இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.
தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.
இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.
வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.
“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர்.
“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.
“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்று கேட்டார் இன்னொரு சீடர்.
“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்” என்றார் பதஞ்சலி.
பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.
முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.
“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.
படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.
பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.
Labels: பதஞ்சலி முனிவர்
Powered by web analytics software. |