச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில்போன வாறதென்ன தெவ்விடம்
வாயிலெச்சி லல்லவோ நீருரைத்த மந்திரம்
நாதனை யறிந்தபோது நாடுமெச்சி லேதுசொல்
என்று வினா எழுப்புகிறார்.
அதுமட்டுமன்று, தூய்மையாக்கி வைத்திருக்கின்ற நுமது உடல் எச்சிலாகும். அபிடேகமாக நீங்கள் வைத்திருக்கின்ற தேன் என்பது தேனீயின் எச்சிலாகும். அர்ச்சனை செய்யும் பூக்கள் வண்டுகளின் எச்சிலாகும். பசுவின் மடியில் கைவைத்துக் கறந்த பாலும் எச்சிலாகும். பின்பு எதை நீங்கள் எச்சில், எச்சில் என்று பழிகின்றீர்கள் எனச் சிவவாக்கியர் கேட்டிருப்பது சிந்திக்கத் தக்கது.
எச்சிலெச்சி லென்றுநீ ரிடைந்திருக்கு மேழைகாள்
துச்சிலெச்சி லல்லவோ தூயகாய மானதும்
வைத்தவெச்சில் தேனலோ வண்டினெச்சில் பூவலோ
கைச்சுதாவில் வைத்துடன் கறந்தபாலு மெச்சிலே
சிலைவழிபாட்டு மறுப்பு:
சமயம் ஒரு சமூக அமைப்பாக மாறும்போது கூடவே அதையொட்டிய நெறிமுறைகளும், வழக்கங்களும் உருவாகத் தொடங்குகின்றன. ஆனால் அவை மக்களின் சமய உணர்விலுள்ள தூய்மையை நாளடைவில் குறைத்து விடவும் செய்கின்றன. சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பது என்பது தன்னிலை உணர்வதைவிட முக்கியத்துவம் பெற்றதாகிவிடுகின்றது.
காலம் செல்லச்செல்ல இவையே பெரும் தளைகளாகவும் மாறி விடுகின்றன. மெய்யறிவை நாடும் மனித சமுதாயம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடவேண்டுமென்பதே சிவவாக்கியரின் ஆவல். அந்த வகையில் உருவ வழிபாட்டையும், புண்ணியத் தலங்களை நோக்கியுள்ள யாத்திரை, தீர்த்தங்களில் முழுகுதல், தவவேடச்சின்னங்கள் அணிதல் முதலான சடங்குகளையும் அவர் அறவே மறுக்கின்றார். இவற்றைக் கடுமையாகக் கேலி செய்கின்ற போக்கு இவருடைய பாடல்களில் மிகுந்திருப்பதைக் காணலாம்.
உருவ வழிபாட்டை தீவிரமாகக் கண்டனம் செய்கிறார் சிவவாக்கியர்.
செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவனிருப்ப னென்கிறீர்
கல்லிலும், உலோகத்திலும் பொம்மைசெய்து வைத்துகொண்டு அதில் சிவனைத் தேடிப் பொழுதை வீணழிக்கிறீர்களே என்று வருந்துகிறார்.
உடைக்கப் பட்ட கல்லின் ஒருபகுதி வாயிற்படியில் மிதிகல்லாகவும், மற்றொரு பகுதி கருவறையுள் கடவுள் சிலையாகவும் மாறுவதைக் கண்டு சிவவாக்கியர் வியக்கிறார்.
ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டு செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவேமி திக்கிறீர்
பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீருஞ் சார்த்துறீர்
ஈசனுக் குகந்தகல் எந்தகல்லு சொல்லுமே என வினவுகின்றார்.
தத்துவங்களைச் சடங்காக்கி இறைவனைக் கல்லாக்கிவிட்ட மூடர்கள் உயிரோடுயிராகக் கலந்து நிற்கும் இறைவனைக் காண மறுப்பதை எண்ணிச் சிரிக்கின்றார் அவர்.
சாவதான தத்துவச் சடங்குசெய்யு மூமைகாள்
தேவர்கல்லு மாவரோ சிரிப்பதன்றி யென்செய்வேன்
மூவராலு மறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக வும்முளே கலந்திருப்பன் காணுமே என்கிறார்.
மெய்யான இறையனுபூதியை நேரடியாகப் பெறவேண்டுமேயல்லாமல் மற்றொரு உபாதிமூலமாக அதைப்பெற விழைவது மூடத்தனம் என்பதே சிவவாக்கியரின் கருத்து. சிற்பிகளின் கைவேலைப்பாடான சிலையுருவங்களை உயர்ந்த தெய்வமென்றெண்ணி அவற்றிற்குப் பெயர்களையும் இட்டு அழைக்கின்றீர்கள் அனைத்தயும் படைத்த முழுமுதற்கடவுளை உம்முள்ளத்தில் சிந்தனை செய்யுங்கள் எனும் அவரது அறிவுரையை
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள தென்றுநீர்
எண்ணமுற்று மென்னபே ருரைக்கிறீர்க ளேழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத் தளிக்கவும்
ஒண்ணுமாகி யுலகளித்த வொன்றைநெஞ்சி லுன்னுமே
என்ற பாடல் வெளிப்படுத்துகின்றது.
கட்டையாற்செய் தேவருங் கல்லினாற்செய் தேவரும்
மட்டையாற்செய் தேவரும் மஞ்சளாற்செய் தேவரும்
சட்டையாற்செய் தேவரும் சாணியாற்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்ற வேறுதெய்வ மில்லையே
என்று இறைவன் உருவற்றவன் என்பதனை உறுதியாக மொழிகிறார்.
சிலைவழிபாடு ஒருக்காலும் மெய்யான இறையின்பத்தையளிக்காது என்றும் சிவவாக்கியர் முடிவாகக் கூறுகிறார்.
கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடுந் தராக்களில்
வல்லதேவ ரூபபேத மங்கமைத்துப் போற்றிடின்
தொல்லையற் றிடப்பெருஞ் சுகந்தருமோ சொல்லுவீர்
இல்லையில்லை யில்லையில்லை யீசனாணை யில்லையே
ஆலய வழிபாடு, புனிதநீராடல் முதலானவற்றின் வீணான தன்மை:
சிலை வழிபாட்டைக் கண்டனம் செய்வதோடு, ஆலய வழிபாடு, ஆறுகுளங்களில் புனிதநீராடல், புண்ணியத் தலயாத்திரை முதலான நடவடிக்கைகளையும் சிவவாக்கியர் மட்டுமீறிய கடுமையுடன் இகழ்கிறார்.
யாராலும் ஆக்கவும் அழிக்கவும் இயலாத கோயிலும், குளங்களும் மனிதனின் மனத்தினுள்ளே இருக்கையில்,
கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லையில்லை யில்லையே
என்று கோயில் குளங்களை நாடுவதை விட்டுவிட்டுக் கடவுளை உங்களுக்குள்ளேயே கண்டுகொள்ளுங்கள் என்கிறார்.
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி யோடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதனுண்டு நம்முளே என நல்ல புண்ணிய தீர்த்தங்கள் எங்கேயென்று நாடியோடும் மாந்தரை அறைகூவி விளிக்கிறார்.
கண்ணனின் பக்தையான மீராபாய் தனது பாடலில் தினமும் குளிப்பதனால் ஹரி கிடைப்பானாயின் நானொரு மீனாகவோ மற்றேதேனும் நீர்வாழ் உயிரினமாகவோ பிறக்க விழைகிறேன் எனக்கூறியுள்ளார். இதே கருத்தையே சிவவாக்கியரும்,
காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும்
அதாவது காலையும் மாலையும் தண்ணீரிலே மூழ்கினால் இறைவனருள் கிட்டுமாயின் எப்போதுமே நீரில் கிடக்கின்ற தேரையும் இறைவனுருள் பெற்றுவிடுமா? என்ற கேள்வியை விடுக்கிறார்.
இவ்வூரிலில்லாத இறைவன் அவ்வூரிலிருப்பான் என்று என்ன உறுதி?
இந்தவூரி லில்லையென் றெங்குநாடி யோடுறீர்
அந்தவூரி லீசனும் அமர்ந்துவாழ்வ தெங்ஙனே என்று கேட்கின்றார்.
தீர்த்தலிங்க மூர்த்தியென்று தேடியோடும் தீதரே
தீர்த்தலிங்க முள்ளினின்ற சீவனைத் தெளியுமே, அதாவது
தீர்த்தம், லிங்கம், மூர்த்தி என்று ஊரூராகச் சென்று தேடுவோரே! அவை அனைத்தையும் உம்முள்ளேயே கொண்டுள்ள உம் சீவனை உன்னிப்பாகக் கவனிப்பீராக என்று அறிவுரை புகட்டுகின்றார். காடுமேடு குன்றுபள்ளங் கானினா றகற்றியும் நாடுதேசம் விட்டலைவர் நாதன்பாதங் காண்பரோ? இல்லை. இறைவனை மனத்துள் அல்லால் எங்குத் தேடியும் பயனில்லை.
போலிக்குருமார்களைப் பழித்தல்:
போலித்துறவிகளையும், பொய்த் தவவேடமணிந்தவர்களையும் நையாண்டிசெய்வதில் சிவவாக்கியர் ஒருபோதும் இரக்கம் காட்டியதில்லை. அகநிலையனுபூதி பெற்ற மெய்யடியார்கள் தம் நிலையை எப்போதும் மறைத்து வைத்திருப்பர். அதல்லாதவர் வெளிவேடங்களாலும் நடிப்புக்களாலும் தம்புகழ்பாடித் திரிவர். சிவவாக்கியர் அத்தகைய போலி ஞானிகளை நாய்களுடன் ஒப்பிட்டு
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள்கோடி கோடியே
என வெளிப்படையாகத் தாக்குவதற்கும் அஞ்சவில்லை.
குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கடோறு மூழ்கிறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின்மா சறுக்கிலீர் என்றும்,
வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமுந் தரிக்கிறீர் என்றும்,
காவியுஞ் சடாமுடிக் கமண்டலங்க ளாசனம்
தாவுருத்தி ராட்சம்யோகத் தண்டுகொண்ட மாடுகள் என்றும்
முத்திசேரச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லியெங்குஞ் சாமிவேடம் பூண்டவர் என்றும்
நீரினிற்கு மிழியையொத்த நிலையிலாத காயமென்
றூரினிற் பறையடித்து உதாரியாய்த் திரிபவர் என்றும்
பலவிதமாகக் கபடத்துறவி வேடம்போட்டவர்களிடம் சிக்காமலிருக்கப் பல பாடல்களில் மக்களைச் சிவவாக்கியர் எச்சரிக்கிறார். அவர்களைத் தனது பல பாடல்களிலும் வேடமிட்ட மூடர், சாத்திரச் சழக்கர், பாதகக் கபடர், மதியிழந்த பித்தர், மடிப்புமோசஞ் செய்பவர், கருத்தழிந்த கசடர், பிரக்ஞைகெட்ட மூடர், குணங்கெடுங் குருக்கள் என்றெல்லாம் பலவாறாக வசைபாடுகின்றார்.
“மெதுவாக முணமுணவென்று சொல்லி உட்கார்ந்திருக்கும் மூடர்களே! நீங்கள் அள்ளி அள்ளி நீரை மேலெ எறிந்ததேது? உள்ளங்கையாற் குழைத்ததேது? திருட்டுவேடம் தரித்ததேது? கண்ணைமூடி விட்டதேது? அதன் விசேடத்தைச் சொல்லுவீர்களாக”
அள்ளிநீரை யிட்டதே தகங்கையிற் குழைத்ததேது
மெள்ளவே முணமுணென்று விளம்புகின்ற மூடர்காள்
கள்ளவேட மிட்டதேது கண்ணைமூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர் என்று கேட்கின்றார்.
மனதிலுள்ள ஆசையெனும் மாயக்கட்டவிழ்ந்து ஆழமான ஆன்மிகஞானம் கைவரப்பெற்ற யோகியர் மங்கையின் மார்பகத்தடியில் இருந்தாலும் அவர்கள் உலகமயக்கத்திற்கு வயப்படாமல் வினைத்தொடரை அறுத்தெறிந்து இருப்பர். ஆனால் மனவொடுக்கம் பெறாததால் பற்றறாத ஒரு யோகி மௌனம்பூண்டு வனத்தில் வாழ்ந்தாலும், மனதின்கண்ணுள்ள மாயையை அறுத்தொழித்தவராக மாட்டார் என்பதனை சொல்நயம் படைத்த அருமையான ஒரு பாடலால்ச் சிவவாக்கியர் உரைக்கின்றார்.
மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள்
வனத்தகத் திருப்பினும் மனத்தகத் தழுக்கறார்
மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத் திருப்பினும் பிறப்பறுத் திருப்பரே.
பெண்ணின் நிலைபாடு:
தமிழ்ச்சித்தர்கள் காம இன்பம் துய்ப்பதைப் பெரும்பாவமாகவே கூறியிருக்கின்றனர். பொதுவாக பெண்ணாசையைக் கண்டனம் செய்யும் வகையில் பெண்களைப் பழித்துரைக்கின்றனர். சிற்றின்பத்தில் மூழ்கிப் பேரின்பத்தை அடைய முடியாமல் தடுமாறும் மாந்தர்களுக்கு அறிவுரை சொல்லுகின்றபோது, வாழ்க்கையின் நிலையாத்தன்மையை உணர்த்துவதற்கு அவர்கள் பெண்மயக்கத்தை, முக்கியமாக விலைமகளிரிடம் ஆண்கள் சிக்கிச் சீரழிவதைக் கண்டித்துப் பாடியதாகக் கருத வேண்டுமேயல்லால், சித்தர்கள் பெண்ணினத்தையே முற்றாக வெறுத்து இருப்பார்கள் என்று எண்ணுவதற்கு இடமில்லை. சிவவாக்கியத்திலும் பெண்ணாசையால் மதிமறக்கும் மானிடர்களைத் தூற்றும் பாடல்களிருப்பினும் பெண்களுக்குத் தூய்மையின்மையைக் கற்பித்துத் தரம் தாழ்த்துவதைப் பல பாடல்களில் சிவவாக்கியர் கண்டித்துள்ளார். முக்கியமாகப் பெண்களின் மாதவிடாய் நாட்களில் பெண்ணை அசுத்தமடைந்தவள் என ஒதுக்குவதை மிகவும் துணிவுடன் அக்காலத்திலேயே எதிர்த்தபெருமை சிவவாக்கியரைச் சேரும்.
தூமைதூமை யென்றுளே துவண்டலையு மேழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோன தெவ்விடம்
தாயான பெண்ணின் இரத்தத்திலிருந்தே குருக்கள், தேசிகர்கள் முதலான பேராளர்களுக்கும் பிறவி பெற்றனர். அவளுடய உதிரமானது அவளுக்குள்ளேயே எக்காலமும் இருக்கின்றது. அப்படியிருக்க அம்மூன்று நாட்கள் மட்டும் பெண்ணைத் தீண்டத்தகாதவளாக்கித் துவண்டலைகின்றீர்களே என்று விசனத்துடன் கேட்கின்றார். ஆய்வறிவின் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லாத மூடவழக்கங்களை, அவை எத்தகைய மறைவான, கொச்சையான தன்மையுடையவையாயினும், அப்பட்டமாகக் கண்டிப்பதில் சிவவாக்கியர் ஒருபோதும் தயங்கியதில்லை.
அதுமட்டுமன்று, பெண் ஒரு சக்தியாக மாட்டிக்கொண்டதனாலேயே சிவனாரும் கங்கையைத் தனது தலைமேல் வைத்து மகிழ்ந்திருக்கின்றார். அதனால் மனைவியோடு சேரும்போது தான் மனிதர் வாழ்வு சிறக்கும் என்பதை
மாதர்தோள்சே ராததேவர் மாநிலத்தி லில்லையே
மாதர்தோள்பு ணர்ந்தபோது மனிதர்வாழ்சி றக்குமே
மாதராகுஞ் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்துகொண்டா னீசனே
என்று தெளிவுபடுத்துகின்றார்.
அறவழியின் சிறப்பு:
பூசை, நியமம், நிட்டை முதலானவற்றை வெளியார் மயங்கச் செய்தாலும், அறவழியில் செல்லாது அந்நியர் பொருள்களின் மேல் ஆசை வைத்துத் தினந்தோறும் அவற்றை மோசஞ்செய்து அபகரிப்பதற்காக எப்போதும் அலைந்து திரிபவர்களுக்கு எழுநரகங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன; இது உண்மையாகும்.
ஆசைகொண்டு அனுதினமு மன்னியர் பொருளினை
மோசஞ்செய்து அபகரிக்க முற்றிலும் மலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர்
காசினியி லெழுநரகைக் காத்திருப்ப துண்மையே
என அதருமவழியைப் பின்பற்றினாலுண்டாகும் விளைவை எடுத்துக்கூறி எச்சரிக்கின்றார் சிவவாக்கியர்.
அறவழி பின்பற்றுவதற்கான மனோதிடமின்றிப் பிறர்பொருளை எதிர்நோக்கி அதன்பின்னே ஊரெல்லாம் சுற்றி அலைந்து சுற்றத்தாரால் இகழப்படுகின்ற அவலநிலயை அடைந்தவர்களை,
மனவுறுதி தானிலாத மட்டிப்பிண மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினமூ ரெங்குஞ்சுற்றித் திண்டிக்கே யலைபவர்
இனமதிற் பலர்கள்வையும் இன்பமற்ற பாவிகள் என்றும் சாடுகின்றார்.
அளப்பரிய செல்வம் சேர்த்து வைப்பினும் எமனோலை வருகின்ற காலத்தில் குறுக்கே வந்து தடுக்க மாட்டா. பாத்திரமறிந்து ஓடிச்சென்று இட்ட பிச்சையும், மன உவப்போடு செய்த தருமச்செயல்களும் மட்டுமே வந்துதவும் என்பதை,
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினுங் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையும் உகந்துசெய்த தருமமும்
சாடிவிட்ட குதிரைபோல் தருமம்வந்து நிற்குமே
என்ற பாடலால் விளக்குகிறார்.
அவாவொழித்தலே மனநிறைவுக்கான வழி என்பதே சித்தர்களின் பொதுவான கோட்பாடு. அறவழியில் நின்று முத்தி நாடுபவரும், முத்திக்கான ஆசையை நீப்பது அவசியம்.
ஆசையறுமின்கள் ஆசையறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசையறுமின்கள் என்பது திருமந்திரம்.
அவ்வழியிலேயே, சிவவாக்கியரும் ஆசையை ஒழிப்பீரானால் நாடும் அந்த தத்துவப்பொருள் தானேவந்து கைகூடும் என்பதனை
வேணும்வேணு மென்றுநீர் வீணுழன்று தேடுவீர்
வேணுமென்று தேடினாலு முள்ளதல்ல தில்லையே
வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின்
வேணுமென்ற வப்பொருள் விரைந்துகாண லாகுமே என்கின்றார்.
முடிவுரை:
ஆக, இதுகாறும் கூறப்பட்டவற்றிலிருந்து, சிவவாக்கியர் மரபொழுங்கு சார்ந்த பற்பல மூடநம்பிக்கைகளையும், அவரது காலத்திலும் நிலவிவந்த சமய சம்பிரதாயங்களையும், ஆன்மிகத்தின்பேரால் போலித்தனங்கள் உருவாவதையும் கடுமையாக எதிர்த்தவர் என்று தெரியவருகிறது. உண்மையான தமிழ்ச் சித்த சித்தாந்த மரபையொட்டி, உயிரினங்களின் ஒருமையில் நம்பிக்கைகொண்டு, அன்பு, தொண்டு, மெய்யறிவை நாடும் உள்முகநோக்கு, முதலான சீரிய கொள்கைகளைத் தனது தனிச்சிறப்புப் பெற்ற, மனதில் ஆழப்பதியும் பாடல்களால் மக்களுக்கு அறிவூட்டியுள்ளார் சிவவாக்கியர். அவரது பாடல்களிலேயே மிகுதியாகப் பேசப்படுகின்ற “நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சார்த்தியே” முதலான அவருடைய புரட்சிகரமான பாடல்களாலும், கோயில் வழிபாட்டு மரபையும், அர்த்தமற்ற சமயச் சடங்குகளையும் அவர் கடுமையாகக் கண்டனம் செய்வதாலும், மேலோட்டமான பார்வையில் அவர் ஒரு பழமரபு ஒழிப்பாளர் (iconoclast) எனப் பொதுவாகக் கருதப்படினும், மனிதன் தனது உள்ளத்தைச் சுத்திசெய்து, இறைவன் உறையும் கோயிலாக மாற்ற இடைவிடாது முயலவேண்டியதன் இன்றியமையாமையையும் தனது பல பாடல்களிலும் மிகத்தீவிரமாக எடுத்துரைத்திருக்கின்றார் சிவவாக்கியர். தன்னுயிர் போலவே மன்னுயிர் கருதல் எனும் மனிதநேயப் பண்பிற்கும், உண்மையான இறையுணர்வுக்கும் அன்பிற்கும், தொண்டிற்கும் ஈடாக அமைந்த வீண் சமயநெறிகளையும், சாதியின்பேரால் விளைந்த பிரிவினைகளையும் அறவே மதிக்காதவர் அவர்.
ஆன்மாவின் விடுதலையைத் தடைப்படுத்தும் தளைகள் என்பதனால் சிலை வழிபாட்டையும், சமய நியமங்களையும், இறைவனிடம் மன்றாடியிரக்கும் பிரார்த்தனை முறைகளையும் அவர் கண்டனம் செய்தார். “உருக்கிநெஞ்சை யுட்கலந்து வுண்மைகூற வல்லிரேல், சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே” எனத் தனக்குள்ளேயே ஆழமாக இறங்கிச்சென்று தேடுவதே அவர் கண்ட முக்திக்கான வழியாகும். சிவவாக்கியரின் கோட்பாடுகளில் வெளிப்படையான, தனிச்சார்பற்ற தன்மையையும், கபடமற்ற ஒரு முழுநிறைவான தெளிவையும் காணலாம்.
குழப்பம் உருவாக்கும் உட்பிரிவுகள் நிறைந்த சமயச்சார்பு புறக்கணிக்கப்பட வேண்டியது என்பதே சிவவாக்கியரின் முக்கியமான கொள்கை. சமூக அங்கீகாரம் பெற்ற மதங்களுடனும், புரோகித, துறவமைப்பு சம்பிரதாயங்களுடனும், புனிதத்தலங்களுடனும், சமய நெறிச்சாதனங்களுடனும் எந்த ஒத்துணர்வுமற்றவர் சிவவாக்கியர். ஒழுங்குமுறையான ஒரு புதிய அமைப்பையோ, முன்னில்லாத ஒரு சம்பிரதாய வகுப்பையோ கட்டியுருவாக்குவதன்று அவரது நோக்கம். பயனற்ற நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதிலிருந்தும், சமயம் என்ற பேரால் ஆய்வுத்திறம் சீரழிவதிலிருந்தும் மாந்தர்களை விழித்தெழச்செய்வதே அவரது இலக்காகும்.
இவ்வகையிலான சமூக, சமயச் சீர்திருத்தப் புரட்சிக்கான உறுதிமிக்க அறைகூவல் விடுத்ததில் சிவவாக்கியர் நிச்சயமாக வெற்றிகண்டுள்ளாரென்றே கூறவேண்டும். சமய உணர்வில் தோய்ந்துள்ள மூடநம்பிக்கைகளும், சமய வினைமுறை சார்ந்த சடங்குவெறிகளும் சமுதாயத்தில் தலைவிரித்து ஆடும்போதெல்லாம், குருட்டுப் பழக்கவழக்கங்களும், போலிக் கோட்பாடுகளுமான புதைகுழிகளில் சமுதாயம் சறுக்கி விழாமலிருக்கவும், மெய் எது என்று உணர்ந்து, மனிதன் தனது வாழ்நாளில் கடைப்பிடித்துப் பெறவேண்டியது யாது என்பதனைச் சுட்டிக்காட்டவும் சிவவாக்கியத்தின் சீர்திருத்தச் சிந்தனைகளும், புரட்சிகரமான அறிவுரைகளும் எல்லாக் காலங்களிலும் எதிரொலித்துக்கொண்டேயிருக்கும் என்று ஐயமறக் கூறலாம்.
———- உ.இரா.கிரிதரன்.