சமயப்பொது நோக்கு, சாதி வேறுபாடின்மை. மூடப் பழக்க
வழக்கங்களைச் சாடுதல் முதலானவை அவர்தம்
பாடல்களில் காணப்பெறும் சீர்திருத்தங்களாகும்.
கோயிலாவது ஏதுடா? குளங்களாவது ஏதுடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை, இல்லை இல்லையே
(சிவவாக்கியர், 34)
சித்தர்கள் முறையான மத சடங்குகளை மேற்
கொள்ள மாட்டார்கள்.அவர்களுடைய கிரியைகளும்,
மந்திரங்களும் யோக நெறியோடு நிற்பவை.
மத சடங்குகளில் தேவையற்ற சடங்குகளை மட்டுமே
அவர்கள் எதிர்த்தார்கள்....
’’ நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”
...சிவவாக்கியார்.
”ஓசை உள்ள கல்லைநீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்லில் பூவை நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல்லு சொல்லுமே “
.....சிவவாக்கியார்
சித்தர்கள் வெளியில் சென்று கோயில் வழிபாடு
செய்ய விரும்புவதில்லை. புறச் சடங்குகளையும்
அவர்கள் ஏற்பதில்லை. மனக் கோயில் வழிபாடே
அவர்கட்கு முதன்மையானதாகும். யோகமுறை,
மூச்சடக்கிப் பயிற்சி செய்தல் ஆகியவற்றையே
முக்கியமாக கொண்டார்கள்.
மானசீக வழிபாட்டு முறை இவர்களுடையது.
இவர்கள் தங்களுடைய நெறி உயர்ந்தது என்றோ,
மற்றைய நெறிகள் தவிர்க்க படவேண்டியன என்றோ
கூறியதில்லை.சித்தரின் கண்கள் எல்லோரையும்
சமமாகவே பாவிக்கும்.
சித்தர்கள் எல்லா மதங்களிலும் உண்டு.ஆனால்
அவர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவே
விளங்கினார்கள்.